கிரீன்லாந்தை வாங்குவதுடன், பனாமா கால்வாயை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர விரும்பும் டிரம்ப்!
.

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், கிரீன்லாந்தை வாங்குவதுடன், பனாமா கால்வாயை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர விரும்புவதாகவும் கூறியது, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த இலக்குகளுக்கு ராணுவ அல்லது பொருளாதார பலத்தை அவர் பயன்படுத்துவாரா என்று ஜனவரி தொடக்கத்தில் கேட்கப்பட்ட போது, அவர் பின்வருமாறு பதிலளித்தார், "அதைக் குறித்து என்னால் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது."
குறைவான மக்கள் தொகை கொண்ட கிரீன்லாந்து தீவில் அரிய தாதுக்கள் மிகப்பெரிய அளவில் கிடைக்கின்றன. இந்த தாதுக்கள் பேட்டரிகள் மற்றும் உயர் தொழில்நுட்ப சாதனங்களின் உற்பத்தியில் முக்கியமானவை.
டென்மார்க் மற்றும் கிரீன்லாந்தை ஆளும் தலைவர்கள் இந்த பகுதி விற்பனைக்கு இல்லை என்று வலியுறுத்தியுள்ளனர்.
டிசம்பரில், பனாமா கால்வாய் வழியாக செல்ல பனாமா நிர்வாகம் 'அபத்தமான, மிகவும் நியாயமற்ற' கட்டணங்களை வசூலிப்பதாகக் கூறிய டிரம்ப், இதை நிறுத்தாவிட்டால் பனாமா கால்வாயை அமெரிக்காவிடம் திருப்பித் தருமாறு கோருவேன் என்றார்.
பனாமாவில் பெரும் பொருளாதார முதலீடுகளைக் கொண்டுள்ள மற்றும் கால்வாயை அடிக்கடி பயன்படுத்தும் நாடான சீனா குறித்து தான் கவலை கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
ஆனால், கால்வாய் மீதான தங்களது இறையாண்மை 'பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்டது' என்றும், நீர்வழிப் பாதையில் 'சீன தலையீடு' இல்லை என்றும் பனாமா கூறியுள்ளது.
மேற்கூறிய 2 பிராந்தியங்களில் எதனையும் அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது. ஆனால் டிரம்பின் 'அமெரிக்காவுக்கே முன்னுரிமை' என்ற பார்வை, அந்நாட்டின் எல்லைக்கு அப்பால் கூட தாக்கம் செலுத்தக்கூடும் என்பதையே அவரது அறிக்கைகள் காட்டுகின்றன.