உறுதியோடு நின்று இறுதிவரை போராடிய மாவீரர்களுக்கு வீரவணக்கம்!
பிரான்சில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற பொட்டு அம்மான் உள்ளிட்ட 24 மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு!
பிரான்சில் கடந்த மே 2, 2026 அன்று, தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் உள்ளிட்ட 24 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு பெரும் உணர்வெழுச்சியோடு நடைபெற்றது. தமிழ் மரபைப் போற்றும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்வில் பெரும் திரளான உறவுகளும் பிரெஞ்சு அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தொடக்க நிகழ்வுகளும் கொடியேற்றமும்.
விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திலிருந்து 24 மாவீரர்களது திருவுருவப்படங்களும் , தமிழீழ விடுதலைப் புலிகளின் துறை சார், பிரிவு சார் , எடுத்துவர படையணி சார் மலர் வளையங்களும் 'இசைப்பிரியா' இசைக்குழுவினரின் இன்னிய இசை முழக்க அணிவகுப்புடன் போராளி நண்பர்களாலும்,உறவினர்களாலும்,தாயகச் செயற்பாட்டாளர்கள்,இளையோர்களாலும் மண்டப வாசலுக்கு எடுத்து வரப்பட்டன.
அங்கு, தாயகச் செயற்பாட்டாளர் திருமதி செல்வி சுரேன் அவர்கள் பொதுச் சுடரினை ஏற்றி நிகழ்வை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, வல் துவாசு (Val-d'Oise) நகர நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கர்பெல் மர்ரன் பிளங்கோ பிரெஞ்சு நாட்டுத் தேசியக் கொடியையும், திரு. தென்னவன் தமிழீழத் தேசியக் கொடியையும் ஏற்றி வைக்க கொடி வணக்கம் செலுத்தப்பட்டது.
பின்னர் தமிழீழத் தேசியக்கொடியானதுஅரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டதை தொடர்ந்து. 'இசைப்பிரியா' இசைக்குழுவினரின் இன்னிய இசை முழக்க அணிவகுப்புடன் மாவீரர்களின் திருவுருவப் படங்களும், மலர் வளையங்களும் மண்டபத்திற்குள் மிகுந்த மரியாதையுடன் எடுத்துவரப்பட்டன. மேடையில் வைக்கப்பட்டிருந்த பொதுப்படத்திற்கு, முன்னாள் அனைத்துலகச் செயலகப் பொறுப்பாளர் திரு. மனோகரன் அவர்கள் சுடரேற்றி, மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பிரெஞ்சு மற்றும் தமிழீழ மாவீரர்களுக்கு வீரவணக்கம்.
பிரான்சு நாட்டுத் தேசிய வீரர்களுக்கான வீரவணக்க மலர்க்கொத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் கர்பெல் மர்ரன் பிளங்கோ, ராகவி தயாநிதி, செலியா, சார்செல் (Sarcelles) நகரத் துணை முதல்வர் அரிஸ்டோஸ் இஸ்தலா, டெரன்ஸ் பண்டுடி (Térence Bandudi), ரிக்சன்,தேசிய செயற்பாட்டாளர் டக்ளஸ் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவைத் தலைவர் கலையழகன் ஆகியோர் வைத்து நினைவு வணக்கம் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துத் துறையினராலும் மாவீரர்களுக்கு மலர்வளையம் வைக்கப்பட்டது.
உறவினர்களின் சுடர்வணக்கம்
பொட்டு அம்மான், பார்த்திபன் / சாதுரியன், கபிலம்மான், மேதினி, காஸ்ட்ரோ, நியூட்டன், மாஸ், துவாரகா, குமணன், ஸ்ரீராம், நளா, அன்பரசன், சிலம்பரசன், பாமினி, தமிழ்வண்ணன், குமரன், அன்பு, முகுந்தன், ஜெனிபகரன், கதிர்,சுவர்ணன், தமிழ்விழி, வான்மதி, புகழொளி ஆகிய 24 மாவீரர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள்,தாயகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் போராளி நண்பர்களால் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பொட்டு அம்மான்,அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளிதும் பிள்ளைகளின் குடும்பப் படமாக பெரிய திருவுருவப்படம் வைக்கப்பட்டு உணர்வு பூர்வமாக செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
நினைவுப் பகிர்வுகளும் சிறப்புரைகளும்
அகவணக்கத்தைத் தொடர்ந்து, திரு. மகிந்தன் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்., நாடாளுமன்ற உறுப்பினர் கர்பெல் மர்ரன் மற்றும் பிளங்கோ, ராகவி தயாநிதி, சார்சல் நகர துணை முதல்வர் அரிஸ்டோஸ் இஸ்தலா, டெரன்ஸ் பண்டுடி மற்றும் ரிக்சன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பிரெஞ்சு மொழி சிறப்பு உரைகள் யாவும் தமிழ் மொழி மூலம் மொழி பெயர்க்கப்பட்டு அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து, தமிழில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கப்படட்டது. புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானின் ஆரம்பகால நண்பரான திரு. காந்தன், அவருடனான தமது நெகிழ்வான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து, ஆசிரியர் திரு. ரவி அவர்கள் பொட்டு அம்மான் அவர்களின் ஈகம் குறித்தும் ஆற்றல் குறித்தும் சிறப்புரை வழங்கினார்.
வரலாற்று வாசிப்பும் நிறைவும்
இந்நிகழ்வில், மாவீரர்களின் வீரவணக்க அறிக்கைகள் அவர்களின் சக போராளி நண்பர்களாலும் உறவினர்களாலும் வாசிக்கப்பட்டன. பின்னர், மாவீரர்களின் திருவுருவப் படங்கள் அவர்களின் உரித்துடையோரிடமும் உறவினர்களிடமும் கையளிக்கப்பட்டன. நிறைவாக, தேசியக் கொடிகள் இறக்கப்பட்டு உணர்வுபூர்வமாக நிகழ்வுகள் முடிவடைந்தன.


