பலதும் பத்தும் :- 20,02,2025. நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கவுள்ள ரணில்.
.

- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வருட இறுதிக்குள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கவுள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய ஜனநாயக முன்னணி சார்பில் தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய பட்டியல் உறுப்பினர் ஒருவர்இராஜினாமா செய்வதை அடுத்து நிலவும் வெற்றிடத்தை ரணில் விக்கிரமசிங்க நிரப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுடன், எதிர்க்கட்சியில் இருக்கும் உறுப்பினர்கள் சிலரும் அவருடன் இணைய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகதெரியவந்துள்ளது.
- ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (20) நாடாளுமன்றத்திற்கு வருகை தரவுள்ள நிலையில் நாடாளுமன்ற பாதுகாப்புமேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கூடும் தினங்களில் வழமையாக சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்றுநாடாளுமன்ற வளாகத்திற்குள் வருகைத்தரும் வாகனங்கள், நபர்கள் விசேடமாக சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். நேற்று (19) புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்னர் நாடாளுமன்றத்தின்பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
- புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் (19) காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கருத்துரைத்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, பொது அமர்வுகளின் போதும் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தமக்கு பலரால் கடந்த சில வாரங்களாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த அமர்வுகள் முடிந்து மீண்டும் யாழ்ப்பாணம் செல்ல திட்டமிட்டுள்ளோம்.எமது நாட்டில் இந்த விவகாரம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளதால், பொது அமர்வுகளின் போதும் எமக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சபாநாயகருக்கு அனுப்பப்படும் என்று பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.
- கல்ஓயா பகுதியில் யானைகள் கூட்டத்துடன் மீனகயா ரயில் மோதி ஏற்பட்ட விபத்தினால் மட்டக்களப்பு மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் இன்று (20) அதிகாகாலை யானைக் கூட்டத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் பரிதாபகரமாக ஐந்து யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதன் காரணமாக மட்டக்களப்பு மார்க்கத்தினூடான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி இயக்கப்படவிருந்த புலத்திசை ரயில் சேவையையயும் இரத்து செய்வதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், தடம் புரண்ட ரயில் என்ஜினை மீண்டும் தண்டவாளத்தில் நிமிர்த்தி வைப்பதற்கான முயற்சிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளாகவும் குறிப்பிடப்படுகின்றது.
- தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகர் செல்லையா பொன்னுச்சாமி காலமானார்! பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி என அழைக்கப்படும் செல்லையா பொன்னுச்சாமி தனது 89 ஆவது வயதில் காலமானார். அன்னாரது புகழுடல் நாளை மாலை 04 மணிக்கு யாழ்ப்பாணம், நல்லூர் செட்டித்தெருவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை இறுதி கிரியைகள் இடம்பெற்று, காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரையில் அஞ்சலி உரைகள் நிகழ்வுகள் இடம்பெற்று, தகன கிரியைக்காக வேலணை சாட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என அன்னாரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
- கடந்த பௌர்ணமி தினத்தன்று நடைபெற்ற சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் குறித்து வாக்குமூலம்பெறுவதற்கு வேலன் சுவாமிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நாளையதினம் (20) பலாலி பொலிஸ் நிலையத்திற்கு, நண்பகல் 12 மணிக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்புவிடுக்கப்பட்டது. சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரையானது மக்களது காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்ட நிலையில், அந்த விகாரைகயை அகற்றுமாறு கோரி இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
- யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் (19) மாலை மூவர் மீது மோசமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குடும்ப தகராறின் காரணமாக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர் தனது தந்தை மீதும், சகோதரன் மீதும், சகோதரனின் மகன் மீதும் வவுனியா பகுதியில் இருந்து (NP CAH - 0636) என்ற இலக்கமுடைய வாகனத்தில் ஆட்களை அழைத்து வந்து வீட்டிற்குள் புகுந்து கம்பி,கற்களால் தாக்குதல்நடத்தியதாக தெரியவருகின்றது. வாகனத்தில் வருகை தந்த தாக்குதல் கும்பல் வாகனத்திற்குள் வாள்களை மறைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அடி காயங்களுக்குள்ளான மூவரும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகஇருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
- இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் இன்று(20) அதிகாலை கைதுசெய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி வந்துமீன்பிடியில் ஈடிபட்ட 10 இந்திய மீனவர்களே இவ்வாறுகடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் மூன்று டோலர் படகுகளில் இழுவை மடியில் ஈடுபட்ட வேளை கைதுசெய்யப்பட்டதோடு படகுகளும் கைப்பற்றப்பட்டன. அதேவேளை, கைது செய்யப்பட்ட மீனவர்கள் மன்னார் மற்றும் காங்கேசன்துறை கடற்படை தளங்களுக்கு அழைத்துவரப்பட்டனர். மேற்படி 10 இந்திய மீனவர்களும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் ஊடாகநீதிமன்றங்களில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.