குழப்பங்களுக்கு காரணம் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளே – இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் குற்றச்சாட்டு
.
உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் குழப்பமான நிலைமைகள் ஏற்படுவதற்கு அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளின் கூட்டணியே அடிப்படையில் காரணமாக உள்ளது என்று இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ட்ஜகார்யன் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ரஷ்ய இல்லத்தில் ரஷ்யாவின் ரி.ஏ.எஸ்.எஸ். செய்தி முகவரகத்தின் 120ஆவது ஆண்டு பூர்த்தியையும் சர்வதேச ஊடகவியலாளர்கள் தினத்தை முன்னிட்டும் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததோடு பல்வேறு விடயங்கள் சம்பந்தமாக தனது நிலைப்பாடுகளையும் வெளிப்படுத்தினார். அவை வருமாறு,
ரஷ்யா – உக்ரேன் போர்
ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையில் போர் தொடர்ந்துகொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் கூறியதைப்போன்று இது வெறுமனே ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான போர் அல்ல. உக்ரேனின் பெயரால் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் கூட்டணியுடன் நடைபெறுகின்ற போராகும்.
இதற்காக மேற்குலக கூட்டு உக்ரேனின் முன்னாள் ஜனாதிபதி விளோடிமிர் ஜெலென்ஸ்கியை பயன்படுத்துகிறது. ஜெலென்ஸ்கியை உக்ரேனின் முன்னாள் ஜனாதிபதி என்று அழைப்பதற்கு காரணம் உள்ளது.
2019ஆம் ஆண்டு மே 20ஆம் திகதி அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார். கடந்த மே மாதத்துடன் அவரது பதவிக்காலம் நிறைவுக்கு வந்துவிட்டது. எனினும் அவர் தேர்தல் நடத்தாது பதவியில் உள்ளார். ஜனநாயகம் பற்றி பேசும் அவர் தற்போது மேற்குலகின் கைம்பொம்மையாக அதிகாரத்தை தக்கவைப்பதற்காக போரை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்.
ரஷ்யாவைப் பொறுத்தவரையில் நாம் தொடர்ச்சியாக எமது படை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். மேற்குலகின் கூட்டுப்படைகள் உட்பட எமது இறைமையுள்ள எல்லைகளைப் பாதுகாப்பதற்காக நாம் தொடர்ச்சியாக போராடவேண்டியுள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையில் போரை நிறுத்துவதற்காக ஜேர்மன், பிரான்ஸ் தலைமையில் சமாதான ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை கணிசமான முன்னேற்றங்களைக் கண்டிருந்த சமயத்தில் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ‘சமாதான ஒப்பந்தம் தேவையில்லை. போரை தொடர்ந்தும் முன்னெடுப்போம்’ என்று அறிவித்திருந்தார்.
அத்துடன் சமாதான ஒப்பந்த காலப்பகுதியில் உக்ரேனிய படைகளை பலப்படுத்தும் வகையிலான ஆயுதங்களும் வழங்கப்பட்டு தீவிர படை நடவடிக்கைகளுக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
அதேநேரம், மேற்குலக கூட்டானது தற்போது ரஷ்யாவின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ரஷ்யாவை பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
உதாரணமொன்றைக் குறிப்பிட வேண்டியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கைக்கு உதவித்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தயாரான போது லத்வியா நாடு அதற்கு எதிர்ப்பு வெளியிட்டது. காரணம் லத்வியா அமெரிக்காவுடன் நெருக்கமாகச் செயற்படுகின்றது.
லத்வியா, இலங்கை மீது நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்காக பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இலங்கை மக்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதில் ரஷ்யா உறுதியாக இருந்தது.
இவ்வாறு அமெரிக்கா தலைமையிலான மேற்குல நாடுகள் தான் ஏனைய நாடுகளில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கும், அவை தொடருவதற்கும் காரணமாக இருக்கின்றன.
இவ்வாறான நிலையில் தற்போது சமானதப் பேச்சக்கள் முன்னெடுக்கப்படவில்லை. ரஷ்யா அதனை விரும்பவும் இல்லை. படை நடவடிக்கைளை தீவிரமாக முன்னெடுத்து அதன் ஊடாக தீர்வினைக் காண்பதற்கே தீர்மானித்துள்ளது.
தொடர்ந்தும், நகைச்சுவை நடிகரான உக்ரேனின் முன்னாள் ஜனாதிபதியான ஜெலென்ஸ்கியின் முட்டாள் தனமான செயற்பாடுகளை அனுமதிக்கப்போவதில்லை என்பதில் ரஷ்யா உறுதியாக இருக்கின்றது.
மக்கள் புரட்சிகளின் பின்னால் சி.ஐ.ஏ
மக்கள் புரட்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற விடயமாக காணப்படுகின்றது. இறுதியாக பங்களாதேஷில் நடைபெற்றிருக்கின்றது.
மக்கள் புரட்சிகள் உள்நாட்டு அரசாங்கங்களுக்கு எதிராக நடைபெற்றாலும் அவற்றுக்கான காரணங்களை ஆராய்கின்றபோது மேற்குலகின் தலையீடுகள் காணப்படுகின்றன.
குறிப்பாக, சி.ஐ.ஏ.போன்ற அமைப்புக்கள் நாடுகளின் உள்நாட்டு விடயங்களில் தலையீடுகளைச் செய்வதன் காரணமாக புரட்சிகள் தொடரும் நிலைமையே உள்ளது. இது ஆசிய பிராந்தயங்களில் தற்போது தொடர்ச்சியாக வருகின்ற அதேநேரம் ஏனைய பகுதிகளில் தீவிரமான நிலைமையை எட்டியுள்ளது.
பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளதா?
உக்ரேன் படைகள் குர்ஸ்க் ஒப்லாஸ்ட் பகுதிக்குள் பிரவேசித்துள்ளதாக மேற்குலக ஊடகங்கள் கடுமையான பிரசாரங்களை மேற்கொள்கின்றன.
உண்மையான நிலைமைகள் அவ்வாறில்லை. ரஷ்ய படைகளைப் பொறுத்தவரையில் உக்ரேனிய படைகளையும் அதனுடன் இணைந்துள்ள கூட்டுப்படைகளையும் வெகு விரைவில் வெளியேற்றுவதற்கு தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
ரஷ்யப் படைகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போர்க்களத்திலிருந்து வெளியேறப்போவதில்லை. உக்ரேன் ஆட்புல எல்லையில் இருந்து மேற்குலகின் படைகள் வெளியேற்றப்படும் வரையில் தீவிரமான நடவடிக்கைகளிலிருந்து விலகி நிற்காது என்பதை உறுதியாக கூற முடியும்.
அதுமட்டுமன்றி, பிரித்தானியா, பிரான்ஸ், கொலம்பியா, ஜோர்ஜியா போன்ற நாடுகளின் போர் வீரர்கள் ரஷ்யாவுக்கு எதிராக ஆயுதங்களை ஏந்தி உக்ரேனிய களத்தில் உள்ளனர். அவர்கள் நிச்சயமாக கொல்லப்படுவார்கள். ரஷ்யாவுக்கு உள்ள ஒரே தெரிவு அதுதான்.
பிரித்தானியாவின் நிலைப்பாடு பற்றி…
நான் முன்பே குறிப்பிட்டதைப் போன்று ரஷ்ய, உக்ரேன் சமாதான முயற்சிகளின் போது பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொலிஸ் ஜோன்சன் போரை தொடர வேண்டும் என்று சூளுரைத்தார். தற்போது பிரித்தானியாவில் அரசாங்கம் மாறியிருந்தாலும் அவர்களின் ரஷ்யா, உக்ரேன் தொடர்பான நிலைப்பாடு மாறியிருக்கும் என்று நான் கருதவில்லை.
சிலவேளைகளில் பிரித்தானியா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தமது உள்நாட்டு நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு நிலைப்பாடுகளை மாற்றினாலும் கூட ஜெலென்ஸ்கிக்கு போரை நிறுத்துவதற்கு விரும்பம் இல்லை.
ஏனென்றால் போர் நிறுத்தப்பட்டால் அவர் ஜனாதிபதித் தேர்தலை நடத்தியாக வேண்டும். அவ்வாறு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் அவர் அதிகாரத்திலிருந்து தூக்கி எறியப்படுவார். ஆகவே போர் தொடருவதையே ஜெலென்ஸ்கி விரும்புகின்றார். அதற்கு நாம் தயாராகவே உள்ளோம்.
இறைமையை இழந்துள்ள மேற்குலக நாடுகள்
அதேநேரம், ஜெலென்ஸ்கியின் போர் விருப்புக்கு உதவி செய்யும் மேற்குலக நாடுகளுக்கு நாம் ஒரு விடயத்தினை நினைவூட்டுவதற்கு விரும்புகின்றோம். மேற்குல நாடுகள் அனைத்தும் தமது சுதந்திரத்தினையும், சுயாதீனத்தியையும் ஒட்டுமொத்த இறைமையையும் இழந்த நிலையில் தான் உள்ளன.
அந்நாடுகள் அமெரிக்காவின் காலனித்துவத்துக்குள் சிக்கியுள்ளன. அவர்களால் அதிலிருந்து வெளியே வரமுடியாத அளவுக்கு நிலைமைகள் கைமீறிச் சென்றுள்ளன. மேற்குல நாடுகளின் செயற்பாடுகள் தொடர்பான தீர்மானங்கள் அமெரிக்காவின் வொஷிங்டனில் தான் தீர்மானிக்கப்படுகின்றன என்பது துரதிஷ்டவசமான நிலைமை தான்.
பிரதமர் மோடியின் உக்ரேன் விஜயம்
இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் நீண்டகால நட்புறவுகள் உள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி முதலில் ரஷ்யாவுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். அதன்பின்னர் அவர் உக்ரேனுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருக்கின்றார்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையாகவும் போரை நிறுத்துவதற்கான முயற்சிகளில் பங்கேற்கின்றது. இந்தியா எப்போதும் நடுநிலையான தன்மையுடன் செயற்பட்டு வருகின்றது.
இந்தியா இறைமையுள்ள சுயாதீன நாடு என்ற வகையில் அதற்கு அனைத்து உரித்துக்களும் முழுமையாக உள்ளன. அந்த வகையில் அவருடைய உக்ரேன் விஜயத்தினை நாம் மாறுபட்ட கோணத்தில் நோக்க வேண்டியதில்லை.
ஐ.நா.வின் தொடரும் இரட்டை நிலைப்பாடு
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையும், மனித உரிமைகள் பேரவையும் தொடர்ச்சியாக தமது இரட்டை நிலைப்பாட்டை பேணிவருகின்றார்கள். குறிப்பாக, ஈரானில் நடைபெற்ற தாக்குதல்கள், ஹமாஸ் அமைப்பினர் மீதான இலக்குவைக்கப்பட்ட தாக்குதல்கள், பலஸ்தீனின் காசாவில் முன்னெடுக்கப்படும் தாக்குதல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக ஐ.நா. அமைதியாக உள்ளது.
பலஸ்தீனைப் பொறுத்தவரையில் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகரிக்கப்பட்ட நாடாகின்றது. ஆனால் மேற்குலக நாடுகள் அங்கு நடைபெறுகின்ற மனித உரிமைகள் மீறல்கள் சம்பந்தமாக அமைதியாக இருக்கின்றன. அமெரிக்காவும் அமைதியாக உள்ளது.
அண்மையில் டெலிக்கிராம் நிறுவனத்தின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பயணமொன்றை மேற்கொள்கின்றபோது ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் தற்போது வரையில் ஐ.நா.சபையானது அமைதியாக இருக்கின்றது. இந்த இரட்டை நிலைப்பாட்டையே நாம் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். சர்வதேச அமைப்பாகவுள்ள ஐ.நா.பக்கம் சாராது செயற்பட வேண்டியது அவசியமாகின்றது.
வலுவாகும் பிறிக்ஸ் கட்டமைப்புக்கள்
பிறிக்ஸ் கட்டமைப்பு மிகவும் வலுவடைந்து வருகின்றது. ரஷ்யாவின் நண்பர்களும் ஏனைய அங்கத்துவ அமைப்புக்களும் பிறிக்ஸ் கட்டமைப்பில் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். எதிர்வரும் செப்டெம்பரில் நடைபெறும் மாநாட்டுக்கு நாம் இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் ஊடாக அழைப்பிதழை அனுப்பியுள்ளோம். ஏனையநாடுகளின் பிரதிநிதிகள் போன்றே இலங்கையின் பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள்.