Breaking News
39 பேரைக் கொலை செய்த கொலையாளியை, 7 பேரைக் கொலை செய்த கொலையாளி சுட்டுக்கொன்றார் !
.

39 பேரைக் கொலை செய்தவரை, 7 பேரைக் கொலை செய்தவர், நீதிமன்றில் வைத்து சுட்டுக்கொன்றார் !
இலங்கை இராணுவமும், பொலிஸாரும் கிளீன் செய்யப்பட வேண்டும். நாட்டின் பாரதூரமான குற்றச்செயல்கள் பாதுகாப்பு படைகளினால் மேற்கொள்ளப்படுகின்றது. 39 கொலைகள் புரிந்த, எம் ஏ சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்தவர் கனமுல்ல சஞ்சீவ.
கொலைக் குற்றவாளி கனமுல்ல சஞ்சீவ என்பவரை கொழும்பு புதுக்கடை நீதிமன்ற அறை 5இல் வைத்து சுட்டுக்கொன்ற வழக்கறிஞர் வேடத்தில் வந்த கொலையாளி புத்தளத்தில் கைது செய்யப்பட்டார். இவர் லெப்டினன் தரத்தில் உள்ள ஒரு முன்னாள் இராணுவ வீரர். கடந்த சில வருடங்களாக சீதுவ மற்றும் கல்கிஸை போலீஸ் பிரிவுகளில் ஏழு கொலைகளைச் செய்த நபர் இவர் என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புத்தளம் பாலவிய பகுதியில் சொகுசு வானில் பயணித்துக் கொண்டிருந்தபோது பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
சட்டப் புத்தகத்தை ரிவோல்வர் வைக்குமளவுக்கு வெட்டி, அதற்குள் ரிவோல்வரைக் கடத்திச்சென்ற பெண்ணுடைய புகைப்படம் வெளியிடப்பட்டு தேடப்பட்டு வருகின்றார்.
இலங்கையில் களவு, கொள்ளை, ஆட்கடத்தல், கொலை ஆகியவற்றை சிறுவயது முதல் தொழிலாகக்கொண்டவர் கனமுல்ல சஞ்சீவ. இவர் மீது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் மீதான கொலை முயற்சிக் குற்றச்சாட்டும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
கனமுல்ல சஞ்சீவ ஒரு வாடகைக் கொலையாளி, இவர் சாட்சியமளித்தால் அவர் யாருக்காக கொலைகளைச் செய்தார் என்பது தெரியவந்துவிடும் என்பதால் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, இது போன்ற சம்பவம் மீண்டும் இடம்பெறாமல் இருக்க நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்னர் சட்டத்தரணிகளை சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இந்த விடயத்தில் பொலிஸாருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் நாம் கோரிக்கை முன்வைக்கிறோம். இதுபோன்றதான சில சந்தர்ப்பங்களில் இதற்கு பொலிஸார் இராணுவத்தினர் ஒத்துழைப்புகளும் சந்தேகநபர்களுக்கு கிடைத்துள்ளன. எனவே இதனை எம்மால் தனித்து செய்ய முடியாது. அனைத்து பிரஜைகளினதும் ஒத்துழைப்பு அவசியமாகும். எமக்கு கிடைக்கப்பெறும் இரகசிய தகவல்கள் மூலமே இதனை நிறுத்த முடியும் என்றார்.
நாடாளுமன்றத்திலும் இது குறித்த விவாதங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்ததது. நேற்றைய நாடாளுமன்ற அமரிவின் போது, பா.உ தயாசிறி ஜயசேகர, “இந்த நாட்டில் ஒரு பெரிய பாதுகாப்புப் பிரச்சினை" என கூறியிருந்தார்.
அதற்கு பதளிக்கும் விதமாக கருத்து தெரிவித்த அமைச்சர் நளிந்த, "பாதாள உலக நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்கிறது எனவே, இவற்றை கட்டுபடுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் பாதாள உலகமும், கருப்புப் பணமும், போதைப்பொருள் கடத்தலும் உள்ளடக்கப்பட்டுள்ளன, இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சிலர் இலங்கையில் கூட இல்லை. நாங்கள் இதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம், பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்து நடவடிக்கைகளையும் நாடாளுமன்றத்திற்கு வெளிப்படுத்த முடியாது. ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் கடுமையாக தலையிடுகிறது. பாதாள உலகத்திற்கு சுதந்திரம் வழங்கப்படாது" என்றார்.
எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது, அவரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியவர்களில், நேற்று கொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டிருந்தார். இது குறித்த வழங்கானாது, கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஶ்ரீராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்போது, எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியமை, ஆயுத வர்த்தகம் செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட பாதாள உலகக்குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ உள்ளிட்ட 11 சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தபட்டனர். எனினும், முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, குறித்த 11 பேருக்கும் எதிராக வழக்கு தொடர்வதற்கு போதுமான சாட்சிகள் இல்லையென சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கிய நிலையில், சந்தேகநபர்களை விடுவித்து நீதவான் உத்தரவிட்டிருந்த நிலையிலேயே நேற்று கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்டிருந்ததார்.
கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை அடுத்து யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பொது அமர்வுகளின் போதும் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை மன்னார் நீதிமன்ற வளாகத்திலும் அண்மையில் இடம்பெற்ற பயங்கரமான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரே கைதாகியிருந்ததும் கவனிக்கத்தக்கது. புதுக்கடை நீதிமன்ற வளாக துப்பாக்கிச்சூடு இடம்பெற முன்னதாக நேற்று முன்தினம் அம்பாந்தோட்டை மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடேவத்த சந்தி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தந்தை மற்றும் அவருடைய 06வயது மகள் , 09 வயது மகன் ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த வருடம் ஆரம்பித்தது முதலாக இதுவரையான கால கட்டத்தில் சுமார் 15ற்கும் அதிகமான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் இவற்றில் கனிசமானவற்றில் பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் தொடர்புபட்டடிருப்பதாக தெரிய வருகிறது.