தமிழ் கற்றதால் தான் வாழ்வில் உச்சம் தொட முடிந்தது - கவிஞர் வைரமுத்து!
தேனி மாவட்டம் பெரியகுளம், தென்கரைப் பகுதியில் நூறாண்டுகளைக் கடந்த நூலகம்.

மாணவர்கள் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும், தான் தமிழ் கற்றதால் தான் வாழ்வில் உச்சம் தொட்டதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம், தென்கரைப் பகுதியில் நூறாண்டுகளைக் கடந்த நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் மேலும் அரசு போட்டி தேர்வுக்கு தயாராக மாணவர்களுக்கு தனியாக புதிய அரங்கம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. அந்த புதிய அரங்க கட்டுமானப் பணிக்கான நிதி உதவியை கவிஞர் வைரமுத்து மற்றும் பொதுமக்கள் வழங்கினர். தற்போது அந்த கட்டுமானப் பணி முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து இன்று கவிஞர் வைரமுத்துவால் புதிய நூலக அரங்கம் திறக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இதில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து நூற்றாண்டு நூலகத்தை பயன்படுத்தி போட்டித் தேர்வுகள் எழுதி, வெற்றி பெற்று, இந்த ஆண்டு அரசுப் பணிகள் பெற்ற பெண்களை பாராட்டினார். இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து பேசுகையில், ”தமிழைக் கற்றுக் கொள்ளுங்கள், தான் தமிழ் கற்றதால் தான் உச்சம் தொட்டேன். தமிழை படியுங்கள், பிறமொழி மொழிபெயர்ப்பு நூல்களை அதிகம் படியுங்கள். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் என எல்லாம் படியுங்கள். தமிழை எழுதத் தொடங்குங்கள் என கூறினார்.
20 வயதில் துறையை தேர்ந்தெடுங்கள், 30 வயதில் நீங்கள் உங்கள் தொழிலில் நுழைவீர்கள். 50 வயதில் உச்சம் தொடுவீர்கள். நூலகத்தைப் பயன்படுத்தி ஐன்ஸ்டின், அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகள் அண்ணா, கலைஞர், பெரியார் போன்ற தலைவர்கள் போல் உருவாக வேண்டும். நல்ல தலைவர்கள் வேண்டும், நல்ல புலவர்கள் வேண்டும் இதற்கு நூலகத்தை பயன்படுத்த வேண்டும். ஏவுகணை ஏவப்படுகின்ற இடம் சிறியது தான், ஆனால் அது செல்கின்ற இடம் மிகப் பெரியது” என்றார்.
மேலும் இந்த நூலகத்தை மேம்படுத்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்குவதற்காக நிதி உதவி வழங்குவதாக உறுதியளித்தார். அரசு போட்டி தேர்வுக்காக பயிலக் கூடிய நூலக அரங்கு திறப்பு விழாவில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் நூலகர்கள், வாசகர்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.