கணவர் இறந்து 5 வருடங்கள்; ஓய்வூதியம் வழங்க மறுக்கும் அரசு! சாப்பாட்டுக்கு வழியில்லை; உயிர்மாய்ப்பதே வழி என கதறும் மனைவி
கொழும்பு மற்றும் பிரதேச சபை ஊடாக முயன்றும் தமக்கான தீர்வு கிடைக்கவில்லை!

தனது கணவர் இறந்து ஐந்து வருடங்கள் கடந்தும் இதுவரை ஓய்வூதியத்தை பெற முடியாத நிலையில் அவரின் மனைவி அரசிடம் அவசர கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
ரயில்வே திணைக்களத்தில் பணியாற்றிய மன்னார் கீரி பகுதியைச் சேர்ந்த கந்தையா செல்வநாயகம் என்பவரே கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது மனைவி அவரின் ஓய்வூதியத்தைப் பெற முயன்றுவரும் நிலையில் இன்றுவரை அது கிடைக்காததால் தாம் சாப்பாட்டுக்கூட வழியில்லாத நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியத்திற்கான ஆவணங்கள் அனுராதபுரத்தில் கையளித்தும் கடிதம் வரும் என கூறுகின்றார்களே தவிர இன்னும் இதற்கான தீர்வு வரவில்லை.
அத்தோடு கொழும்பு மற்றும் பிரதேச சபை ஊடாக முயன்றும் தமக்கான தீர்வு கிடைக்கவில்லை என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இந்த ஓய்வூதியம் இனியும் கிடைக்காத பட்சத்தில் தான் தனது பிள்ளைகளுடன் உயிர்மாய்ப்பதை தவிர வேறு வழியில்லை எனவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு தனக்கு அஸ்வெசுவ கொடுப்பனவோ அல்லது வேறு எந்த நிவாரணமோ கிடைப்பதில்லை எனவும் வீட்டு திட்டத்திற்கு ஒரு லட்சம் ரூபா தந்த நிலையில் மீதிப் பணம் தரவில்லை எனவும் தனது நகைகளை அடைமானம் வைத்தே வீட்டை கட்டி முடித்தாகவும் அவர் தெரிவித்தார்.
எதற்காக இந்த அரசாங்கம் என்னை அலைக்கழிக்கிறது நாங்கள் மண்ணையா உண்பது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே இப் பிரச்சினைக்கு ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.