மனோஜ் பாராதிராஜாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய விஜய், சூர்யா... சோகத்தில் தமிழ் திரையுலகம்!
மனோஜ் பாரதிராஜாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இயக்குநர் பாரதிராஜாவின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் இயக்குநர் இமயம் என அழைக்கப்படும் பாரதிராஜாவின் மகனும் நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா நேற்று (மார்.25) மாரடைப்பால் சென்னையில் காலமானார். 48 வயதான மனோஜ் பாரதிராஜா சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் இருந்தத போது நேற்று மாலை 6 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்திருந்த மனோஜ் அவரது வீட்டில் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் அரசியல் ஆளுமைகள் என பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மனோஜ் பாரதிராஜாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இயக்குநர் பாரதிராஜாவின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் இயக்குநர் பாரதிராஜாவின் இல்லத்திற்கு நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தி அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தலைவருமான கமல்ஹாசன், எக்ஸ் தளத்தில் தனது இரங்கலை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், “நடிகரும் எனது ஆத்ம நண்பர் இயக்குநர் பாரதிராஜாவின் புதல்வனுமான மனோஜ் பாரதிராஜா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். தனது அருமை மகனை இழந்து வாடும் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
நடிகர் சூர்யா நேரில் சென்று மனோஜுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது உடல் அருகிலேயே அமர்ந்திருந்த பாரதிராஜாவுடன் அமர்ந்து தனது ஆறுதலை தெரிவித்தார். முன்னதாக சூர்யாவின் சகோதரர் கார்த்தி நேற்று இரவே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மனோஜ் பாரதிராஜா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் பாரதிராஜா வீட்டிற்கு அருகில் தான் விஜய்யின் வீடு உள்ளதால் நடந்து சென்று மனோஜ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார்.
நடிகர்கள் செந்தில், சரத்குமார், சுஹாசினி, குஷ்பு, பிரபு, இயக்குநர்கள் கே எஸ் ரவிக்குமார், பி வாசு, மணிரத்னம், கார்த்திக் சுப்பராஜ் மற்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் நேரில் சென்று மனோஜ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார். இயக்குநர் வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், “மனோஜின் இந்த செய்தியைக் கேட்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. நீங்கள் இனி இல்லை என்பதை நம்ப முடியவில்லை சகோதரா. மனோஜ் சீக்கிரமாக சென்றுவிட்டீர்கள். பாரதிராஜா மாமாவிற்கும் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்” என இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகரும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை குஷ்பு தனது எக்ஸ் பக்கத்தில், “மனோஜ் நம்முடன் இல்லை என்ற செய்தியை கேட்பதற்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. அவருக்கு வெறும் 48 வயது தான் ஆகிறது. அதற்குள் இந்த இழப்பை தாங்க முடியவில்லை. இவ்வலவு பெரிய இழப்பை தாங்கிக்கொள்ள எதிர்கொள்ள அவரது தந்தை பாரதிராஜாவிற்கு மிக அதிகமான மன வலிமையை கடவுள் கொடுப்பார்” என இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாடலாசிரியர் வைரமுத்து மனோஜ் பாரதிராஜாவிற்கு இரங்கல் தெரிவித்து கவிதை ஒன்றை எழுதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பாரதிராஜாவிற்கும் மனோஜிற்குமான பாசம், வைரமுத்திவிற்கு மனோஜிற்குமான அன்பு என எழுதியுள்ளார். ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் மனோஜின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நேற்று மாலை உயிரிழந்த மனோஜ் பாரதிராஜாவின் உடல் இரவே சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவரது இல்லத்திலிருந்து சென்னை நீலாங்கரையில் உள்ள இயக்குநர் பாரதிராஜா இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மனோஜ் பாரதிராஜாவின் உடல் இன்று புதன்கிழமை மாலை 3 மணி வரை நீலாங்கரை இல்லத்தில் திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன் பிறகு அவரது இறுதி சடங்கு மாலை 4:30 மணி அளவில் பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.