"ஒற்றை ஓநாய் தாக்குதல்கள்" பயங்கரவாததத்தின் வளர்ந்து வரும் புதிய முகமென வர்ணிக்கப்படுகிறது.
.

புத்தாண்டு பிறந்து ஏறத்தாழ மூன்று மணித்தியாலங்கள் கடந்திருந்தன.
அமெரிக்காவின் தெற்கிலுள்ள நியூ ஓர்லியன்ஸ் (New Orleans) நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது.
இங்குள்ள பிரெஞ்ச் குவார்ட்டர் பிரதேசம் ஒரு காலத்தில் பிரான்ஸின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இடம். அங்கு கேளிக்கைகளுக்கு குறைவில்லை.
போர்பொன் (Bourbon Street) வீதியில் சனநெரிசல் அலைமோதியது. புத்தாண்டு உற்சாகத்திலும், அன்று மாலை நடக்கவிருந்த புகழ்பெற்ற கால்பந்தாட்ட போட்டி பற்றிய நினைப்பிலும் மக்கள் தம்மை மறந்திருந்தனர்.
அப்போது ட்ரக் வண்டியொன்று வீதியில் பிரவேசிக்கிறது. பொலிஸ் வாகனத்தைத் தாண்டிச் சென்று சடுதியாக வேகத்தைக் கூட்டுகிறது.
இந்த ட்ரக் எதிர்ப்பட்டவர்களை எல்லாம் மோதித் தள்ளுகிறது. ஆட்கள் அபயக்குரல் எழுப்புகிறார்கள். வீதியெங்கும் இரத்தக் கறைகள்.
ட்ரக் வண்டி நிற்கிறது. அதை செலுத்தியவர், ஆயுதபாணிகள் தரிக்கும் ஆடையுடன் வெளியே வருகிறார். தமது பிஸ்டலை நீட்டி பொலிஸாரை சுடுகிறார். ஈற்றில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகிறார்.
புத்தாண்டுத் தினத்தன்று அமெரிக்காவை மாத்திரமன்றி ஒட்டுமொத்த உலகையும் உலுக்கிய தாக்குதல். இதில் 14 பேர் பலியாகிறார்கள். 35 பேர் வரை காயமடைகிறார்கள்.
அதே நாள். காலை 8.40 அளவில் நெவாடா மாநிலத்தின் (லாஸ் வெகாஸ்) பெரடைஸ் நகரில் உள்ள ட்ரம்ப் சர்வதேச ஹோட்டலுக்கு வெளியே ட்ரக் வண்டியொன்று வெடித்துச் சிதறுகிறது.
தீப்பற்றி எரியும் ட்ரக் வண்டி. தீயணைப்பு படைவீரர்கள் தீயை அணைத்து, ட்ரக்கில் எரிந்து சாம்பலான மனிதரின் சடலத்தை வெளியே எடுக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக அருகில் இருந்த சிலர் சிறு காயங்களுடன் உயிர் தப்புகிறார்கள்.
புத்தாண்டு தினத்தன்று அமெரிக்காவை மாத்திரமன்றி, ஒட்டுமொத்த உலகையும் உலுக்கிய தாக்குதல்கள். இரு சம்பவங்களும் ஏற்படுத்திய சலசலப்பு இன்னமும் ஓயவில்லை.
ஏனிந்த தாக்குதல்கள்? இவற்றின் பின்னணியில் யாரேனும் உள்ளார்களா? இரண்டும் தனித்தனி சம்பவங்களா? இல்லாவிட்டால், இரண்டுக்கும் இடையில் தொடர்புகள் உள்ளனவா? என்றெல்லாம் அடுக்கடுக்காக கேள்விகள் எழுந்து அமெரிக்க அதிகாரிகளை பல கோணங்களில் விசாரிக்கத் தூண்டியுள்ளன.
முதல் தாக்குதல் பற்றிய விசாரணைகளை அடுத்து சில தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தக் கட்டுரை எழுதப்படும் வரையில் இரண்டாவது தாக்குதல் இன்னமும் பூடகமாகவே தொடர்கிறது.
Shamsud-Din Jabbar
நியூ ஓர்லியன்ஸ் தாக்குதலை சிறு பராயத்தில் இஸ்லாத்தைத் தழுவிய சம்சுதீன் ஜப்பார் என்ற நபர் நடத்தியிருப்பதாக அமெரிக்காவின் எவ்.பி.ஐ புலனாய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
தாக்குதலுக்கு முன்னர் சம்சுதீன், பேஸ்புக்கில் வீடியோ பதிவொன்றை சேர்த்திருந்தார். அவரது ட்ரக்கில் இஸ்லாமிய இராஜ்ஜிய (ஐ.எஸ்) இயக்கத்தின் கொடியொன்றும் இருந்தது.
இவற்றின் அடிப்படையில், ஓர்லியன்ஸ் சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் என்ற கோணத்தில் விசாரிப்பதாக எவ்.பி.ஐ. புலனாய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
லாஸ் வெகாஸில் ட்ரக்கை வெடிக்க வைத்த நபர், மெத்திவ் லிவெல்ஸ்பெர்கர். ( Matthew Livelsberger,) இவரது தலையில் குண்டுக் காயம் இருந்ததாகவும், வாகனத்தில் இருந்து துப்பாக்கி மீட்கப்பட்டதாகவும் தெரிகிறது. இவர் தம்மைத் தாமே சுட்டுக் கொண்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
சம்சுதீனுக்கும், லிவெல்ஸ்பெர்கருக்கும் இடையில் இரண்டு ஒற்றுமைகள் உண்டு. இருவரும் அமெரிக்க இராணுவத்திற்காக வேலை செய்தவர்கள்.
இராணுவ பணிக்காக ஆப்கான் சென்றவர்கள். இருவரும் ட்ரக் வண்டிகளை வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள்.
வாடகைக்கு பெற ஒரே செயலியையே (Smartphone App) பயன்படுத்தியிருக்கிறார்கள். இருந்தபோதிலும், இரு தாக்குதல்களுக்கும் இடையில் தொடர்புகள் இருந்ததா என்பதை திட்டவட்டமாக நிரூபிக்கக்கூடிய தடயங்கள் எவ்.பி.ஐ அதிகாரிகளிடம் இல்லை.
சம்சுதீன் பற்றிய விசாரணைகளை ஐ.எஸ் பயங்கரவாதம் என்ற கோணத்தில் முன்னெடுக்கக்கூடிய தேவையும், காரணங்களும் அவர்களிடம் இருக்கிறது.
இந்த மனிதர் ஐ.எஸ் இயக்கத்தின் போதனைகளால் கடும்போக்குவாதியாக மாற்றப்பட்டு, எவரது உடந்தையும் இல்லாமல் தனியாகவே தாக்குதலை நடத்தியிருக்கிறார் என்பது எவ்.பி.ஐ நிறுவனத்தின் கணிப்பாகும்.
இத்தகைய தாக்குதல்களுக்கு அமெரிக்க பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும் பெயரொன்று உண்டு. அது Lone Wolf Attack என்பதாகும். தமிழில் ‘ஒற்றை ஓநாய் தாக்குதல்’ என்று மொழிபெயர்க்கலாம்.
ஒற்றை ஓநாய் தாக்குதல்கள் பயங்கரவாததத்தின் வளர்ந்து வரும் புதிய முகமென வர்ணிக்கப்படுகிறது. மேலைத்தேய நாடுகளில் இத்தகைய தாக்குதல்கள் அதிகரித்து வருவதை உலக பயங்கவராத சுட்டெண் என்ற பட்டியல் காட்டி நிற்கிறது.
தாக்குதல் நடத்துபவர் எந்தவொரு அமைப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டியது கிடையாது. அவர் இணைய வெளியில் பரவியிருக்கும் கடும்போக்குவாத அமைப்புக்களால் தூண்டப்பட்டவராக இருக்கலாம். வன்முறைச் சிந்தனைகள் திணிக்கப்பட்டவராகவும் இருக்கக்கூடும்.
கடந்த காலத்தில் ‘ஒற்றை ஓநாய்களாக’ தாக்குதல் நடத்தியவர்களை ஆராயலாம். இவர்கள் மத்தியில் மதவெறி பிடித்தவர்களும் உண்டு. சுற்றாடலுக்காக போராட முனைந்தவர்களும் உண்டு. விலங்குகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்களும் இருக்கிறார்கள். ஒரு புறத்தில் வெள்ளையின மேலாதிக்கவாதிகள் என்றால், மறுபுறத்தில் ஜிஹாத் போராளிகளாக தம்மை வர்ணித்துக் கொள்பவர்களும் உள்ளனர்.
‘ஒற்றை ஓநாய் பயங்கரவாதிகள்’ தமக்குரிய சிந்தனைக் கோட்பாடுகளை தாமே வரையறுத்துக் கொள்வார்கள். அது தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த விரக்தி உணர்வாக இருக்கலாம். அல்லது, மத ரீதியாக, சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக ஏற்பட்ட கவலைகளால் ஏற்பட்டவையாகவும் இருக்கலாம். இவையிரண்டும் சேர்ந்த கலவையாகவும் இருக்கலாம்.
இந்தக் கருத்தை சம்சுதீனுக்குப் பொருத்திப் பார்க்கலாம். நியூ ஓர்லியன்ஸ் தாக்குதலுக்கு முன்னதாக சம்சுதீன் பேஸ்புக்கில் பல வீடியோக்களை பதிவேற்றியிருக்கிறார்.
தாம் ஐ.எஸ் இயக்கத்தால் தூண்டப்பட்டதாகவும், ஆட்களைக் கொல்வதில் விருப்பம் உள்ளதாகவும் கூறும் கருத்து ஒரு வீடியோவில் உள்ளது.
இன்னொரு வீடியோவில் வேறு கதை சொல்கிறார். தமது குடும்பத்திற்கு ஊறு விளைவிக்க வேண்டும் என தாம் ஆரம்பத்தில் நினைத்ததாகவும், அதன் மூலம் விசுவாசிகளுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான யுத்தத்தை வெளியுலகிற்கு காண்பித்திருக்க முடியாததால் எண்ணத்தை மாற்றிக் கொண்டதாகவும் சம்சுதீன் குறிப்பிட்டுள்ளார்.
சம்சுதீனுக்கு 42 வயது. அவர் கல்வித் தகைமைகளும் ஆற்றல்களும் நிறைந்தவராக இருக்கிறார். கணினித்துறையில் பட்டம் பெற்றவர். அமெரிக்காவில் புகழ்பெற்ற கம்பனிகளுக்காக வேலை செய்தவர். ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையில் சம்சுதீனுக்கு நிறைய சறுக்கல்கள் இருந்திருப்பதாக தெரிகிறது.
இவர் மூன்று தடவை திருமணம் செய்தவர். மூன்று திருமணங்களும் விவாகரத்தில் முடிந்திருக்கின்றன. பயணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு சொத்து வணிகத் துறையிலும் கால்பதித்து, கடைசியில் வரவுக்கு மிஞ்சிய செலவால் சம்சுதீன் கஷ்டப்பட்டார் என அவரது கடைசி மனைவி குற்றம் சுமத்தியிருக்கிறார்.
இஸ்லாத்தை தனது பெயரில் சுமந்து கொண்டு இஸ்லாமிய போதனைகளுக்கு முரணாக செயற்படுவதாக விமர்சிக்கப்படும் ஐ.எஸ். இயக்கம், தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக சம்சுதீன் போன்றவர்களை பயன்படுத்தும் போக்கை கடந்த காலங்களில் தெளிவாகக் காணலாம்.
மத்திய கிழக்கில் சிரியாவையும், ஈராக்கையும் உள்ளடக்கிய நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நோக்கத்துடன் ஐ.எஸ் இயக்கம் ஸ்தாபிக்கப்பட்டாலும், அதன் கட்டமைப்பு சீர்குலைந்து, மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறது.
ஒரு விளம்பரச் சின்னம் போன்று தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, சிறு குழுக்களையும் தனிநபர்களையும் தம் பக்கம் ஈர்த்து, தமது சிந்தனைகளையும் கோட்பாடுகளையும் திணித்து, தமது நோக்கங்களை வேறு வழிகளில் நிறைவேற்றுவதில் ஐ.எஸ் இயக்கம் கடந்த காலங்களில் வெற்றி கண்டுள்ளது என்பதை மறுக்க முடியாது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் மொஸ்கோவில் 130 பேரை பலி கொண்ட தாக்குதலின் பின்னணியில், ஐ.எஸ் இயக்கத்தால் தூண்டப்பட்ட ஆப்கான் குழுவொன்று இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புத்தாண்டு தினத்தன்று அமெரிக்க மண்ணில் நிகழ்ந்த தாக்குதல்களில், குறைந்தபட்சம் நியூ ஓர்லியன்ஸ் தாக்குதலும் இப்படிப்பட்டது தான் என நிரூபிக்கப்படும் பட்சத்தில், பல வருடங்களுக்கு பிறகு அமெரிக்க மண்ணில் ஐ.எஸ் இயக்கத்தின் தூண்டுதால் நடத்தப்பட்ட முதல் தாக்குதலாக அது அமையும்.
சமகால அரசியல், சமூக, பொருளாதார தாக்கங்களின் மத்தியில் தனிப்பட்ட வாழ்க்கையை விரக்தி நிரப்பி, வெறுப்பு டன் வலம் வந்து கொண்டிருக்கும் கோடிக்கணக் கான மனிதர்கள் அமெரிக்காவிலும், ஏனைய நாடுகளிலும் ஜடங்களாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இத்தகைய மனிதர்களுக்குள் மறைந்துள்ள வெறுப்புணர்வை ஐ.எஸ் இயக்கம் போன்றவை தமக்கு சாதமாக பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பமும், சுதந்திரமும், இடப்பரப்பும் இணையவெளியில் தாராளமாக கிடைக்கின்றன.
இந்த உலகில் ஏற்றத்தாழ்வுகளும், குரோதங்களும் வெறுப்புணர்வுகளும் நீக்கப்படாத வரையில், சம்சுதீன் போன்ற நபர்களை ஐ.எஸ் இயக்கம் போன்ற அமைப்புக்கள் பயன்படுத்தி, நியூ ஓர்லியன்ஸ் தாக்குதல் போன்ற பயங்கரவாத செயல்களை நடத்துவதை தடுக்கவோ தவிர்க்கவோ முடியாது.