உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் : கோட்டபய ராஜபக்ஷவுக்கு வெளிநாட்டு பயணத்தடை, கலக்கமடைந்த அனைவரும் சத்தியாகிரக போராட்டத்தில்!
விசாரணைகளை சலேவுடன் நிறுத்தவே போராடுகிறார்கள் ; உண்மை ஓரிரு மாதங்களில் வெளிவரும் - நீதியமைச்சர்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டபோது எலி, கரப்பான்பூச்சி ஓடுகிறது என்று எவரும் குறிப்பிடவில்லை. தாய், மனைவி என்று எவரும் வரவில்லை. கோட்டபய ராஜபக்ஷவுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்த பின்னர் கலக்கமடைந்து அனைவரும் வெளியில் வந்து சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு திணறுகிறார்கள். சுரேஷ் சலேவுக்காக இவர்கள் இன்று ஒன்றிணையவில்லை. எப்படியாவது போராடி விசாரணைகளை சலேவுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும், அதற்கு மேல் சென்றால் பிரதான சூத்திரதாரி வெளிப்படுவார் என்பதை இவர்கள் நன்கு அறிவார்கள். இன்னும் ஓரிரு மாதங்களில் உண்மை வெளிவரும். திணறுபவர்கள் திணறட்டும். மக்கள் தெளிவாகவே உள்ளார்கள் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற அவசரகால சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
எம்மை விமர்சிப்பதற்கும், கேள்வி கேட்பதற்கும் நாட்டு மக்களுக்கு முழு உரிமை உண்டு. ஆனால் அந்த உரிமை அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கும், படுகொலையாளிகளுக்கும் கிடையாது. ஒருவரின் உரிமை பிறிதொருவருக்கு இடையுறாக அமைய கூடாது. நாட்டு மக்களின் பேச்சுரிமை மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக அரசாங்கம் செயற்படவில்லை. இதனால் தான் பலர் போலி முகப்பு புத்தக கணக்குகள் ஊடாக போலியாக பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
பயங்கரவாத தடைச்சட்டம்
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வோம் என்று நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவோம். பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்து அதற்கு பதிலாக புதிய சட்டமொன்றை இயற்றுவதற்கான நடவடிக்கைகள் நிறைவடையும் கட்டத்தில் உள்ளன. இன்னும் ஓரிரு மாதங்களில் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.
கிளிநொச்சி இளைஞன் கைது
மேடையில் பாடல் பாடியதற்காக தமிழ் இளைஞர் கைது செய்யப்பட்டதாக எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஒருவர் சபையில் குறிப்பிட்டார்.இது முற்றிலும் தவறு. அந்த இளைஞன் மேடையில் பாடல் பாடியதற்காக கைது செய்யப்படவில்லை. குறித்த பாடலை பாடி,அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ததற்காகவே கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாதம் தொடர்பான 2011 ஆம் ஆண்டு திருத்தச் சட்டத்தின் பிரகாரமே இந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். பேச்சுரிமை என்பது வடக்குக்கும், தெற்குக்கும் ஒன்றாகவே காணப்படுகிறது. தமிழ், முஸ்லிம் என்பதால் சட்டம் குறைவாகவும், சிங்களம் என்பதால் சட்டம் அதிகமாகவும் வழங்கப்படவில்லை.
விடுதலை புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் வார்த்தைகளை சமூக ஊடகங்கள் ஊடாக பகிர்ந்த காரணத்தால் தான் இவர் கைது செய்யப்பட்டார். நாட்டில் இன்றும் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் தான் உள்ளது. இந்த இளைஞனுக்கு இன்னும் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. ஆகவே நீதிமன்றத்தை நாடி பிணைப்பெற்றுக்கொள்ள முடியும். பேச்சு சுதந்திரம் என்று குறிப்பிட்டுக் கொண்டு முறையற்ற வகையில் செயற்பட கூடாது.
நீதிபதி அலெக்ஸ் ராஜா இடமாற்ற விவகாரம்
நீதிபதி அலெக்ஸ் ராஜா இடமாற்றம் தொடர்பிலும் எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்கள். நீதிபதிகளின் இடமாற்றம், பதவி உயர்வு மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளில் நிறைவேற்று அதிகாரமோ, அரசாங்கமோ தலையிடுவதில்லை. அரசியலமைப்பு ஊடாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள நீதிச்சேவைகள் ஆணைக்குழு ஊடாகவே அப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த கால அரசாங்கங்கள் அரசியல் தலையீட்டுடன் நீதிபதிகளை இடமாற்றம் செய்திருக்கலாம். நாங்கள் அவ்வாறு செய்ய போவதில்லை. எவருக்கேனும் பிரச்சினைகள் காணப்பட்டால் அது குறித்து நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு அறிவித்து, அங்கு தீர்வு பெற்றுக்கொள்ளலாம்.
சுரேஷ் சலே விவகாரம்
சுரேஷ் சலே மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வு மற்றும் விசாரணை தரப்பினர் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள். நீதிமன்றம் உரிய தீர்மானத்தை அறிவிக்கும்.இதில் எவ்வித அரசியல் தலையீடும் கிடையாது.
சுரேஷ் சலே 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட போது எவரும் அவரை நினைக்கவில்லை. சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடவில்லை, முள்ளங்கியும், சோறும் சாப்பிடுவதாக குறிப்பிடவில்லை. தீ வைத்துக் கொள்வதாக குறிப்பிடவில்லை, தாய், மனைவி என்று வரும் வரவில்லை. கோட்டபய ராஜபக்ஷவுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்தவுடன் அனைவரும் கலக்கமடைந்து வெளியில் வந்துள்ளார்கள்.
90 நாட்கள் சலேவுக்கு நல்ல சாப்பாடு தான் கிடைத்தது. கோட்டாவுக்கு பயணத்தடை விதித்த பின்னரா சோறும், முள்ளங்கியும் கிடைத்தது. கோட்டை புகையரத நிலையம் முன்பாக சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்தார்கள். 20 பேர்கூட அங்கு இருக்கவில்லை. சுரேஷ் சலேவுக்காக இவர்கள் இன்று ஒன்றிணையவில்லை.எப்படியாவது போராடி விசாரணைகளை சலேவுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும், அதற்கு மேல் சென்றால் பிரதான சூத்திரதாரி வெளிப்படுவார் என்பதை இவர்கள் நன்கு அறிவார்கள். அதற்காகவே திணறுகிறார்கள். அனுதாபத்தை தக்கவைத்துக் கொள்ளவே இவர்கள் முயற்சிக்கிறார்கள்.
குண்டுத்தாக்குதலில் 278 பேர் கொல்லப்பட்டார்கள், 500 பேர் வரை படுகாயமடைந்தார்கள். இவர்கள் பற்றி ஒருசில ஊடகங்கள் பேசுவதில்லை. சரத் பொன்சேகாவை சிறைக்கு அனுப்பும் போது இராணுவத்தினர் பாதுக்கப்பட வேண்டும் என்ற கொள்கை எங்கு சென்றது. குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான உண்மை இன்னும் ஓரிரு மாதங்களில் வெளிவரும் திணறுபவர்களை பொருட்படுத்த போவதில்லை. மக்கள் தெளிவாகவே உள்ளார்கள் என்றார்.


