யுக்ரேன் போர்: அமெரிக்கா துணையின்றி ஐரோப்பாவால் ரஷ்ய ராணுவத்தை சமாளிக்க முடியுமா?
யுக்ரேனுக்கு நேட்டோ படையை அனுப்புவதை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

டொனால்ட் டிரம்ப் தனது சொந்த அதிகாரிகள் சிலரை விடவும், பிரிட்டனின் ஓய்வுபெற்ற உயர்மட்ட ராணுவ அதிகாரிகளை விடவும், பிரிட்டனின் ஆயுதப் படைகளின் திறன்களில் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகத் தோன்றுகிறது.
யுக்ரேனுக்கு அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்குமா என்று பிரிட்டன் பிரதமருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த போது டிரம்பிடம் கேட்கப்பட்டது.
"பிரிட்டனிடம் நம்ப முடியாத அளவுக்கு வீரர்கள் மற்றும் ராணுவ பலம் உள்ளது. அவர்களால் தங்களைக் கவனித்துக் கொள்ள முடியும்," என்று டிரம்ப் அக்கேள்விக்குப் பதிலளித்தார்.
ஆனால், பிரிட்டன் ராணுவத்தால் ரஷ்யாவை எதிர்கொள்ள முடியுமா என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தெளிவாகப் பதிலளிக்கவில்லை.
-
அமெரிக்கா - யுக்ரேன் பிரச்னை: ரஷ்யாவில் என்ன பேசப்படுகிறது? புதின் மௌனம் காப்பது ஏன்?
-
டிரம்ப் - ஸெலன்ஸ்கி வார்த்தைப் போர் குறித்து உலக தலைவர்கள் சொல்வது என்ன?
பொதுவெளியில், பிரிட்டனின் ஆயுதப் படைகளின் தொழில் முறையையும், திறன்களையும் மூத்த அமெரிக்க ராணுவ அதிகாரிகள் பாராட்டுகிறார்கள்.
ஆனால் தனிப்பட்ட முறையில், வீரர்களைக் குறைத்துள்ளதால், பிரிட்டன் ராணுவம் மிகவும் சிறிதாகி விட்டது என்று விமர்சிக்கின்றனர். தற்போது, பிரிட்டன் ராணுவத்தில் சுமார் 70,000 முழுநேர வீரர்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
புதினின் ரகசிய ஆயுதம்: ஐரோப்பிய நாடுகளுக்கு கடலுக்கு அடியில் மறைந்துள்ள ஆபத்து1 மார்ச் 2025
-
டிரம்ப் - ஜெலன்ஸ்கி மோதல் 'நேட்டோ' ராணுவ கூட்டணிக்கான நெருக்கடியின் அறிகுறியா? ஓர் அலசல்1 மார்ச் 2025
பிரிட்டன் ராணுவத்தின் பலம்
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,பயிற்சியில் ஈடுபட்டுள்ள பிரிட்டன் ராணுவ வீரர்கள்
பிரிட்டன் ராணுவத்தை 'மிகச் சிறியது' என்று ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள பிரிட்டன் சென்ற போது, ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி விவரித்தார்.
சர்வதேச மூலோபாய ஆய்வுக் கழகத்தின்படி, ரஷ்யாவின் ராணுவச் செலவு இப்போது ஐரோப்பாவின் மொத்த பாதுகாப்புச் செலவினத்தை விட அதிகமாக உள்ளது.
ரஷ்யாவின் ராணுவச் செலவு 41 சதவீதம் அதிகரித்து இப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.7 சதவீதத்துக்குச் சமமாக உள்ளது. இதற்கு நேர்மாறாக, 2027க்குள் பிரிட்டன் 2.5 சதவீதம் மட்டுமே செலவழிக்கும்.
போர் நிறுத்தத்துக்காக யுக்ரேனுக்கு உதவ அமெரிக்க வீரர்களை அனுப்புவது குறித்து அதிபர் டிரம்ப் சிந்திக்கவில்லை என்ற யதார்த்தத்தை அவரது கருத்துகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
கனிமங்களை பெறுவது போன்ற பொருளாதார காரணங்களுக்கு மட்டுமே அமெரிக்கா யுக்ரேனுடன் தொடர்புகொள்ள விரும்புகிறது.
ரஷ்யா மீண்டும் தாக்குவதற்கு அதுவே ஒரு தடையாக இருக்கலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
ஆனால் அவரது சொந்த அரசாங்கத்தில் கூட, ரஷ்யாவைத் தடுத்து நிறுத்த யுக்ரேனுக்கு மற்ற நாடுகளின் ராணுவ பலமும் தேவை என்ற கருத்து இருக்கவே செய்கிறது.
இப்போது கேள்வி என்னவென்றால், ஐரோப்பாவுக்கு விருப்பம் உள்ளதா என்பது மட்டுமல்ல, ரஷ்யாவை எதிர்த்து போரிட ஐரோப்பாவிடம் போதுமான வீரர்கள் மற்றும் ஆயுதங்கள் உள்ளதா? என்பதும் தான்.
அதற்கான விரைவான பதில்: இல்லை
அதனால் தான், உலகின் மிக சக்தி வாய்ந்த அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்பு உத்தரவாதம் அவசியம் என்று பிரிட்டன் பிரதமர் சர் ஸ்டார்மர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
-
டிரம்ப் - ஸெலன்ஸ்கி சந்திப்பு: யுக்ரேன் அதிபர் மீதான விமர்சனத்தில் இருந்து பின்வாங்கிய டிரம்ப்28 பிப்ரவரி 2025
-
கோல்டன் கார்டு விசா: கிரீன் கார்டில் இருந்து வேறுபட்டதா? டிரம்ப் முன்மொழிவது என்ன?28 பிப்ரவரி 2025
'யுக்ரேனுக்காக 30,000 வீரர்களைக் கொண்ட படை'
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,விண்வெளி கண்காணிப்பு அல்லது உளவுத் தகவல்கள் ஆகியவற்றை அமெரிக்காவுக்குச் சமமாக ஐரோப்பாவால் யுக்ரேனுக்கு வழங்க முடியாது
பனிப்போர் முடிவுக்கு வந்த பிறகு, ஐரோப்பாவில் தனது ஆயுதப்படைகளை குறைத்த நாடு பிரிட்டன் மட்டுமல்ல. ஆனால், தற்போது நிலைமை மாறி வருகிறது. ஐரோப்பாவின் பல நாடுகளும் பாதுகாப்புக்கான செலவை அதிகரித்து வருகின்றன.
ஆனால் யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி கோரும் அளவுக்கு 1-2 லட்சம் சர்வதேசப் படை வீரர்களை ஐரோப்பாவால் மட்டுமே வழங்க முடியாது.
ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்துவதைத் தடுக்க கூடுதல் படைகள் தேவை என்று ஸெலன்ஸ்கி கருதுகிறார்.
அதற்கு பதிலாக, மேற்கத்திய அதிகாரிகள் 30,000 வீரர்களைக் கொண்ட ஒரு படையைப் பற்றி யோசிப்பதாகக் கூறியுள்ளனர். ஐரோப்பிய ஜெட் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் யுக்ரேனின் வான்வெளி மற்றும் கடல்வழிகளை கண்காணிக்க உதவும்.
யுக்ரேனின் நகரங்கள், துறைமுகங்கள் மற்றும் அணுமின் நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் 'உறுதியான பாதுகாப்பு' வழங்குவதில் அந்த படைகள் கவனம் செலுத்தும்.
அவை கிழக்கு யுக்ரேனில் போர் முனைக்கு அருகில் எந்த இடத்திலும் நிறுத்தப்படாது.
ஐரோப்பிய போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் யுக்ரேனின் வான்வெளி மற்றும் கப்பல் வழிகளை கண்காணிக்கும்.
ஆனால் இது போதாது என்பதையும் மேற்கத்திய அதிகாரிகள் ஒப்புக்கொள்கிறார்கள்.
அமெரிக்கா அளிக்கும் பாதுகாப்பு உத்தரவாதம் மட்டுமே யுக்ரேனில் நிறுத்தப்படும் எந்தவொரு படைகளையும் ரஷ்யா தாக்காது என்பதை உறுதி செய்யும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
குறைந்தபட்சம், "கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளால்" யுக்ரேனில் ஐரோப்பிய படைகளின் செயல்பாடுகளை அமெரிக்கா மேற்பார்வையிடலாம். போலந்து மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளில் உள்ள விமானப்படைத் தளங்களில் அமெரிக்க போர் விமானங்கள் எந்த சவாலையும் சந்திக்கும் வகையில் தயார் நிலையில் இருக்கச் செய்யலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
ஏனென்றால், "விண்வெளி கண்காணிப்பு" அல்லது "உளவுத் தகவல் சேகரிப்பு" ஆகியவற்றை அமெரிக்காவுக்கு நிகராக ஐரோப்பாவால் வழங்க முடியாது.
யுக்ரேனுக்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்குவதற்கும் அமெரிக்கா ஒப்புக்கொள்ளலாம்.
யுக்ரேனுக்கு வழங்கப்பட்ட மேற்கத்திய ஆயுதங்களின் விகிதத்தில் ஐரோப்பா சமீபத்தில் அமெரிக்காவை முந்தியுள்ளது.
மறுபுறம், நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் போன்ற "மிகச் சிறந்த ஆயுதங்களை" அமெரிக்கா வழங்கியுள்ளதாக ஒரு மேற்கத்திய ஆதாரம் தெரிவித்துள்ளது.
-
ஆப்கானிஸ்தான்: 90,000 கேமராக்கள் மூலம் காபூல் மக்களைக் கண்காணிக்கும் தாலிபன்கள்28 பிப்ரவரி 2025
-
சிரியா: பஷர்-அல்-அசத் வீழ்ச்சிக்கு பிறகும் குர்து மக்கள் தொடர்ந்து போரிடுவது ஏன்?27 பிப்ரவரி 2025
பட மூலாதாரம்,REUTERS
படக்குறிப்பு,டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த இன்னும் வாய்ப்பு இருக்கலாம் என்று ஸ்டார்மர் நம்புகிறார்
ஐரோப்பிய நாடுகளும் பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இல்லை. யுக்ரேனுக்கு மேற்கத்திய நாடுகளின் ஆயுத சப்ளை என்பது அமெரிக்க தளவாடங்களைச் சார்ந்தே உள்ளது.
2011ஆம் ஆண்டு லிபியா மீதான நேட்டோவின் விமானப்படைத் தாக்குதல் நடவடிக்கையும் சில குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
ஐரோப்பிய நாடுகள் முன்னின்று தாக்குதலை நடத்தியதாக கூறப்பட்டாலும், அவை அமெரிக்காவின் ஆதரவையே நம்பியிருந்தன. குறிப்பாக, அமெரிக்காவின் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் அமெரிக்க இலக்குக் கண்காணிப்பு அமைப்புகளின் உதவியை, கூட்டணி நாடுகள் பெரிதும் சார்ந்திருந்தன.
ஆனால் சர் ஸ்டார்மர் அமெரிக்காவிடம் எந்தவொரு பாதுகாப்பு உத்தரவாதங்களையும் பெறாமலேயே வாஷிங்டனில் இருந்து புறப்பட்டதாக தெரிகிறது.
நேட்டோவின் பிரிவு 5-ஐ செயல்படுத்துவதில் அமெரிக்காவின் உறுதிப்பாட்டை டிரம்ப் மீண்டும் உறுதிப்படுத்தியதே போதுமானது என்று பிபிசியிடம் பேசிய பிரிட்டிஷ் சுகாதாரத்துறை அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் தெரிவித்தார். நேட்டோ பிரிவு 5-ன் படி, அந்த கூட்டணியில் உள்ள ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல் ஒட்டுமொத்த கூட்டணியின் மீதான தாக்குதலாக கருதப்படும்.
-
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கும் கடன் கொடுத்த குஜராத்தி பணக்காரர் வீர்ஜி வோரா யார்?5 மணி நேரங்களுக்கு முன்னர்
-
கலிலியோவின் கைவிரல் இப்போது எங்கே வைக்கப்பட்டுள்ளது? - 5 அரிய தகவல்கள்26 பிப்ரவரி 2025
ரஷ்ய ராணுவத்தை பிரிட்டனால் எதிர்கொள்ள முடியுமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,ரஷ்ய அதிபர் புதின்
ஆனால், யுக்ரேனுக்கு அனுப்பப்படும் எந்தவொரு சர்வதேச படையும் நேட்டோ படையாகவோ அல்லது அதன் உடன்படிக்கைக்கு உட்பட்டதாகவோ இருக்காது என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் ஏற்கனவே கூறியிருந்தார். இதனால், நேட்டோ பாணியில் பாதுகாப்பு உத்தரவாதமும் இல்லை.
ஐரோப்பாவின் நம்பிக்கை மீண்டும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றது.
இந்த வார இறுதியில் தலைவர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ள பிரிட்டன் பிரதமர், யுக்ரேனுக்கு படைகளை அனுப்புவதற்கு மற்ற நாடுகளை ஒப்புக் கொள்ளச் செய்ய டொனால்ட் டிரம்பின் இனிமையான வார்த்தைகள் மட்டுமே போதுமா என்பதை தெரிந்துகொள்வார்.
பிரிட்டன் தவிர, பிரான்ஸ் மட்டுமே தனது படைகளை அனுப்பத் தயாராக உள்ள ஐரோப்பாவின் மற்றொரு வலிமையான சக்தியாக உள்ளது. மற்ற சில வடக்கு ஐரோப்பிய நாடுகளான டென்மார்க், ஸ்வீடன் மற்றும் பால்டிக் நாடுகள் அதை பரிசீலிக்க தயாராக இருந்தாலும், அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதம் அவசியம் என்று அவை நினைக்கின்றன.
ஸ்பெயின், இத்தாலி மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இந்த யோசனையை எதிர்க்கின்றன.
ஐரோப்பிய படைகளுக்கு சக்தி வாய்ந்த பின்புலமாக அமெரிக்கா இருக்கலாம் என்றும் அதற்கான பேச்சுவார்த்தைக்கு இன்னும் இடமிருப்பதாகவும் பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர் நம்பலாம்.
ஆனால் ரஷ்ய ராணுவத்தை பிரிட்டனால் எதிர்கொள்ள முடியுமா? என்று டொனால்ட் டிரம்பிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, யுக்ரேன் போரால் ரஷ்ய படைகள் பலவீனமடைந்திருந்தாலும் கூட, இல்லை என்பதே பதில்.
- பிபிசி.