கடந்தகால கொள்கைத்தவறுகளை சீரமைக்க அதிக விலை செலுத்தவேண்டிய நிலையில் மக்கள் - ஐ.எம்.எப்பின் முன்னாள் செயற்றிட்டப் பிரதானி!
,

இலங்கையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தவறான கொள்கைத் தீர்மானங்கள் மற்றும் நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தம் இன்மை என்பவற்றின் விளைவாக ஏற்பட்ட நெருக்கடியைச் சீரமைப்பதற்கு துரதிர்ஷ்டவசமாக தற்போது மக்கள் அதிக விலையைச் செலுத்திவருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான முன்னாள் செயற்றிட்டப் பிரதானி பீற்றர் ப்ரூயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் எழுப்பப்பட்ட நூல் வெளியீட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
இன்றளவிலே அத்தியாவசிய சேவை வழங்கலுக்கு நிதி அளிக்கக்கூடிய மட்டத்துக்கு அரசாங்கத்தின் இயலுமை விரிவடைந்திருப்பதற்கு வரி செலுத்துபவர்கள் அவர்களது தோள்களில் அதிக சுமையைச் சுமப்பதே காரணமாகும்.
அதேபோன்று தற்போது எரிபொருள் மற்றும் மின்கட்டணங்கள் முழுவதுமாக பயனாளர்களாலேயே செலுத்தப்படுகிறது. இதன் மூலம் அரசுக்குச் சொந்தமான நிதியை சமூகப் பாதுகாப்பு செயற்றிட்டங்கள் உள்ளடங்கலாக முன்னுரிமை அளிக்கப்படவேண்டிய விடயங்களுக்கு ஒதுக்கீடு செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இலங்கை தற்போதைய நலிவடைந்த நிலையிலிருந்து முழுமையாக மீட்சியடைவதற்கும், 2022ஆம் ஆண்டு முகங்கொடுக்க நேர்ந்ததைப் போன்ற மிக மோசமான நெருக்கடியொன்று மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் இந்தத் தியாகங்கள் இன்றியமையாதனவாகும்.
நான் 2022ஆம் ஆண்டு அதிகாலை 4 மணிக்கு இலங்கையில் தரையிறங்கியபோது கார்கள், லொறிகள், கனரக வாகனங்கள் அனைத்தும் மிக நீண்ட வரிசைகளில் நிற்பதைப் பார்த்தேன்.
மக்கள் அனைவரும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் காத்திருந்ததால் பகல் வேளைகளில் பொருளாதார செயற்பாடுகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் எவையும் தென்படவில்லை. அவ்வேளையில் மின்துண்டிப்பும் நடைமுறையில் இருந்தது. மின்துண்டிப்பின் விளைவாக நாம் அவ்வப்போது இருண்ட அறைகளில் அமர்ந்திருந்தோம்.
இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்றிட்டம் அமுல்படுத்தப்பட்டு இரண்டு வருடங்களில் குறிப்பிட்டுக் கூறத்தக்க முக்கிய அடைவுகளை எட்டுவதற்கு ஏதுவான மிகக் கடினமான மறுசீரமைப்புக்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதுமாத்திரமன்றி எரிபொருள், சமையல் எரிவாயு, மருந்துப் பொருட்களுக்கான வரிசைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. மின்துண்டிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. நெருக்கடியிலிருந்து மீண்ட பொருளாதாரம், கடந்த ஆண்டு 5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இவ்விடயத்தில் இலங்கை மக்களின் அர்ப்பணிப்புக்கும் தியாகத்துக்கும் நன்றி கூறுகிறேன் என்று தெரிவித்தார்.