ஜெனிவாவுக்கு செல்லும் விஜித தலைமையிலான இராஜதந்திர சிறப்பு குழுவினர்.
.

இன்று ஜெனிவாவுக்கு செல்லும் விஜித தலைமையிலான குழு
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திர சிறப்பு குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (23) அன்று ஜெனிவாவுக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது கூட்டத்தொடர் நாளை 24ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ள நிலையிலேயே குறித்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
இதன்போது, இலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுகள் குறித்து விசேட அறிக்கையை இலங்கை தரப்பு சமர்பிக்க உள்ளதுடன், சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க புதிய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பான நீண்ட தெளிவுப்படுத்தலை முன்வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதில் பங்கேற்பதற்காக ஜெனிவா செல்லும் இலங்கையின் உயர்மட்ட இராஜதந்திர சிறப்பு குழு, எதிர்வரும் 28ஆம் திகதி வரை ஐ.நா. மனித உரிமைகள் அமர்வுகளில் கலந்துக்கொள்ள உள்ளதுடன், நட்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளை பிரத்தியேகமாக சந்தித்து இலங்கை தரப்பு கலந்துரையாடவுள்ளது.
மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கப்படும் எந்த தீர்மானத்தின் 51/1 நகல் வடிவையும் இலங்கை தொடர்ந்து எதிர்க்கவும், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர் குற்றங்கள் குறித்து ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் தீர்மானத்தை நிராகரிக்கவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.