பலதும் பத்தும். 23,10,2025 - படகு மூழ்கியதில் 40 பேர் உயிரிழப்பு!
அரசாங்கக் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை!
செம்மணி புதைகுழி: வெளிநாட்டு தொழில்நுட்ப உதவி பெற திட்டம்!
”செம்மணி புதைகுழி விவகாரத்தில் சர்வதேச தொழில்நுட்ப ஒத்துழைப்பு பெறப்படும். ஏனெனில் உண்மையை கண்டறிவதற்கு இது முக்கியம்.” – என்று நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு சர்வதேச ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்டுவரும் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” செம்மணி புதைகுழி அகழ்வு நடவடிக்கைக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எமக்கு சில விடயங்களில் ஆய்வுக்கூட வசதி இல்லை. எமது நாட்டு பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படவேண்டும். எமக்கு உண்மையை கண்டறிவதுதான் முக்கியம். தொழில்நுட்ப உதவியும் தேவைப்படுகின்றது. எனவே, சர்வதேச தொழில்நுட்ப உதவி பெறப்படும்.” – என்றார்.
லசந்த விக்ரமசேகர படுகொலை!
வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் 'மிடிகம லாசா' என்றழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் கறுப்பு ஆடையை அணிந்து இன்று எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்தனர்.
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர நேற்று காலை வெலிகம பிரதேச சபையில் உள்ள அவரது அறையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவரில் ஒருவர் கடிதம் ஒன்றில் கையெழுத்தை பெற்றுக்கொள்வதை போல் பிரதேச சபைத் தலைவரின் அறைக்குள் நுழைந்து அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதன்போது பலத்த காயமடைந்த தலைவர், மாத்தறை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
லசந்த விக்கிரமசேகர, பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் தற்போது சிறையில் உள்ள 'ஹரக் கட்டா' என்ற நதுன் சிந்தகவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் லசந்த விக்ரமசேகர படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் கறுப்பு ஆடையை அணிந்து இன்று எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்தனர்.
யாழ் போதனா வைத்தியசாலை – நீரிழிவு சிகிச்சை நிலையம்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை மையம் தற்போது வெளிநோயாளர் கட்டிடத் தொகுதியின் முதலாம் மாடியில் இயங்கிவருகிறது. இந்த மையத்தின் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், தற்போது இது வெளிநோயாளர் மற்றும் விபத்து சிகிச்சை கட்டிடத் தொகுதிகளுக்கு இடையிலான பகுதியில் இரத்தப் பரிசோதனை மாதிரிகளை வழங்கும் பகுதி இடமாற்றம் செய்யப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளது.
இந்த மாற்றத்தின் மூலம், நோயாளிகளுக்கு ஏற்படும் நெரிசல்கள் குறைக்கப்படுவதுடன், பரிசோதனைகளுக்காக இரத்த மாதிரிகளை வழங்கும் நபர்கள் இலகுவாக இப்பகுதியில் தேவையான சேவைகளை பெற முடிகின்றது.
தினசரி 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் இலகுவாகவும் முறையான முறையிலும் சேவைகளை பெறக் கூடிய சூழல் இங்கு உருவாகியுள்ளது. ஆகவே இரு இடங்களில் சேவைகள் வழங்கப்படுகிறது.
மேற்படி நீரிழிவு சிகிச்சை நிலையத்தில் இதுவரை 40,000 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். புதிதாக பதிவாகும் நோயாளி ஒருவருக்கு அனைத்துவிதமான பரிசோதனைகள் (Screening) மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் சிகிச்சை வழங்கப்படுகிறது. பின்னர், வருடந்தோறும் நடைபெறும் பரிசோதனையின் (Annual Screening) மூலம், சிக்கல்களின் வளர்ச்சி நிலை மதிப்பீடு செய்யப்படுகின்றது; தேவைப்பட்டால் சிகிச்சை முறையிலும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
கடந்த 15 வருடங்களாக, இச்சிகிச்சை மையத்திற்கு சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் (International Medical Health Organization – USA) தொடர்ந்து மேலதிக அனுசரணைகளும் ஆதரவுகளும் வழங்கி வருகின்றது. இவ்வாறு நீடித்த பங்களிப்புகள், இந்நிலையின் வளர்ச்சிக்கும், நோயாளிகளுக்கான தரமான சேவைகளுக்கும் பெரும் பங்களிப்பாக உள்ளன.
ஆஸ்திரேலிய தேசிய பாதுகாப்புக் கல்லூரி!
ஆஸ்திரேலிய தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் கர்னல் Brandon Wood தலைமையிலான ஆஸ்திரேலிய தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறியைப் பயிலும் மாணவர்கள் குழு, 2025 அக்டோபர் 21 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சற்திப்பிற்காக சந்தித்தனர்.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இலங்கையில் உள்ள ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் Amanda Johnston கலந்து கொண்டார், மேலும் கடற்படைத் தளபதிக்கும் ஆஸ்திரேலிய தூதுக்குழுவிற்கும் இடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
மேலும், இந்த அதிகாரப்பூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசு பரிமாற்றம் நடைபெற்றது.
ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாணந்துறையிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெள்ளவத்தை ரயில் நிலையத்துக்கருகில் நேற்று (22) மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்த நேரத்தில், உயிரிழந்தவர் கருப்பு நிற காற்சட்டை, வெள்ளையும் வெளிர்நீல நிற குட்டைக் கை சட்டையும் அணிந்திருந்துள்ளார். உயிரிழந்தவருக்கு சுமார் 60 வயது இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
படகு மூழ்கியதில் 40 பேர் உயிரிழப்பு!
ஐரோப்பா சென்ற படகு கடலில் மூழ்கியதில் குழந்தைகள் உட்பட சுமார் 40 பேர் உயிரிழப்பு!
ஐரோப்பாவிற்கு குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கடலில் மூழ்கியதில், சிறு குழந்தைகள் உட்பட சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன.
இந்தத் துயரச் சம்பவம் துனிசியாவை (Tunisia) அண்டிய மத்தியதரைக்கடல் பகுதியில் நேற்று (22) நிகழ்ந்துள்ளது. விபத்துக்குள்ளான படகில் 70-க்கும் மேற்பட்டோர் பயணித்ததாகத் தெரியவந்துள்ளது.துனிசிய அதிகாரிகள் விரைந்து செயற்பட்டதன் காரணமாக 20 பேர் வரை உயிருடன் மீட்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஐரோப்பாவை நோக்கிப் பயணிக்கும் குடியேற்றவாசிகள் எதிர்கொள்ளும் ஆபத்தை இந்த விபத்து மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
சீரற்ற வானிலை!
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையால் 3,036 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 12,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக 14 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்தங்கள் காரணமாக நான்கு உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
அண்மைய நாட்களில் தொடர்ந்து பெய்த மழையால் சுமார் 480 வீடுகள் சேதமடைந்துள்ளன.
பாதகமான வானிலையால் ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்பட்டால் 117 என்ற துரித இலக்கத்தின் மூலமாக தொடர்பு கொள்ளுமாறும் DMC பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
வன்முறை கும்பலை சேர்ந்த இளைஞன் உள்ளிட்ட இருவர் போதைப்பொருளுடன் கைது!
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலை சேர்ந்த இளைஞன் உள்ளிட்ட இருவர் ஐஸ் போதை பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையிலையே இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இருவரிடமிருந்தும் 20 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், வன்முறை கும்பலை சேர்ந்தவரின் உடமையில் இருந்து சிறிய கத்தி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை வன்முறை கும்பலை சேர்ந்த இளைஞனின் தந்தை யாழ். மாநகர சபை உறுப்பினரின் மகன் எனவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.
அரசாங்கக் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை!
2025 ஆம் ஆண்டில் இதுவரை வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 672 ஏக்கர் அரசாங்கக் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
விடுவிக்கப்பட்ட காணிகளில் 86.24 ஏக்கர் தனியார் காணிகளும், இராணுவப் பயன்பாட்டில் இருந்த 586 ஏக்கர் காணிகளும் அடங்குவதாக அவர் கூறினார்.
குறித்த காணிகள் தொடர்பான தகவல்கள், பாதுகாப்புச் சபை மற்றும் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு இந்த விடுவிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் கூறினார்.
கிழக்கில் மட்டும் 34.58 ஏக்கர் அரசாங்கக் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர கூறினார்.
போதை மாத்திரை வியாபாரியான 20 வயதுடைய இளைஞன் உள்ளிட்ட இருவர் கைது!
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரை வியாபாரி உள்ளிட்ட இருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் 20 வயதுடைய போதை மாத்திரை வியாபாரியை கைது செய்ததுடன் , வியாபாரியிடம் மாத்திரைகளை வாங்க வந்த 22 வயதுடைய நபரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து 110 போதை மாத்திரைகளை காவல்துறையினா் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்


