கற்கோவளம் இராணுவ முகாமில் இருந்து : படையினர் வெளியேற வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்
.
யாழ். வடமராட்சி, பருத்தித்துறை – கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள.
இராணுவ முகாமிம் இருந்து இராணுவத்தினரை வெளியேறுமாறு, இராணுவத் தலைமையகத்தால் உத்தரவிடப்பட்ட போதிலும், இன்னமும் இராணுவத்தினர் வெளியேறவில்லை.
ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அமைச்சரவை கடந்த மாதம் 18ஆம் திகதி பொறுப்பேற்றிருந்தது.
அமைச்சரவை பொறுப்பேற்று சில மணிநேரங்களில், பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து 14 நாள்களுக்குள் படையினர் வெளியேற வேண்டும் என்ற உத்தரவு இராணுவத் தலைமையகத்தால் பிறப்பிக்கப்பட்டது.
எனினும், 14 நாள்களுக்கு மேலாகியும், இந்த முகாம் இராணுவத்தினரின் பிடியில் இருந்து விடுவிக்கப்படவில்லை.
தொடர்ந்தும் அந்தத் தனியார் காணியும், இராணுவ முகாமும் படையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.
எனவே, வாக்குறுதி வழங்கி மக்களை ஏமாற்றாது, அங்கிருந்து படையினர் உடனடியாக வெளியேற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குறித்த இராணுவ முகாமை அகற்றுமாறும், இராணுவத்தை வெளியேறுமாறும் மக்களும், தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் கடந்த காலங்களில் பல கவனவீர்ப்புப் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.
குறித்த காணியை ஆக்கிரமிக்கும் வகையில் நில அளவீடு செய்வதற்குப் பல தடவைகள் முயற்சிகள் செய்யப்பட்டிருந்த போதிலும் மக்களின் எதிர்ப்பால் அந்தப் பணிகள் தடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.