"பாஜகவுடன் கூட்டணி வருத்தமாக இருந்தாலும் கட்சியின் நலன் முக்கியம்" - கண்ணீர்விட்டு கதறிய அதிமுக கவுன்சிலர்!
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும்.

பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருப்பது இஸ்லாமியர்களுக்கு வருத்தமளிக்கலாம். ஆனால் இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்று அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் கவுன்சிலர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் இன்று திருப்பூரில் நடைபெற்றது. பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ குணசேகரன், மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடாவும், மாமன்ற அதிமுக உறுப்பினருமான கண்ணப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய மாமன்ற உறுப்பினருமான கண்ணப்பன், "அதிமுக என்ற இயக்கத்தை காப்பற்ற வேண்டி எடப்பாடி பழனிச்சாமி போராடி வருகிறார். கட்சியை காப்பற்ற வேண்டிய கடமை உள்ளது. இந்த கூட்டணியை பார்த்து இஸ்லாமியர்கள் கவலை அடைய வேண்டாம். அதிமுக எப்போதும் உங்களுடன் இருக்கும். தற்போது பாஜக கூட்டணியில் நான் இருக்க வேண்டிய நிர்பந்தமாக உள்ளது.
அதிமுக இன்று இக்கட்டான சூழலில் உள்ளது. கூட்டணிக்காக கட்சியைவிட்டு வெளியேறமாட்டேன். நமது இலக்கு எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக்குவது. அதனால் இந்த கூட்டணியை நாம் ஏற்று இலக்கை நோக்கி நகர வேண்டும்." என கண்ணீருடன் கேட்டு கொண்டார்.
இந்நிலையில் இதுகுறித்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ குணசேகரனிடம் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “ கூட்டணி குறித்து எந்த வருத்தமும் இல்லை. மாமன்ற உறுப்பினர் கண்ணப்பன் அவ்வாறு கூறவில்லை. இயக்கத்தின் நலனுக்காக கூட்டணி அமைத்துள்ளோம் என கூறினார். திமுகதான் மதத்தை வைத்து அரசியல் செய்து வருகிறது. இஸ்லாமியர்களுடன் அதிமுக துணை நிற்கும்” என்றார்.