கொக்குத்தொடுவாய் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடையதா?
நீர் குழாய்களை அமைப்பதற்காக நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த போது, தற்செயலாக மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
வன்னி புதைகுழியின் எலும்புகள் காணாமற்போனவர்களுடையதா?: ஓ.எம்.பி கூறுவது என்ன?
கொக்குத்தொடுவாய் பாரிய வெகுஜன புதைகுழியின் நான்காம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட தினத்திற்கு மறுநாள் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த பிரதேச ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“இது வரை முறைப்பாடு செய்யப்பட்டுள்ள காணாமல் போனவர்களுக்கும், கண்டுபிடிக்கப்பட்ட சடலங்களுக்கும் இடையில் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை கண்டறிவதற்கு எதிர்பார்க்கின்றோம்.
தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவ, சில மாதங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு நீதிமன்றில் கையளித்த 35 பக்க இடைக்கால அறிக்கையில், கொக்குத்தொடுவாய் பாரிய புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட சடலங்கள் 1994-1996ற்கு இடைப்பட்ட காலத்தில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் புதைக்கப்பட்டவை என அனுமானித்திருந்தார்.
முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவவின் பங்களிப்புடன் 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான 21 நாட்களில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் பின்னர் எடுக்கப்பட்ட 40 ஆண் மற்றும் பெண் எலும்புக்கூடுகளின் பிரதான அனுமானத்தின் அடிப்படையில், எலும்புக்கூடுகள்போராளிகளுடையது எனவும், அவை இரகசியமாக புதைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் முன்னர் துப்பாக்கிச் சண்டையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது எனவும், இந்த போராளிகள் 1994ஆம் ஆண்டுக்கு முன்னர் அல்லது 1996ஆம் ஆண்டுக்கு பின்னர் புதைக்கப்படவில்லை எனவும் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“அண்மையில் நாங்கள் ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறையை நிறுவியுள்ளதாக காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இந்த தரத்திலான செயல்பாட்டு நடைமுறையை நாங்கள் பயன்படுத்தும் முதல் வெகுஜன புதைகுழி இதுதான். மேலும், சுமார் 12 தொழில்முறை பங்குதாரர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். இந்த செயல்முறையானது இலங்கையின் அகழ்வு செயற்பாட்டு நடைமுறைகளில் இலங்கை நிபுணர்களால் சர்வதேச தரங்களைப் பயன்படுத்துவது தொடர்பான ஒரு தனித்துவமான மைல்கல்லாக இருக்கும்.”
“நிதியுதவிக்காக நீதி அமைச்சின் ஊடாக இதில் ஈடுபட்டுள்ளோம். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினூடாக இதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதற்காக மாவட்டச் செயலாளர் சிறப்பாக செயற்பட்டு வருகின்றார்.
இதற்கு நீதி அமைச்சின் செயலாளரும், நீதி அமைச்சரும் பொது நிதி ஒதுக்கீட்டின் ஊடாக பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். எனினும், இந்த அகழ்வுகள் மிகவும் சுயாதீனமான முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.” இராணுவத்திடமும் தகவல் கோரப்படும் என்றார்.
2023 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில், கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில், நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய்களை அமைப்பதற்காக நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த போது, தற்செயலாக மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.