“உனக்கெல்லாம் கபடி கேட்குதா? எனக் கேட்டு ஓட ஓட வெட்டியுள்ளனர்”- தூத்துக்குடி மாணவனின் தாய் கண்ணீர் பேட்டி!
“என் மகனுக்கு கபடி என்றால் மிகுந்த ஆர்வம். கபடி விளையாடிய இடத்தில் பிரச்னை .சாதிய மோதல் காரணமாகதான் தாக்கியுள்ளனர்.

திறமையாக கபடி விளையாடும் என் மகன் மீது சாதிய பாகுப்பாட்டின் காரணமாக ’உனக்கெல்லாம் கபடி கேட்டுதா?' எனக் கேட்டு ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளனர் என்று பாதிக்கப்பட்ட மாணவரின் தாய் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவர் நேற்று முன்தினம் பொதுத் தேர்வு எழுத ஊரில் இருந்து பேருந்தில் நெல்லைக்கு சென்றார். அப்போது இளம் சிறார்கள் மூன்று பேர் 11ஆம் வகுப்பு மாணவரை பேருந்தில் இருந்து இறக்கி அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதில் மாணவருக்கு தலை கை மற்றும் விரல்களில் வெட்டு விழுந்தது. குறிப்பாக வெட்டுவதை தடுத்தபோது ஒரு கையில் மூன்று விரல்களும் மற்றொரு விரலில் ஒரு விரலும் துண்டானது. இந்நிலையில் இவர் படுகாயங்களுடன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு துண்டான விரல்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் ஒட்ட வைத்துள்ளனர். அவரது தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய பாதிக்கப்பட்ட மாணவரின் தாய், “என் மகனுக்கு கபடி என்றால் மிகுந்த ஆர்வம். அவன் கபடி விளையாடிய இடத்தில் ஏதோ பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஒரு மாத காலமாக இந்த பிரச்னை இருந்துள்ளது. ஆனால், என்னிடம் என் மகன் இதுகுறித்து கூறவில்லை. சாதிய மோதல் காரணமாகதான் என் மகனை தாக்கியுள்ளனர். தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்ததால் என் மகன் அவர்களுக்கு முன் நன்றாக விளையாடுவது பொறுக்காமல், இதுபோன்று செய்துள்ளனர் என்று அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் அவர் ஆதங்கத்துடன் கூறும்போது, "என் மகன் திறமையான விளையாட்டு வீரர். ஆனால் அவனது சாதியை கருத்தில் கொண்டு அவன் கபடி விளையாடக் கூடாது. முன்னேறிவிட கூடாது. என நினைத்து இதுபோன்று தாக்கியுள்ளனர். இன்று என் மகன் காலையில் என்னிடம் பேசினான், அப்போது அவன், ' என்னை வெட்ட வந்தவர்கள் சாதி பெயரைச் செல்லி ’உனக்கெல்லாம் கபடி விளையாட்டு தேவையா?’ எனக் கேட்டு, ஓட ஓட விரட்டி வெட்டினர்' என கூறினான். இதுபோன்ற நிகழ்வு மீண்டும் நடக்கக் கூடாது. அரசு இதுகுறித்து உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் அவர் கண்ணீர் மல்க.
தையடுத்து, பேசிய தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட பொறுப்பாளரும், நெல்லை நீதிமன்ற வழக்கறிஞருமான பழனி, "சாதிய பிரச்னையால் மிக கொடூரமாக மாணவனை வெட்டியுள்ளார்கள். அவனது, தலை கையில் வெட்டி விழுந்துள்ளது. விரல்கள் துண்டாகி உள்ளன. 16 வயது முதல் 18 வயது வரை உள்ள இளம் சிறார்கள் இதுபோன்று திட்டமிட்டு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் அவர்களை மேஜராக கருதி (adult) விசாரிக்கலாம் என சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே அதன்படி இந்த வழக்கில் ஏற்கெனவே போலீசார் வன்கொடுமை வழக்கு பதிந்திருந்தாலும் கூட குற்றவாளிகள் 16 வயதை கடந்தவர்கள் என்பதால் அவர்களை மேஜராக கருதி சரியான தண்டனை பெற்று தர வேண்டும்.” என்றார்.