பலதும் பத்தும். 04.09.2025 - நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் அகில இலங்கை ரீதியில் சாதனை!
பஞ்சாப்பில் பெய்து வரும் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.
நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து!
நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நைஜீரியாவின் வட-மத்திய நைஜர் மாநிலத்தில் 80 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 29 பேர் உயிரிழந்துள்ளதோடு 15க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
காணாமல் போனவர்களை தேடும் பணி இடம்பெற்று வருகின்றது.
குறித்த படகு அதிக சுமையுடன் இருந்ததால், மரத்தின் அடிப்பகுதியில் மோதியதையடுத்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவே உயிரிழப்புக்கு காரணம்
யாழ்ப்பாணம், சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த கேதீஸ்குமார் கார்த்திகேயன் எனும் 7 வயது சிறுவன் பட்டம் விட்டு விளையடிக்கொண்டிருந்தபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
கடந்த 31 ஆம் திகதி குறித்த சிறுவன் பட்டம் விட்டுக்கொண்டிருந்தபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
அவரை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அங்கு சிறுவன் மயக்கமடைந்துள்ளார்.
ஆனால், சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று (03) மாலை அவர் உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனையில் மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவே உயிரிழப்புக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு கத்தோலிக்க போப் லியோ XIV
போரினால் பாதிக்கப்பட்ட சூடானில் துன்பப்படும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு கத்தோலிக்க போப் லியோ XIV சர்வதேச சமூகத்தை வலியுறுத்தினார்.
செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் தனது வாராந்திர கூட்டத்தில் பேசிய அவர், டார்பூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பேரழிவு, நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்யும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.
நாவற்குழியில் அமைக்கப்பட்டுள்ள நவீன கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலை
நாவற்குழியில் அமைக்கப்பட்டுள்ள நவீன கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலையான அன்னை ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் திறப்பு விழா நேற்று புதன்கிழமை (03) நடைபெற்றது.
நிகழ்வில் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகருடன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களும் கலந்து கொண்டு பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்து, நிறுவனத்தையும் திறந்து வைத்தார். அத்துடன் நிறுவனத்தின் செயற்பாடுகளையும் ஆளுநர் உள்ளிட்ட விருந்தினர்கள் பார்வையிட்டனர்.
நீரியல் மற்றும் கடல்சார் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.ஜே.கஹவத்த, யாழ்ப்பாண மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாண பிரதேச செயலர் சா.சுதர்சன், யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் அகிலன் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் அகில இலங்கை ரீதியில் சாதனை!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு- யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் அகில இலங்கை ரீதியில் சாதனை!
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன், தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் 194 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளான்.
யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயனின் இந்த சாதனை பாடசாலைக்கும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் லதாநந்தினி சிவபாதம் தெரிவித்துள்ளார்.


