பிரித்தானியாவுக்கு அகதியாக வருவதற்கு தற்போது ஒன்றரைக் கோடி ரூபாய்: இவர்களும் விரைவில் திருப்பி அனுப்பப்படலாம்,
.

ஒன்றரை கோடி செலவழித்து பிரித்தானியாவுக்கு அகதியாக வந்த இலங்கைத் தமிழர்களும் கைது செய்யப்படுகின்றார்கள் ! திருப்பி அனுப்பப்படுவார்கள் !
பிரித்தானியாவுக்கு அகதியாக வருவதற்கு தற்போது ஒன்றரைக் கோடி ரூபாய் செலவாகின்றது. அவ்வாறு வந்தவர்களும் கூட தற்போது கடைகளில், உணவகங்களில், பெற்றோல் ஸ்ரேசனில், தபாலகங்களில் வைத்து கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களும் விரைவில் திருப்பி அனுப்பப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. கியர் ஸ்ராமர் தலைமையிலான தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தது முதல் இலங்கையர் உட்பட 16இ400 வெளிநாட்டவர்கள் தங்களுடைய நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
தற்போதுள்ள நிலை இதுவரை காலமும் இருந்த அகதிச்சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்றும் ஏனைய மேற்குநாடுகளைப் போன்று பிரித்தானியாவிலும் அகதிகளின் நிலை கையறுநிலையை எட்டியுள்ளதாக சட்டத்தரணியும் சட்டவாதிமான அருண் கணநாதன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். 1990க்கள் முதல் சட்டத்துறையில் உள்ள கணநாதன் தற்போதைய சூழல் கிட்டத்தட்ட அகதிகளுக்கான சலுகைகள் முற்றாக மட்டுபடபடுத்தப்பட்டு சட்டங்கள் கடுமையாக்கப்பட்ட சூழல் என்றும் அகதி அந்தஸ்து கோருபவர்கள் முன்னையவர்கள் போன்ற போராட்ட வலிமையைக் கொண்டிருக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
கல்வி கற்க, வேலை செய்ய என வருபவர்கள் சில சமயங்களில் அதனைத் தொடர முடியாமல் அகதி அந்தஸ்து கோரும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். முன்னைய காலங்களில் உள்துறை அமைச்சுக்குத் தண்ணி காட்டிவிட்டு தமிழ் கடைகளில் வேலை செய்யும் வசதிகள் இருந்தது. ஆனால் தற்போது வேலை செய்வதற்கான ஆவணங்கள் இல்லாமல் ஒருவரை வேலையில் வைத்திருந்தால் அதற்கான அபராதம் 20இ000 பவுண்களில் இருந்து 60இ000 பவுண்கள் வரை விதிப்பதற்கு அனுமதிக்கின்றது. அதனால் அவ்வாறான அபராதத்திற்குப் பயந்து யாரும் வேலை மனுமதிதப் பத்திரம் இல்லாதவர்களை வேலையில் வைத்திருப்பதில்லை. ஒருவருக்கு வருமானம் இல்லாமல் பிரித்தானியாவில் வாழ்வது இயலாத காரியம். இன்னொருவரால் அவரை வருமான ரீதியில் பராமரிக்கவும் முடியாது.
ஜனவரி மாத்ததில் பிரித்தானிய உள்துறை அமைச்சு 800க்கும் அதிகமான சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு 609 பேரைக் கைது செய்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜனவரியைக் காட்டிலும் 73 சதவிகிதம் அதிகம். கடந்த யூலை மாதம் தொழிற்கட்சி ஆட்சிபீடம் ஏறியது முதல் 5இ424 சுற்றி வளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு 3,930 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு யூலை தேர்தலில் தொழிற்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது முதல் 16,400 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இன்று வெளிவரும் புள்ளிவிபரங்களைக் கவனித்தால் இந்த எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குடிவரவு விதிகள் மதிக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ள யெற் கூப்பர், சில வியாபார நிறுவனங்கள் இவ்விதிகளை மீறி சட்டவிரோதமாக சட்டவிரோத குறியேற்ற வாசிகளை வேலைக்கு வைத்து சுரண்டல்களை மேற்கொண்டு வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். அரசாங்கம் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டத்தை பதவிக்கு வந்தவுடனேயே கைவிட்டுள்ளனர். ஆனால் தொழிற்கட்சி அரசு அவர்களை நேரடியாகவே தத்தம் நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வருகின்றது. கொன்சவேடிவ் அரசு தொடர்ந்தும் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை ருவாண்டவுக்கு அனுப்பும் திட்டத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.
வரும் மார்ச் மாதத்தில் சட்டவிரோதமாக நாடுகளின் எல்லைகளுக்குள் நுழைவோர் தொடர்பில் எல்லைப் பாதுகாப்பு மாநாடு ஒன்றை பிரித்தானியா கூட்ட உள்ளது என்றும் அதில் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அமைப்புகளும் 40 நாடுகளும் பங்கு பெற்ற உள்ளதாகத் பிரித்தானிய அரசு தெரிவிக்கின்றது.
ஏற்கனவே ஐரோப்பாவில் கங்கேரி, இத்தாலி, ஸ்பெயின், ஹொலன்ட் ஆகிய நாடுகளில் வலதுசாரிகள் ஆட்சி அமைத்துள்ளதைத் தொடர்ந்து அங்கு வெளிநாட்டவர்களுக்கு எதிரான அலை ஒன்று உருவாகியுள்ளது.
இந்த அலை அமெரிக்காவில் டொனால் ட்ரம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து மேலும் வீரியம் பெற்றுள்ளது. பிரான்ஸ், ஜேர்மனியிலும் இதன் தாக்கம் வெளிப்பட்டுள்ளது. ஜேர்மனியில் நடந்த நேற்றைய தேர்தலில் பழமைவாதக் கட்சியான கிறிஸ்ரியன் டெமொகிரட் கட்சி கூட்டாட்சி ஒன்றை அமைக்க உள்ளது. இக்கட்சி முன்யை சானஸ்லர் அங்கலா மேர்களுடைய மிதவாத வலதுசாரக் கட்சி. ஆனாலும் தற்போது சான்ஸ்லராக வரவுள்ளவர் தீவிர வலதுசாரியாகவே கருதப்படுகின்றார். இந்த வலதுசாரி அலையில் அடிபட்டுச் செல்லாமலிருக்க பிரித்தானிய தொழிற்கட்சியும் தீவிர வலதுசாரிக்கொள்கைகளை வெளிநாட்டவர்களுக்கு எதிராக கொண்டுவருகின்றது.