பலதும் பத்தும்:- 2305,2025 - தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி: TID விசாரணை!
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 11 மீனவர்கள் !

பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவித்த அம்பிட்டிய சுமணரத்ன தேரர் அதிரடியாக கைது
மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உஹன பொலிஸாரால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டபோது, அவருடன் இருந்த இரு பிள்ளைகளை பாதுகாப்பற்ற முறையில் முச்சக்கர வண்டியில் அழைத்துச் செல்ல முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேரர் அந்த பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது..!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (23) காலை பம்பலப்பிட்டியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளவத்தை ஹேவ்லாக் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்ணிடம் தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதற்கட்ட விசாரணைகளில், குறித்த துப்பாக்கி முன்னாள் அமைச்சருடையது என்பது தெரியவந்துள்ளது.
தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி: TID விசாரணை!
வெள்ளவத்தை ஹெவ்லாக் சிட்டி வீட்டுத்தொகுதியில் இரண்டு பெண்களுடன் கைப்பற்றப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி தொடர்பான மேலதிக விசாரணைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதிப் காவற்துறை மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன தெரிவித்தார். பதில் காவற்துறை மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்பட்டது. அனுராதபுரம் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் அமைச்சர் ஒருவரின் சமையல்காரராகப் பணியாற்றிய ஒருவர், இரண்டு பெண்களுக்கும் துப்பாக்கியைக் கொடுத்ததாகக் கூறப்படும் நபர், வெள்ளவத்தை காவற்துறையினரால் ருவன்வெல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்
அரசசார்பற்ற நிறுவனங்கள் , மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைப்பு முறையில் செயற்பட வேண்டும்!
அரசசார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றக் கூட்டமானது, மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அக் கூட்டத்தை மாவட்ட செயலர் கருத்து தேடிவிக்கையில்,
அரசசார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத் திட்டத்திற்கு முதற்கண் நன்றியினைத் தெரிவிக்கிறேன்.
குறைநிரப்பு வேலைகளை நிரப்புவதற்காகவே அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்பட்டு வருகிறது.
அரசசார்பற்ற நிறுவனங்களின் அரசாங்கத்தின் நடைமுறைகளுக்கு அமைவாக செயற்பட வேண்டிய தேவைப்பாடு உள்ளது.
மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைப்பு முறையில் செயற்படுவதன் மூலம் வினைத்திறனாக செயற்பட்ட முடியும் என மாவட்ட செயலர் தெரிவித்ததுடன் , ஒவ்வொரு அரச சார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்களை ஆராய்ந்து உரிய அறிவுத்தல்களையும் வழங்கினார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. ஸ்ரீமோகனன், பிரதேச செயலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட இணைப்பாளர், சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
72வது உலக அழகி போட்டி - இறுதிச் சுற்றில் அனுதி
இந்தியாவின் தெலங்கானாவில் இந் நாட்களில் நடைபெற்று வரும் 72வது 'உலக அழகி போட்டியில்' Head-to-Head Challenge பிரிவில் 107 அழகிகளில் இருந்து இறுதி 20 பேருக்குள் இலங்கையை சேர்ந்த அனுதி குணசேகர தகுதி பெற்றுள்ளார். இதன்படி, தற்போது இவர் இந்த சுற்றில் ஆசிய மற்றும் ஓசியானியா பிராந்தியத்தில் முதல் 5 பேருக்குள் தேர்வாகியுள்ளார். இவருடன் இந்த சுற்றில் ஆசிய மற்றும் ஓசியானியா பிராந்தியத்தில் இருந்து தாய்லாந்து, துருக்கி, லெபனான் மற்றும் ஜப்பான் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், அனுதியின் இந்த முன்னேற்றம் உலக அழகி போட்டியில் இலங்கைக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணமாக கருதப்படுகிறது. அதாவது, 74 ஆண்டு கால உலக அழகி போட்டி வரலாற்றில் Head-to-Head Challenge பிரிவில் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இலங்கை போட்டியாளராக அனுதி இடம்பிடித்துள்ளார்.
மேலும், அனுதியின் மற்றொரு தனித்துவமான வெற்றியாக, இந்த முறை உலக அழகி போட்டியில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டி பிரிவுகளிலும் இறுதி சுற்றுக்கு வந்த ஆசியாவின் ஒரே போட்டியாளராகவும் இவர் இருப்பது குறிப்பிடத்தக்கது. அனுதி பங்கேற்கும் Head-to-Head Challenge பிரிவின் இறுதி 20 பேர் பங்கேற்கும் இறுதிப் போட்டி 23 நடைபெறவுள்ளது.
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 11 மீனவர்கள் !
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் விமானம் மூலம் சென்னையை சென்றடைந்துள்ளனர்.
மீனவர்களை வரவேற்ற மீன்வளத்துறை அதிகாரிகள் அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில் இராமேஸ்வரம் அனுப்பி வைத்தனர்.
கடந்த ஜனவரி மாதம் 2 விசைப்படகுகளில் மீன்பிடித்த 11 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்து நேற்று விடுதலை செய்துள்ளனர்.
வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது
இலஞ்சம் வாங்கும்போது கைதுசெய்யப்பட்ட வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காணி பிணக்கு ஒன்று தொடர்பில் ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற முற்பட்டபோது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நேற்று (21) மாலை கைதுசெய்யப்பட்டிருந்தார்.
கொழும்பில் இருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. கைதுசெய்யப்பட்டவர் இன்றைய தினம் (22) வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாக கொண்டு 27ஆம் திகதி வரை அவரை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு 27ஆம் திகதிக்கு பின்னர் கொழும்பு நீதிமன்றுக்கு மாற்றப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கண்காணிப்பு பயணம்
முல்லைத்தீவு யோகபுரம் மகாவித்தியாலயத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (23) கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார்.
ஆளுநர் அவர்களை, பாடசாலை அதிபர் வரவேற்றதுடன் பாடசாலையைச் சுற்றிக் காண்பித்தார்.
யோகபுரம் மகாவித்தியாலயத்தில் மிகப் பரந்தளவில் முன்னெடுக்கப்பட்டுள்ள மரம் நடுகை மற்றும் தென்னங்கன்றுகள் நடுகை ஆகியனவற்றை ஆளுநர் பார்வையிட்டதுடன், இந்தச் செயற்பாட்டுக்காக பாடசாலைச் சமூகத்துக்கு பாராட்டுத் தெரிவித்தார்.