தமிழ் மக்கள் பொது வேட்பாளருக்கு மாத்திரம் அளிக்க வேண்டும்
.
தமிழ் பொது வேட்பாளர் பற்றிய தவறான தகவல்கள், வதந்திகளை பரப்ப பல தரப்பினர்களும் திட்டமிட்டுள்ளதாகவும், அதனால் மக்கள் விழிப்பாக இருந்து 21ஆம் திகதி தமது வாக்குகளை தமிழ் பொது வேட்பாளருக்கு மாத்திரம் அளிக்க வேண்டும் என தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை (18) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களியுங்கள். சிலர் விருப்பு வாக்குகளை ஏனைய வேட்பாளர்களுக்கு அளிக்குமாறு கூறுகின்றார்கள். அவ்வாறு செய்யாது. தனியே தமிழ் பொது வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களியுங்கள். அதான் ஒவ்வொரு தமிழ் மக்களின் வரலாற்று கடமையாகும்.
கடந்த 23ஆம் திகதி “நமக்காக நாம்” என்ற பிரச்சார பணியை நாம் யாழ்ப்பாணத்தில் பொலி கண்டியில் ஆரம்பித்து, எட்டு மாவட்டங்களிலும் பிரச்சார பணிகளை முன்னெடுத்தோம். அதனூடாக மக்கள் மத்தியில் பொது வேட்பாளருக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.
வேட்பாளர்களின் பிரச்சார நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றது. அதன் பின்னர் பொது வேட்பாளர் பற்றி வதந்திகளை பொய்யான தகவல்களை பரப்ப சிலர் திட்டமிட்டுள்ளனர் என எமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. AI தொழிநுட்பத்தை பயன்படுத்தி பொய் தகவல்களை பரப்ப உள்ளதாக அறிகிறோம். எனவே மக்கள் விழிப்பாக இருந்து 21ஆம் திகதி காலை வேளைகளிலையே வாக்கு சாவடிகளை சென்று சங்கு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.