"முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டத்தை அனுமதிக்கமாட்டேன்"..அவையில் சூளுரைத்த முதல்வர்! தீர்மானத்தின் மீது ஈபிஎஸ் எடுத்த முடிவு என்ன?
.
தமிழ்நாட்டில் டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்கக்கூடாது என்று சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது அதிமுக, திமுக இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.மதுரை டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தை முன்னிறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித்தீர்மானம் இன்று கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்தின் மீது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, " சுரங்க அனுமதியை ரத்து செய்யக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அந்த கடிதத்தில் உள்ள முழுமையான விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
இதுதொடர்பான சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தபோது திமுக மற்றும் கூட்டணி கட்சிகளில் முழு அழுத்தம் கொடுத்து தடுத்து நிறுத்தி இருக்கலாம். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. சுரங்க அனுமதியை உறுதி செய்யும்வரை சுமார் 10 மாதங்கள் இந்த அரசு அமைதியாக இருந்துள்ளது.காவிரி நதி நீர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கோரி அதிமுக உறுப்பினர்கள் நாடாளுமன்ற அவையை முடக்கினர். இது முக்கியமான பிரச்சனை. இது மக்களின் வாழ்வாதார பிரச்சனை. நீங்கள் தனித் தீர்மானம் கொண்டு வந்தால் நாங்கள் ஆமாம் போட்டுவிட்டு செல்ல வேண்டுமா?" என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.மேலும் அவர் பேசும்போது, "பத்து மாதம் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? அரசின் அலட்சியத்தால் அந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுரங்கம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டபோது மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தால் இதை தடுத்து நிறுத்தி இருக்கலாம். மக்கள் போராடும் வரை அரசு அமைதியாக தான் இருந்தது" என்று இபிஎஸ் குற்றம்சாட்டினார்.
எடப்பாடி பழனிசாமியின் இக்குற்றச்சாட்டுக்கு தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து பேசியபோது, " திருப்பி திருப்பி தவறான செய்தியை எதிர்க்கட்சித் தலைவர் பதிவு செய்கிறார். அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வரும்போது அனைத்து ஆவணங்களும் இந்த தீர்மானத்தில் வராது. உங்களுக்கு வேண்டுமென்றால் ஒரு தனி தீர்மானம் போட்டு கேட்கலாம். ஏலம் விடும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு மட்டுமே உண்டு. ஒன்றிய அரசால் தேர்வு செய்யப்படும் நிறுவனத்திற்கு சுரங்க குத்தகை அனுமதி வழங்கும் உரிமை மட்டுமே மாநில அரசுக்கு உண்டு என்று ஒன்றிய அரசு சட்ட திருத்தத்தில் கூறியுள்ளது.
தொடர்ந்து எதிர்ப்பை பதிவு செய்த பின்பும் ஒன்றிய அரசு கேட்கவில்லை என்ற காரணத்தால் தான் பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதினார். நாங்கள் எழுதிய கடிதத்தை உங்களுக்கு அனுப்ப வேண்டுமா? என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி்க்கு துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் பேசும்போது, "நீங்கள் முதலமைச்சராக இருந்த போது ஒன்றிய அரசுக்கு பல கடிதங்கள் எழுதி உள்ளீர்கள். அதில் ஒன்றாவது எங்களுக்கு கொடுத்தீர்களா? ஒன்றிய அரசு எதற்கும் பணியாத காரணத்தால் தான் இந்த தனி தீர்மானத்தை கொண்டு வந்துள்ளோம்..திட்டத்தை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்று முதலமைச்சர் பிரகடனமாக அறிவித்துள்ளார். நீங்களும் முதலமைச்சராக இருந்துள்ளீர்கள். இந்தத் திட்டத்தை அனுமதிக்க கூடாது என்பதுதான் தமிழ்நாடு அரசின் முடிவு. முதலமைச்சரின் உறுதியை நம்பி இந்த தீர்மானத்துக்கு நீங்கள் ஆதரவு அளிப்பதாக தெரிவிக்க வேண்டும்." என்று துரைமுருகன் வலியுறுத்தி பேசினார்.அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், " இதுதொடர்பான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டபோது எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் அமைச்சர் மூர்த்தி நேரடியாக சென்று சட்டமன்றத்தில் இதுபோன்று தீர்மானத்தை கொண்டுவர போகிறோம் என்று கூறினார். இதன்படி தான் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறோம். தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறோம். நாடாளுமன்றத்தில் கிடைக்கிற நேரத்தில் எல்லாம் பயன்படுத்தி இதற்கு எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறோம்.எங்களுடைய ஆதரவை கொடுத்தா சட்டம் நிறைவேறியது? " என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், " ஏலம் விட்டாலும் சரி. நிச்சயமாக உறுதியாக இந்த அரசு அதற்கான அனுமதியை தராது. திமுக ஆட்சி எந்த விஷயத்திலும் அலட்சியமாக இருந்தது இல்லை. தீர்மானத்தை ஆதரிக்கிறீர்களா, எதிர்க்கிறீர்களா? என்று எடப்பாடி பழனிசாமியை நோக்கி முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
"எந்த காரணத்தை கொண்டும் நான் முதல்வராக இருக்கும் வரை அந்தத் திட்டத்தை அனுமதிக்கமாட்டேன். டங்ஸ்டன் திட்டம் வந்தால் இந்த பொறுப்பில் நான் இருக்கமாட்டேன். நான் முதலமைச்சராக இருக்கும் வரை ஒன்றிய அரசு இந்த திட்டத்தை கொண்டுவர முடியாது. திட்டத்தை தடுத்தே தீர்வோம்." என்றும் முதல்வர் ஸ்டாலின் ஆணித்தரமாக பேசினார்.
இறுதியாக டங்க்ஸ்டன் சுரங்கத்துக்கு மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்ற அரசினர் தனித் தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்பதாக அவையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.