சிறிலங்காவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர் அச்சுறுத்தல் ! மகிந்த இராஜபக்ச எச்சரிக்கை !!
,

சிறிலங்காவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர் அச்சுறுத்தல் ! மகிந்த இராஜபக்ச எச்சரிக்கை !!
தமிழீழம் என்ற தனிநாட்டு நிலைப்பாட்டில் உறுதிகொண்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது, உலகெங்கிலும் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தி வருவதாகவும், சிறிலங்காவுக்கு எதிரான நிலைப்பாட்டில் கடுமையான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என சிறிலங்காவின் முன்னாள் அரசுத் தலைவர் மகிந்த இராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தற்போது சிறிலங்காவின் ஆட்சிக்கதிரைக்கு வந்துள்ள புதிய அரசாங்கமானது, முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பை குறைப்பது தொடர்பான நிலைப்பாட்டுக்கு எதிராக சிறிலங்காவின் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 24ம் தேதி தாக்கல் செய்துள்ள மனுவிலேயே இவ்விடயத்தினை மகிந்த இராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான மூன்று தசாப்த கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிக்கு தலைமை தாங்கியவர் என்ற வகையில் தாம் பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக தனது மனுவில் குறிப்பிட்டுள்ள மகிந்த இராஜபக்ச, புலம்பெயர் மக்களின் செல்வாக்குமிக்க சக்தியாக 'நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்' என ஒழுங்கமைக்கபட்டுள்ளதோடு, அதன் பிரதமராக விசுவநாதன் ருத்ரகுமாரன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உலகளாவிய கொள்கை வகுப்பாளர்கள் மீது தொடர்ந்தும் செல்வாக்கு செலுத்தி வருவதாகவும், மேலும் சிறிலங்கா மற்றும் அதன் நடவடிக்கைகள் தொடர்பாக மூர்க்கத்தனமான நிலைப்பாட்டினை வெளிப்படுத்துவதாகவும் தனது உச்ச நீதிமன்னற மனுவில் சுட்டிக்காட்டியுள்ள மகிந்த இராஜபக்ச, தன் மீதான அச்சுறுத்தல் நீடித்து வருதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணை எதிர்வரும் மார்ச் 17ம் தேதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.