தமிழர்கள் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம்; எகிறிய மனோ
சம்பூரில் 3 பெண்கள் உள்ளிட்ட 4 தமிழர்கள் பொலிசாரால் இழுத்துச் செல்லப்பட்டு கைது
தமிழர்கள் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம்; எகிறிய மனோ
அவரது பேஸ்புக் பதிவின்படி, மனோ கணேசன் எம்.பி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க சிரமப்பட்ட ஜனாதிபதி, கைதானவர்கள் நாளை (இன்று) பிணையில் விடுவிக்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மனோ கணேசன் எம்.பி நேற்று இரவு தனது பேஸ்புக்கில் பதிவிட்ட தகவல் வருமாறு-
“நினைவேந்தல் தொடர்பில் ஒரு பொது கொள்கை ஏன் அரசுக்கு இல்லை என ரணிலிடம் நான் சற்றுமுன் தொலைபேசியில் கேட்டேன். மேலும், தனிப்பட்ட இல்லம் ஒன்றுக்கு தேடி சென்று இறந்தவர்களை நினைவேந்தும் பெண்களை கதற வைத்து, இழுத்து சென்று கைது செய்யும் அளவுக்கு, ஸ்ரீலங்கா பொலிசுக்கு அப்படி என்ன அவசர தேவை இருக்கிறது?” என்று கேட்டேன்.
“இல்லை, அவர்கள் பொலிஸ் உடன் முரண் பட்டு உள்ளார்கள். அதனால்தான் கைது. சட்ட ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸிடம் கூறி விட்டேன். பிணை கோரிக்கையை எதிர்க்க வேண்டாம் என பொலிசுக்கு, சட்ட ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ் கூறி உள்ளார். ஆகவே நாளை விட்டு விடுவார்கள்.” என்றார் ரணில்.
“அதெல்லாம் சரி. புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது. அந்த இயக்கத்தின் சின்னங்கள் எதுவும் இல்லாமல் தங்கள் வீட்டில் கஞ்சி காய்ச்சி குடித்த மக்களை ஏன் தேடி போய் பொலிஸ் கைது செய்ய வேண்டும்? தடை செய்யப்பட்ட இயக்கத்தின் சின்னங்கள் இருந்தால் எப்போதும் கைது செய்யலாம் தானே. ஆகவே இதற்காக ஏன் விசேடமாக
நீதிமன்ற ஆணையை கேட்டு பெற வேண்டும்? இதில் என்ன மர்மம் இருக்கிறது?”
“நினைவேந்தல் தொடர்பில் ஒரு பொது கொள்கை ஏன் அரசாங்கத்துக்கு இல்லை? தடை செய்யப்பட்ட இயக்கத்தின் சின்னங்கள் இல்லாமல் எவரும் தம் மறைந்த உறவுகளை நினைந்து நினைவேந்தல்களை நடத்தலாம் என அரசாங்கம் அறிவித்தால் என்ன?” என்றும் நான் மீண்டும் மீண்டும் கேட்டேன்.
“இவர்களை நாளை பிணையில் விட்டு விடுவார்கள், பிணையில் விட்டு விடுவார்கள்”, என்று அவசர அவசரமாக கூறினாரே தவிர, இது தொடர்பில் பொது கொள்கையை அறிவியுங்கள் என்ற கோரிக்கைக்கு உடன் பதில் இல்லை.