சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்! 28 பேர் உயிரிழப்பு, 20க்கும் மேற்பட்டோர் காயம். பாதிக்கப்பட்ட தமிழர்கள் உடல்நிலை சீராக உள்ளது!
உலகத்தையே உலுக்கிய பெஹல்காம் தாக்குதல்: தமிழர்கள் நிலை என்ன?

பெஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் உடல்நிலை சீராக உள்ளதாக தலைமை செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காம் பகுதியில் உள்ள சுற்றுலாத் தலத்தில், செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 28 பேர் உயிரிழந்து, 20க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்தனர்.
அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேரின் உடல் நிலை சீராக உள்ளது. ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளார் என தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை. மூன்று பேர் மட்டும் காயம் அடைந்துள்ளனர். அதில், இரண்டு பேரின் உடல்நிலை சீராக உள்ளது.
ஒருவர் மட்டும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். டெல்லியில் உள்ள தமிழக அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுடன் பேசியுள்ளனர். தமிழ்நாடு அரசின் சிறப்பு அதிகாரிகள் இன்று மாலை காஷ்மீர் சென்று சேர்ந்தவுடன், உடனடியாக பணிகளை மேற்கொள்வார்கள்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பெஹல்காம் பகுதியிலிருந்த சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காயமடைந்து மருத்துவமனையில் உள்ள நபர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் உள்ளதாக வெளியான சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான “தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்” என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களைக் கண்டறியும் தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால், எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் சுற்றுலாத் தலம் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும், அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. பலரும், இந்த சம்பவத்தை “காட்டுமிராண்டித்தனமான செயல்” எனக் குறிப்பிட்டுள்ள கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், உள்ளூர் அரசியல் தலைவர்கள் முதல் ஐ.நா வரை கண்டனம் எழுந்துள்ளது.