இரு இராணுவ புலனாய்வாளர்கள்! - யாழில் கொள்ளையிட்டோர் பொலிஸ் பிடியில் சிக்கினர்,
,
யாழில் கொள்ளையிட்டோர் பொலிஸ் பிடியில் சிக்கினர்; இருவர் இராணுவ புலனாய்வாளர்கள்!
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் ரி.ஐ.டி. என்று அடையாளப்படுத்தி நூதனமான முறையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் சூத்திரதாரி உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு தொகைப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் இருவர் இராணுவப் புலனாய்வாளர்கள் என்று தெரியவருகின்றது.
நூதனமாகக் கொள்ளை: சில நாள்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில், கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக்கடை ஒன்றிலேயே இந்த நூதனக்கொள்ளை நடந்திருந்தது.
நகைக்கடையொன்றுக்குச் சென்ற குழு ஒன்று தங்களை ரி.ஐ.டியினர் என்று அடையாளப்படுத்திக்கொண்டதுடன், விசாரணை என்ற போர்வையில் கடையில் இருந்த 30 லட்சம் ரூபா பணத்தைக் கொள்ளையிட்டு அந்தக் குழு தப்பிச் சென்றது.
இந்தச் சம்பவம் தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்கவின் வழிகாட்டலுக்கு அமைய, யாழ்ப்பாணக் குற்றவிசாரணைப் பொலிஸ் பிரிவுப் பொறுப்பதிகாரி கலும் பண்டார தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.
சந்தேகநபர்கள் கைது: கண்காணிப்புக் கமராப் பதிவுகள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் இனங்காணப்பட்ட நிலையில் பிரதான சூத்திரதாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒருதொகைப் பணம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பிரதான சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் வாகனச்சாரதி உட்பட மூவர் கண்டியில் வைத்தும், இருவர் கொழும்பில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் இராணுவப் புலனாய்வாளர்கள் என்றும், மற்றுமொருவர் தெற்கு அரசியல் கட்சியொன்றில் பிரமுகர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கண்டியில் கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாணம் கொண்டுவந்து விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.