"ரஜினியின் கூலி’'. 'கூலி' படப்பிடிப்பு நிறைவு பெற்றிருப்பதாக பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
’கூலி’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையினை அமேசான் ப்ரைம் நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ’கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்று ’கூலி’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் இத்திரைப்படம், தமிழ் சினிமாவில் இருந்து உருவாகும் பான் இந்தியா படமாக இருக்கும். இப்படத்தில் ரஜினிகாந்துடன் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாகிர் என வெவ்வேறு மொழியைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.
இவர்களுடன் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகரான அமீர்கான் சிறப்புத்தோற்றத்தில் நடிக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் அமீர்கான் பிறந்தநாளன்று அறிவித்திருந்தார். இவர்களுடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹேக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த நிலையில், 'கூலி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றிருப்பதாக பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 20 விநாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திட்டமிட்டபடி ஏப்ரல் மாதத்திற்கு முன்பாகவே 'கூலி' படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கூலி திரைப்படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த ’ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட மாதம் தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பே 'விக்ரம்', 'லியோ' என வசூல் சாதனை செய்த படங்களை கொடுத்திருப்பதால் 'கூலி' படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்துடன் இணைய வேண்டும் எனவும் ரஜினி ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர். இந்த படத்தில் தேவா என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். ‘கூலி’ திரைப்படத்தின் அறிவிப்பிற்காக வெளியிடப்பட்ட ப்ரோமோ வீடியோவில் ரஜினியின் சண்டைக் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. மேலும் இந்த ப்ரோமோ மூலம் இப்படம் தங்கம் கடத்தல் தொடர்பான கதையாக இருக்கக்கூடும் எனவும் கூறப்பட்டு வருகிறது. ’கூலி’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையினை அமேசான் ப்ரைம் நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் 120 கோடி ரூபாய் எனும் பெரும் விலையில் இந்த உரிமம் வாங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. முதலில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திடம் தான் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அமேசான் ப்ரைம் நிறுவனம் அதிக விலை கொடுக்க தயாராக இருந்ததால், அந்நிறுவனத்துக்கு ஓடிடி உரிமையினை கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜின் சினிமா உலகமான LCU யுனிவர்சில் இந்த படம் இடம்பெறுமா என்ற கேள்வியை இந்த படம் தொடங்கியதில் இருந்தே ரசிகர்கள் கேட்டு வந்தனர். ஆனால் இப்படம் LCUவில் இடம்பெறாது எனவும் இது தனிக்கதை எனவும் லோகேஷ் கூறியுள்ளார்.
இந்நிலையில் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளையொட்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கூலி படத்தின் பாடல் முன்னோட்ட வீடியோ ஒன்று வெளியானது. அந்த பாடலும் முழுமையாக வெளியாகவில்லை.படப்பிடிப்பு முடைவடைந்த நிலையில் அடுத்தடுத்த அப்டேட் வரக்கூடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 'கூலி' படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக நெல்சன் இயக்கம் 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். அதற்கடுத்து யார் படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற எந்த தகவலும் வரவில்லை.