அவசரகால இராணுவச் சட்டம் அமுல் - தென்கொரியாவிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அவதானம்!
.
தென்கொரியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் அமைதியின்மை தொடர்பில் அவதானித்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தென்கொரிய ஜனாதிபதியினால் அங்கு அவசரகால இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் அங்கு ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.
பின்னர் குறித்த சட்டத்தைத் தளர்த்துவதற்கான யோசனை தென்கொரிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
அதேநேரம், குறித்த சட்டத்தைத் தளர்த்துவதாக தென்கொரிய ஜனாதிபதியும் அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அங்குள்ள பல தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பை அறிவித்துள்ளதுடன் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்தநிலையில் அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தியுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா தெரிவித்தார்.
தேவை ஏற்படுமாயின் அங்குள்ள இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.