பிரித்தானிய கடற்படை அதிகாரியின் இறுதி ஆசை: 25 ஆண்டுகளுக்கு பின்னர் திருமலையில் கரைக்கப்பட்ட அஸ்தி
.
இலங்கையின் திருகோணமலையில் தனது அஸ்தியை கரைக்க வேண்டும் என்ற பிரித்தானிய கடற்படை அதிகாரியின் விருப்பம் 25 வருட கால தாமதத்திற்கு பின்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருகோணமலை ஒஸ்டன்பேர்க் முனையத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அரச கடற்படை அதிகாரியான மறைந்த லெப்டினன்ட் நோர்மன் ஸ்கோஃபீல்ட் மற்றும் அவரது மறைந்த துணைவியார் மரியன் ஸ்கோஃபீல்ட் ஆகியோரின் அஸ்தி முழு கடற்படை மரியாதையுடன் கரைக்கப்பட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
1956 மற்றும் 1958 க்கு இடையில், லெப்டினன்ட் நோர்மன் ஸ்கோஃபீல்ட் திருகோணமலையில் உள்ள HMS ஹைஃப்ளையர் கடற்படை தளத்தில் தகவல் தொடர்பு அதிகாரியாக பணியாற்றினார்.
அந்த காலகட்டத்தில் இது உலகின் இரண்டாவது பெரிய கடற்படை தளமாக கருதப்பட்டது.
1999 இல் காலமான அதிகாரியின் இறுதி விருப்பத்திற்கு இணங்க, கடற்படை மரபுகளைப் பின்பற்றி அவரது மற்றும் அவரது மனைவியின் அஸ்தி மரியாதையுடன் கரைக்கப்பட்டுள்ளது.
25 ஆண்டுகளுக்கு முன்னர் காலமான லெப்டினன்ட் நோர்மன் ஸ்கோஃபீல்டின் இறுதி விருப்பத்திற்கு மதிப்பளித்து, அவரது அஸ்தி திருகோணமலை கடலில் கரைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் டேரன் வூட்ஸ், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவிடம் விடுத்த விசேட கோரிக்கையின் பிரகாரம், மறைந்த லெப்டினன்ட் நோர்மன் ஸ்கொபீல்ட் மற்றும் அவரது மனைவியின் அஸ்தியை சிதறடிக்கும் நிகழ்வு ஒஸ்டன்பேர்க் முனையத்தில் கடற்படை கப்பல்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டது.
லெப்டினன்ட் நோர்மன் ஸ்கோஃபீல்ட் ஆகஸ்ட் 1935 இல் ரோயல் கடற்படையில் இணைந்துகொண்டார்.
ரோயல் கடற்படையின் பல்வேறு கப்பல்கள் மற்றும் தளங்களுக்கு நியமிக்கப்பட்ட பின்னர், அவர் 1956 முதல் 1958 வரை திருகோணமலையில் உள்ள HMS ஹைஃப்ளையர் கடற்படை தளத்தில் துறைமுக சமிக்ஞை அதிகாரியாக பணியாற்றினார்.
அவர் 1957 இல் இலங்கை அரசாங்கத்திற்கு மாற்றப்படும் வரை திருகோணமலை கடற்படைத் தளத்தில் பணியாற்றினார்.
அதிகாரியின் இறுதி விருப்பத்திற்கு மதிப்பளித்து, அவரது மற்றும் அவரது மனைவியின் அஸ்தி, திருகோணமலை துறைமுக ஒஸ்டன்பேர்க் முனையத்தில் கடலில் கரைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் டேரன் வூட்ஸ் மற்றும் மறைந்த அதிகாரியின் உறவினர்கள் இருவர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் சம்பிரதாய நிகழ்வுகள் கடற்படை கப்பல்துறையின் கட்டளை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் மாலுமிகளால் மேற்கொள்ளப்பட்டது.