Breaking News
கடந்த இரண்டு நாட்களாக பிரெஞ்சு நிலத்தின் வானம் வேடிக்கை காட்டியபடி உள்ளது.
வானச்சீலைகளின் நடனம் அரோர் ஒளி என்று (les aurore) அழைக்கப்படுகிறது.
அரோர் ஒளி நடனம்.
கடந்த இரண்டு நாட்களாக பிரெஞ்சு நிலத்தின் வானம் வேடிக்கை காட்டியபடி உள்ளது. 10.05.2024 இணையச் செய்தியை அனுப்பிய நண்பர் பயந்துபோய் இருந்தார். இது ஆபத்தான சகுனம் என்றார். வானம் ரோஜா பூ நிறத்தில் இரவுகளில் தெரிந்தால் எப்படி இருக்கும் ? இயற்கையை மனுசன் கொல்லும்போது வரும் குருதி என்றார். அவரை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் இந்த வானச்சீலைகளின் நடனம் அரோர் ஒளி என்று (les aurore) அழைக்கப்படுகிறது. வழமையாக துருவப் பகுதி நாடுகளில் பச்சை, ஊதா, சிகப்பு. மஞ்சள் ஒளியாக இவை வெளிப்படுவதுதான். கடந்த இரண்டு நாட்களாக குங்குமம் மற்றும் ரோஜா நிறங்களில் இரவு வானத்தில் நடனமிடக்காரணம் சூரியப் புயல் பூமியை நோக்கி பல நூறு கி.மிவேகத்தில் வீசுவதாகும்.
இசைப்புயலை அறிந்த நமக்கு சூரியப் புயல் புதிதாக இருக்கலாம். தமிழில் யாருக்காவது அந்த பெயரை இனிவருங்காலத்தில் வைக்கலாம். அப்படி பட்டப்பெயர்களில் பட்டம் விட்டு பழகிவிட்டோம். சூரியன் ஒரு நெருப்பு நடனக்காரன். அவன் ஆடுகிற ஆட்டத்தில் சில அசைவுகளின் சுவாலைகள் நம் பூமியின் பகுதிக்கு வந்துவிடுகிறது. அல்லது பூமி அவன் நாட்டியத்தை எட்டிப்பார்த்துவிடுகிறது. அதனால் வரும் அனல் பூமியின் காந்தப்புலன்களை சந்திக்கிறபோது இந்த ஒளி நடனம் நடக்கிறது. சூரியனின் தீ நடனத்தை பார்த்து பூமியின் காற்று மண்டலம் துள்ளிக்குதிக்கிறது.
இப்போது வந்திருக்கிற சூரிப்புயல்போல் மனிதர்கள் பதிந்து வைத்திருக்கும் வரலாற்றில் 1859 இல் பல் மடங்கு பெரிதான சூரியப் புயல் ஏற்பட்டதாகவும் வானத்திரைச்சீலை நடனம் நிகழ்ந்ததாகவும் அப்போது தந்தி வலைப்பின்னல் பாதிக்கப்பட்டதாகவும் பதிவுகள் உண்டு. இரவு ஒரு மணிக்கு பத்திரிகைபடிக்கக்கூடியதாக இருந்ததை அப்போது வெளியான பத்திரிகைகள் பதிவு செய்துள்ளன. இந்த ஒளிக்கு 1621 ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டைச் சேர்ந்த தத்துவஞானியும், அறிவியலாளரும், வானியல் வல்லுநருமான பியர் கசண்டி (Pierre Gassendi) என்பவர் aurora என்ற ரோமானியப் பெண் தெய்வத்தின் பெயரைக் கொண்டும், வடபருவக்காற்றை கிரேக்க மொழியில் குறிக்கும் Boreas என்ற சொல்லைக்கொண்டும் வழங்கினார். நோர்வே நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளில் சிலர் இந்த ஒளி பற்றி தினமும் பதிவுசெய்தும் ஆராய்ந்தும் வருகின்றனர். இந்த ஒளி தோன்றும் காலங்களில் வளிமண்டலத்தில் மின்சாரம் நிறைகிறது என்பது அவர்களின் முடிபு. கிரிஸ்டியான் பிர்க்கலாண்ட் (Kristian Birkeland) எனப்படும் ஒரு அறிவியலாளர் துருவ ஒளி மின்சாரத்தோடு வைத்திருக்கும் உறவை அறிவித்த அறிஞர்.
அண்மைக்காலத்தில் அணு ஆயுதப் போர் பற்றி ‘பெரிய’ தலைவர்கள் பேச ஆரம்பித்திருக்கும் நிலையில் நண்பர் அச்சப்பட்டதுபோல் அதிர்ச்சி நடக்கலாம். அத்தனை மோசமாக இந்த சின்ன உயிர் ஆடுகிறது. ஆனால் சூரியன் தனது ஒரு மயிரை வீசினாலே தாங்க மாட்டாய் என்று அறிவிக்கிறது. இன்றும் பிரான்சில் தெரியும் வானத்தில் அரோரா நடனம் நடக்கலாம். அதற்கு இரவில் யாராவது வானத்தைப் பார்க்கவேண்டும். அப்படி வானத்தை கடந்த இரண்டு இரவில் பார்த்தவர்கள் எடுத்த புகைப்படங்கள் கீழே.