சட்டவிரோதமான முறையில் கனடா செல்ல முயன்றவர்கள் கைது!
இந்தப் பயணத்திற்காக தரகர்களுக்கு 4.5 மில்லியன் ரூபா பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் கனேடிய விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குச் செல்ல முயன்ற 11 இலங்கையர்களும், அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்து வந்த ஒரு தரகரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள் குழுவினால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு, களுத்துறை, பதுளை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் 35 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.
குறித்த நபர்கள் மாலை 6.40 மணியளவில் துபாய்க்குப் புறப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் UL-225 ஏறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர்கள் துபாய்க்கு சென்று, அங்கிருந்து கனடாவின் டொராண்டோவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட நேரத்தில் அவர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவைப் பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டநபர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், விமான நிலையத்தில் அவர்களை இறக்கிவிட வந்து விமான நிலைய புறப்பாடு முனையத்தில் காத்திருந்த தரகரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட தரகரைத் தவிர, மற்றொரு தரகர் நாட்டிற்குள் இருந்து அவர்கள் நாட்டை விட்டு வெளியேற தேவையான அனைத்து போலி ஆவணங்களையும் தயாரித்துள்ளார்.
மேலும் கனடாவில் அவர்களுக்கு உதவி செய்து வரும் மற்றொரு தரகர் இருப்பதும் தெரியவந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில் ஒவ்வொரு நபரும் ஒரு மில்லியன் ரூபா செலுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. இந்தப் பயணத்திற்காக தரகர்களுக்கு 4.5 மில்லியன் ரூபா பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்திற்காகப் புறப்படுவதற்காக அவர்கள் அனைவரும் கடந்த 17 ஆம் திகதி முதல் மினுவாங்கொடை பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட குழுவினரை மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.