கால்களில் சங்கிலி, கைகளில் விலங்குகள் பூட்டப்பட்டு இந்தியாவிற்கு நாடுகடத்தப்பட்ட இந்தியர்கள்
,

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை டிரம்ப்நாடு கடத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று அமெரிக்கா ராணுவ விமானம் மூலம் 104 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள், பயணம் முழுவதும் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இராணுவ விமானத்தில் பயணித்ததாக கூறினர். சட்டவிரோத குடியேறிகள் மீதான டொனால்ட் டிரம்பின் கடும் நடவடிக்கைகளுக்கு மத்தியில், 19 பெண்கள் மற்றும் 13 சிறார்கள் உட்பட 104 நாடுகடத்தப்பட்டவர்களை ஏற்றி வந்த அமெரிக்க இராணுவ விமானம் புதன்கிழமை அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது. நாடுகடத்தப்பட்டவர்களில் ஒருவரான பஞ்சாபின் குருதாஸ்பூரைச் சேர்ந்த 36 வயது ஜஸ்பால் சிங், அமிர்தசரஸில் தரையிறங்கிய பின்னரே அவர்கள் விலங்குகளை நீக்கியதாக கூறினார்.
நாடு கடத்தப்பட்டவர்கள் கூறுவது என்ன? : "நாங்கள் வேறொரு முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக நினைத்தோம். பின்னர் ஒரு போலீஸ் அதிகாரி எங்களை இந்தியாவுக்கு அழைத்துச் செல்வதாக எங்களிடம் கூறினார்". "எங்கள் கைகள் விலங்கிடப்பட்டன, எங்கள் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டன. இவை அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தான் திறக்கப்பட்டன," என்று அவர் செய்தி நிறுவனமான PTI இடம் கூறினார். அவர் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவதற்கு முன்பு அமெரிக்காவில் 11 நாட்கள் காவலில் வைக்கப்பட்டதாக சிங் மேலும் கூறினார். இருப்பினும், புதன்கிழமை முன்னதாக, இந்திய குடியேறிகள் கைவிலங்கு போடப்பட்டு, அவர்களின் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை இந்திய அரசாங்கம் ராகரித்ததுள்ளது. இணையத்தில் பரப்பப்படும் வைரல் படம் உண்மையில் இந்தியர்கள் அல்ல, குவாத்தமாலா நாட்டினரை சித்தரிக்கிறது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியது.
பயண முகவர்களால் ஏமாற்றப்பட்டு அமெரிக்கா அனுப்பப்பட்டதாக கூறிய நாடு கடத்தப்பட்டவர்கள்; சட்டப்பூர்வமாக அமெரிக்காவிற்கு அனுப்புவதாக உறுதியளித்த ஒரு பயண முகவரால் தான் ஏமாற்றப்பட்டதாக வந்தவர்களில் ஒருவர் கூறியதாக இந்திய டுடே தெரிவித்தது. "சரியான விசாவுடன் என்னை அனுப்புமாறு முகவரிடம் கேட்டிருந்தேன். ஆனால் அவர் என்னை ஏமாற்றிவிட்டார், இந்த ஒப்பந்தம் ரூ.30 லட்சத்திற்கு செய்யப்பட்டது. பணம் கடன் வாங்கப்பட்டது." என்று கூறினார். பஞ்சாபிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஹர்விந்தர் சிங், மெக்சிகோவை அடைவதற்கு முன்பு கத்தார், பிரேசில், பெரு, கொலம்பியா, பனாமா மற்றும் நிகரகுவா வழியாக அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறினார். மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்குப் பயணம் செய்யும் போது, "நாங்கள் மலைகளைக் கடந்தோம். மற்றவர்களுடன் என்னையும் ஏற்றிச் சென்ற ஒரு படகு கடலில் கவிழ்ந்துவிடும் நிலையில் இருந்தது, ஆனால் நாங்கள் உயிர் பிழைத்தோம்," என்று கூறினார்.