Breaking News
நுவரெலியாவிடமிருந்த முதலாவது வெற்றிப் பதக்கத்தை யாழ்பாணம் பறித்துவிட்டது - அமைச்சர் சந்திரசேகர்.
.

நுவரெலியாவிடமிருந்த முதலாவது வெற்றிப் பதக்கத்தை யாழ்பாணம் பறித்துவிட்டது - அமைச்சர் சந்திரசேகர்.
மதுபாவனையில் நுவரெலியாவிடமிருந்த முதலாவது இடத்தை யாழ்பாணம் தட்டிப்பறித்துவிட்டது என கடற்தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் நேற்று யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் தெரிவித்தார்.
அதில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் சந்திரசேகர்,
உலகத்தில் இரண்டாவது குடிகார நாடு இலங்கையாக உள்ளது. ஒரு காலத்தில் இலங்கை என்கின்ற இரண்டாவது குடிகார நாட்டில் கூடுதலான குடிகாரர்கள் நுவரெலியாவில் இருந்தார்கள். அது எங்களுடைய மாவட்டம். ஆனால் இன்றைக்கு எங்களிடமிருந்த முதலாவது இடத்தை யாழ்ப்பாணம் தட்டிப் பறித்து விட்டது. யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகளுக்குப் பின்பும் 89 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைப் பெண்களின் ஓலம் இன்றும் கேட்கின்றது. அன்று 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிள்ளைகள் தங்களுடைய பெற்றோர்களை இழந்து அனாதை இல்லங்களில் இருக்கின்றார்கள்.
அண்மையில் என்னை சந்தித்த அனாதை இல்லம் ஒன்றின் தாயார், எங்களுடைய பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள். பெண் பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்ள முடியாமல் நாங்கள் தவிக்கின்றோம் அவர்கள் சீரழிக்கப்படுகின்றார்கள் என்று கூறினார். கடந்த காலங்களில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் எங்களுடைய பெண்கள் எல்லாரையும் தேடித் தேடி கடன் வழங்கின. வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டவர்களில் கூடுதலானோர் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதுதான் இன்று எங்களுடைய வட மாகாணம்.
பொதுப்போக்குவரத்தில் பயணிக்கும் பெண்களில் 99 வீதமானோர் வாழ்க்கையில் ஒரு நாளாவது பாலியல் இம்சைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று சொல்லப்படுகின்றது. அதில் தான் எங்களுடைய மனைவி, தங்கைகள், மகள்கள் பயணிக்கின்றனர். இந்த நிலை நாளைக்கு தொடர வேண்டுமா? அந்த அளவுக்கு நிலைமை சீரழிந்து போயுள்ளது என்றார்.