சாமர சம்பத் எம்.பிக்கு பிணை!
,

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு பிணை வழக்கங்க கொழும்பு நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஏற்பட்ட ஒரு முறைகேடு தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் (07) காலை பதுளை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை, ஏப்ரல் 21 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.
இந்த நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு பிணை வழக்கங்க கொழும்பு நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று (08) காலை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
இன்று (08) இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் தனூஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேக நபரான சாமர சம்பத் தசநாயக்கவை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஐந்து சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிட்டார்.
மேலும், சந்தேக நபரின் வெளிநாட்டுப் பயணங்களைத் தடை செய்யவும் உத்தரவிடப்பட்டது.
2016 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபையின் முதலமைச்சராகப் பணியாற்றிய சாமர சம்பத் தசநாயக்க, அம்மாகாணத்தில் உள்ள முன்பள்ளி மாணவர்களுக்கு பைகள் வழங்குவதற்காக ஒரு அரச வங்கியிடம் நிதி உதவி கோரினார்.
ஆனால், அந்த வங்கி அவரது கோரிக்கையை நிராகரித்ததை அடுத்து, ஊவா மாகாண சபைக்கு சொந்தமான 06 நிரந்தர வைப்பு கணக்குகளை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டுவந்து, அந்தப் பணத்தை எடுத்தார். இதன் காரணமாக, மாகாண சபைக்கு 17.3 மில்லியன் ரூபாய்க்கு (173 லட்சம் ரூபாய்) மேல் நட்டம் ஏற்பட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.