எரிபொருள் இறக்குமதியின் போது அறவிடப்படும் 50 சதவீத வரியை குறைப்பதற்கு அவதானம் - நளிந்த ஜயதிஸ்ஸ
.

பெற்றோலிய விற்பனையின் மூலம் 2023 -2024 வரையான காலப்பகுதியில் 265.63 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், இக்காலப்பகுதியில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் 42.04 பில்லியன் ரூபாய் இலாபமடைந்துள்ளது. எரிபொருள் இறக்குமதியின் போது அறவிடப்படும் 50 சதவீத வரியை குறைப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற அமர்வு வேளையில் வாய்மூல விடைக்கான வினாக்களின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
2023.10.22 ஆம் திகதி முதல் 2024.10.21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பெற்றோலிய விற்பனையின் மூலம் 265.63 பில்லியன் ரூபாய் வருமானம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 42.04 பில்லியன் ரூபாய் இலாபமடைந்துள்ளது.
இக்காலப்பகுதியில் எரிபொருள் விற்பனையில் ஏதேனும் மோடிகள் இடம்பெற்றுள்ளதாக என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை பாராளுமன்றத்துக்கு வெகுவிரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
இதனைத்தொடர்ந்து எழுந்து மேலதிக கேள்விகளை முன்வைத்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, எரிபொருள் இறக்குமதியின் போது மேலதிகமாக அறவிடப்படும் 50 சதவித வரியை நீக்குவாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் மேடைகளில் குறிப்பிட்டார்.
ஆனால் இந்த 50 சதவீத வரி குறைவடையாது என்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே 50 சதவீத வரி குறைப்பை பொய்யாக குறிப்பிட்டீர்களா அல்லது உண்மையில் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்களா என்று கேள்வியெழுப்பினார்.
இதற்கு எழுந்து பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர், 50 சதவீத வரியை குறைப்பதற்கு அவதானம் செலுத்தியுள்ளோம். 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் ஏதும் அமுல்படுத்தப்படவில்லை. மக்களுக்கு இயலுமான வகையில் நிவாரணமளிக்கப்பட்டுள்ளது என்றார்.
மீண்டும் எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, எரிபொருள் இறக்குமதியின் போது மோசடி இடம்பெறுவதாகவும், மோசடியின் ஒரு தொகை அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு செல்வதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால் இன்றும் பழைய விநியோகஸ்த்தர்களிடமிருந்து தான் எரிபொருள் கொள்வனவு செய்யப்படுகிறது.
அரச நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஒருசில தலைவர்கள் சம்பளம் பெறுவதில்லை, அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகிறார்கள் என்று அரசாங்கம் பெருமைக்கொண்டது. மின்சார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் முன்னாள் பணிப்பாளர்களை காட்டிலும் அதிகளவில் சம்பளம் பெறுகிறார்.அவர் 6 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா சம்பளம் பெறுகிறார் . அமைச்சரவை பேச்சாளர் அறிக்கை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.அவர் இவ்விடயத்தை அறியவில்லையா,
இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிக்கை பட்டியல் எதிர்வரும் காலங்களிலும் வெளியிடப்படும்.அரசியல்வாதிகளின் மின் மற்றும் நீர்கட்டணம் தொடர்பான விபரங்களை வெளியிடுவோம் என்றார்.