"விஜயின் கருத்தில் உடன்பாடில்லை" - விசிக தலைவர் திருமா ரியாக்சன்!
.
கூ ட்டணி அழுத்தம் காரணமாக அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்கவில்லை என்று விஜய் கூறியுள்ள கருத்தில் உடன்பாடில்லை என்று விசிக தவைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வைத்து 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' எனும் நூல் வெளியிட்டு விழா இன்று மாலை நடைபெற்றது. நூலை தவெக தலைவர் விஜய் வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு மற்றும் அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெம்டும்டேவும் பெற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் விழா மேடையில், அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கூட திருமாவளவன் பங்கேற்க முடியாத அளவிற்கு கூட்டணி கட்சி சார்ந்து எவ்வளவு அழுத்தங்கள் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும் அவருடைய மனது முழுக்க முழுக்க இன்றைக்கு நம்முடையதாக இருக்கும்" என்று விஜய் பேசினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, விசிக தலைவர் தொல் திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் இன்றிரவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சென்னையில் இன்று மாலை நடைபெற்ற 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில், அம்பேத்கர் குறித்து விஜய் பேசியிருப்பது பெருமையாக இருக்கிறது. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா மீது அரசியல் சாயம் பூசுவோர் யார் என கண்டறிய வேண்டும்.
கூட்டணி அழுத்தம் காரணமாக அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்கவில்லை என்று விஜய் கூறியிருக்கும் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. நான் இன்றைய விழாவில் பங்கேற்காதது தனிப்பட்ட முறையில் நான் எடுத்த முடிவு, இதற்கு திமுகவோ, விஜய்யோ காரணமல்ல.
திமுக அழுத்தத்திற்கு பணியும் அளவுக்கு விசிக பலவீனமாக இல்லை என்று கூறினார். மேலும் விஜய்யை கருத்தியல் தலைவர் என்று சொன்னது, கருத்தியல் தலைவர் தான் ஆள வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா பேசியது தொடர்பான கேள்விக்கு, அது அவருடைய தனிப்பட்ட கருத்து. திமுகவிற்கும், கூட்டணிக்கும் எதிராக ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்து ஆதவ் அர்ஜுனாவிடம் விளக்கம் கேட்கப்படும். அவர் அளிக்கும் பதிலை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விசிக திமுக கூட்டணியில் தான் தொடர்கிறது " என திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.