ரஸ்யாமீது அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டால் நேட்டோ எங்களுடன் நேரடி யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக கருதுவோம் – புட்டின்
.
நேட்டோ, ரஸ்யாமீது நேரடி யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது!
ரஸ்யாமீது உக்ரைன் நீண்டதூர ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நேட்டோ நீக்கினால் உக்ரைன் ரஸ்ய யுத்தத்தில் நேட்டோ நேரடியாக களமிறங்குகின்றது என தான் கருதுவேன் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா வழங்கிய நீண்டதூர ஏவுகணையை உக்ரைன் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மேற்குலக அமெரிக்க இராஜதந்திரிகள் தயாராக உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே புட்டின் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
நீண்ட தூர ஏவுகணையை பயன்படுத்துவதற்கான தடையை தளர்த்தினால் அதன் அர்த்தம் நேட்டோவும் ஐரோப்பிய நாடுகளும் ரஸ்யாவிற்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்டுள்ளன என்பதே என விளாடிமிர் புட்டின் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அப்படியானால் மோதலின் சாராம்சத்தில் ஏற்படும் மாற்றத்தை மனதில் கொண்டு எங்களிற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் தகுந்த முடிவுகளை எடுப்போம் என புட்டின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தான் வழங்கியுள்ள ஆயுதங்களை பயன்படுத்தி எல்லையை கடந்து ரஸ்யாவிற்குள் நுழைந்து தாக்குதல்களை மேற்கொள்வதற்கு உக்ரைனிற்கு அனுமதிவழங்கியுள்ள போதிலும்,நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதற்கு பைடன் நிர்வாகம் இன்னமும் அனுமதிவழங்கவில்லை.