வடக்கு கிழக்கில் போராட்டம் ! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.
.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் பெரும் கவனயீர்ப்பு போராட்டங்கள் இன்றையதினம் முன்னெடுக்கப்படவுள்ளன.
வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடியும், அவர்களுக்கு நீதி கோரியும் கடந்த பல வருடங்களாக அவர்களின் உறவுகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அவ் வகையில், இலங்கை அரசிடம் நீதி கோரியபோதும், தீர்வுகள் கிடைக்காத நிலையில் தற்போது சர்வதேசத்திடம் நீதி கோரி போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இதுவரை தீர்வு கிடைக்காததினால் சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வடக்கு, கிழக்கில் பேரணி மற்றும் கவனயீர்ப்பு போராட்டங்களை அவர்கள் முன்னெடுக்கவுள்ளனர்.
அவ் வகையில், திருகோணமலையில் பேருந்து தரிப்பிடத்திலும்,
அம்பாறையில் தம்பிலுவில் மத்திய சந்தையிலிருந்து திருக்கோவில் வரையும்,
மட்டக்களப்பில் தந்தை செல்வா சிலைப் பகுதியிலிருந்து காந்தி பூங்கா வரையிலும்,
வவுனியாவில் பேருந்து நிலையத்திலும்,
முல்லைத்தீவில் கச்சேரிக்கு முன்பாகவும்,
யாழ்ப்பாணத்தில் நல்லை ஆதீனம் முன்பாகவும்,
கிளிநொச்சியில் கந்தசுவாமி கோவில் முன்றல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அலுவலக முன்றலிலும்,
மன்னாரில் பேருந்து நிலையத்திலும்
இன்று காலை 10 மணிக்குப் போராட்டங்கள் ஆரம்பமாகவுள்ளன, என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அறிவித்துள்ளனர்.
இப் போராட்டங்களில் மதத் தலைவர்கள், பொதுமக்கள், மக்கள் பிரிதிநிதிகள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு ஆதரவு தருமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது ஆகும்.