மலையை எதிர்பார்த்து மடுவாக மாறிய கோட்டை ஆர்ப்பாட்டம்: சுரேஷ் சலேவுக்கு மக்கள் ஆதரவு இல்லை!
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கடந்த பிப்ரவரி மாதம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்ட சுரேஷ் சலே!
இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஒரு போராட்டம், இன்று (ஜூன் 08) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாகக் களையிழந்து காணப்பட்டது. முன்னாள் அரச புலனாய்வுச் சேவை (SIS) பிரதானி சுரேஷ் சலேவுக்கு ஆதரவாகக் கொடிபிடிக்க முன்னாள் அமைச்சர்கள் தயாராக இருந்தும், மக்கள் மத்தியில் அதற்கு எவ்வித வரவேற்பும் இல்லை என்பது இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கடந்த பிப்ரவரி மாதம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்ட சுரேஷ் சலே, தற்போது விளக்கமறியலில் உள்ளார். சிறையில் அவருக்கு முறையான வசதிகள் வழங்கப்படவில்லை எனவும், அவர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் சமீபத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, சுரேஷ் சலே மீதான நடவடிக்கைகளைக் கண்டித்து ஒரு மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டம் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து அரசுக்கு பாரிய அழுத்தத்தைக் கொடுப்பார்கள் என ஏற்பாட்டாளர்கள் தரப்பில் மிகப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டது.
ஆனால், கள நிலவரமோ முற்றிலும் வேறாக இருந்தது. கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான மக்களே கூடியிருந்தனர். முன்னணியில் நின்று முழக்கமிட வந்திருந்த முன்னாள் அமைச்சர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும், பின்னால் மக்கள் கூட்டம் இல்லாதது பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தின் தோல்வி, இலங்கை அரசியலில் பல செய்திகளைச் சொல்லாமல் சொல்கிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற உணர்திறன் மிக்க விவகாரங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்க சாதாரண மக்கள் தயாராக இல்லை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. மேலும், கடந்த அரசாங்கத்தின் முன்னாள் முக்கியஸ்தர்கள் விடுத்த அழைப்பை மக்கள் முற்றாக நிராகரித்துள்ளமையும் இதன் மூலம் தெளிவாகிறது.
சுரேஷ் சலே விவகாரத்தை வைத்து மீண்டும் அரசியல் லாபம் தேட நினைத்த தரப்பினருக்கு, இன்றைய கோட்டை ஆர்ப்பாட்டம் ஒரு மிகப்பெரிய ஏமாற்றமாகவே அமைந்தது.


