மொழி அடிப்படையில் பிளவு முயற்சிகள் வேண்டாம்.. பிரதமர் நரேந்திர மோடி பரபரப்பு பேச்சு,
.

தேசிய கல்விக் கொள்கையின் கீழ் மும்மொழிக் கொள்கை தொடர்பாக மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்திய மொழிகளிடையே எந்த விரோதமும் இல்லை. ஒவ்வொரு மொழியும் மற்றொரு மொழியை வளப்படுத்திக்கொண்டு தான் உள்ளது. மொழிகளுக்கு இடையே பிரிவினைகளை ஏற்படுத்துவதை தவிர்த்துவிட்டு, மொழிகளை வளப்படுத்துவது நமது சமூக பொறுப்பு என்று கூறினார்.
டெல்லியில் 98வது அகில பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளனத்தின் தொடக்க விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் என்.சி.பி.-எஸ்.பி. தலைவர் சரத் பவார், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், 98வது அகில பாரதிய மராத்தி சம்மேளனத்தின் தலைவரான எழுத்தாளர் தாரா பவால்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் "மொழிகளை அடிப்படையாகக் கொண்டு பிளவுகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, இந்தியாவின் மொழியியல் பாரம்பரியம் பொருத்தமான பதிலடியை கொடுத்தது. இந்திய மொழிகளுக்கு இடையே ஒருபோதும் பகைமை இருந்ததில்லை. மொழிகள் எப்போதும் ஒன்றை ஒன்று வளப்படுத்தி இருக்கின்றன. இந்த தவறான கருத்துக்களில் இருந்து நம்மை தூர விலக்கி, அனைத்து மொழிகளையும் அரவணைத்து வளப்படுத்துவது நம் சமூகப் பொறுப்பு.
இந்தியா உலகின் மிகப்பெரிய மொழியியல் பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளது என்பது இதற்கு சான்று. இந்த மொழியியல் பன்முகத்தன்மை நமது ஒற்றுமையின் மிகவும் அடிப்படையான ஒன்று. மொழிகளுக்கு இடையே பிரிவினைகளை ஏற்படுத்துவதை தவிர்த்துவிட்டு, மொழிகளை வளப்படுத்துவது நமது சமூக பொறுப்பு. பழமையான நாகரிகங்களைக் கொண்ட நாடு நமது இந்தியா. இது புதிய திட்டங்களையும் புதிய மாற்றங்களையும் உண்டாக்கி இருக்கிறது. உலகின் பழமையான மொழி கொண்ட நாடு என்பதற்கு இது சான்றாகும். இந்த மொழி பன்முகத்தன்மை நமது ஒற்றுமைக்கு மிக அடிப்படையான ஒன்றாகும்" இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
முன்னதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தென் மாநிலங்கள் தேசிய கல்விக் கொள்கை மீதான அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைக்குமாறு வலியுறுத்தினார். ஆனால் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இருமொழிக் கொள்கை என்பதை திட்டவட்டமாக உள்ளது. பாஜகவை தவிர பெரும்பாலான கட்சிகள் மும்மொழிக்கொள்கையை கடுமையான எதிர்கின்றன. இந்நிலையில் கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்ட பதிவில், அரசியல் காரணங்களுக்காக குறுகிய பார்வையுடனும், அச்சுறுத்தலை பயன்படுத்தியும் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ ஒரு மாநிலம் ஆய்வு செய்வது மிகவும் பொருத்தமற்றது. காலத்தால் அழியாத தமிழ் கலாச்சாரத்தையும், மொழியையும் உலக அளவில் மேம்படுத்தவும் பிரபலப்படுத்தவும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது. கல்வியை அரசியலாக்க வேண்டாம் என்றும், நமது மாணவர்களின் உயரிய நலன் கருதி அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் செயல்பட வேண்டும் என்றும் நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.