அயலகத் தமிழக தின விழாவில், அயலகத் தமிழர்களுக்காக ரூ. 10 கோடி
.
அயலகத் தமிழக தின விழாவில், அயலகத் தமிழர்களுக்காக ரூ. 10 கோடியில் புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 12) அறிவித்தார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் தின விழாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
இரண்டாவது நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு அயலகத் தமிழர்களுக்கான விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.அவர் “நான் முதல்வர் ஆன பிறகு , சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றபோது, தாயகத்தில் வாழுகிற உணர்வை அங்குள்ள தமிழர்கள் எனக்கு ஏற்படுத்தினார்கள். அமெரிக்க பயணத்தில் அயலகத் தமிழர்கள் எனக்கு கொடுத்த வரவேற்பையும், பாசத்தையும் மறக்க முடியாது.
எந்த நாட்டுக்கு சென்றாலும், தமிழ் என்ற உணர்வால் நாம் ஒன்றாகிறோம். இங்கு கூடியுள்ள பலரின் முன்னோர்கள் பல காரணங்களுக்காக புவியின் பல்வேறு நாட்டுக்கு சென்றிருப்பார்கள். அயலகத் தமிழர்களால் பாலைகள் சோலைகளாகின. நாடுகள் வளம் பெற்றன. நீங்களும் தமிழகத்தை மறக்கவில்லை. தமிழகமும் உங்களை மறக்கவில்லை. இதுதான் தமிழினத்தின் பாசம்.
உலகை உலுக்கும் உக்ரைன் போராக இருந்தாலும் சரி. மனதை உருக்கும் இஸ்ரேல் போராக இருந்தாலும் சரி, ஆபத்தில் இருக்கும் தமிழர்களை தேடிச் சென்று ஆதரவுக் கரம் நீட்டி வருகிறோம்.
வேர்களைத் தேடி திட்டம் எனது அரசியல் வாழ்க்கையின் மைல்கல்லாக உள்ளது. வேர்களைத் தேடி திட்டம் என் மனதுக்கு மிக நெருக்கமான திட்டம். இந்த திட்டத்தின் மூலம் புலம்பெயர் தமிழர்களை அடையாளம் கண்டுபிடித்து, அவர்கள் உறவுகள் இருக்கும் கிராமங்களை தேடி சென்று அதை கண்டடைவது தான் வேர்களை தேடி திட்டத்தின் நோக்கம்.
இந்த திட்டத்தின் மூலம் 157 இளைஞர்கள் தாயகம் திரும்பி இருக்கின்றனர். அதில் 38 இளைஞர்கள் பயணத்தின் இறுதிநாளான இன்று அரங்கத்தில் இருக்கின்றனர்.
தமிழும், தமிழ் கலைகளும் உலகம் முழுவதும் சென்றடைய வேண்டும். நாட்டுப்புறக் கலைகள், தமிழ் பண்ணிசைகளை வெளிநாடு வாழ் தமிழர்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நேரடியாக பயிற்றுவிக்கும் வகையில், 100 ஆசிரியர்கள், தமிழ்க் கலைஞர்கள் தமிழர் வாழும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். அவர்கள் தமிழ் மொழி, கலைகள் குறித்து 2 ஆண்டுகளுக்கு நேரடி பயிற்சி அளிப்பர். இதற்கான அனைத்து செலவுகளையும் தமிழக அரசே ஏற்கும். இந்த திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
அதற்கு பதில் வேண்டுகோளாக நான் வைப்பது ஒன்று தான். பூமிப்பந்தில் நீங்கள் எங்கு இருந்தாலும் உங்கள் அடையாளத்தை விட்டுவிடாதீர்கள். தமிழையும், தமிழ் உணர்வையும், தமிழ்நாட்டையும் மறந்து விடாதீர்கள்” என ஸ்டாலின் பேசினார்.
அயலகத் தமிழர்களுக்கு விழா எடுக்கும் தமிழ்நாட்டு அரசு அயல்நாட்டில் இருந்து 30 வருடங்களுக்கு மேலாக, அகதிகளாக தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் அடிப்படை வசதிகள் ஏதுமற்ற ஈழத் தமிழர்களுக்கு எந்த விதமான முன்னேற்றப் பாதையும் காண்பிக்காதது ஏன்?