பலதும் பத்தும். 24.10.2025 - இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 50 பொது மக்களின் நினைவேந்தல் நிகழ்வு!
இலங்கை பெண் உத்தரபிரதேசத்தில் சடலமாக மீட்பு!
சட்டவிரோத மீன்பிடி
சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 28 பேர் கைப்பற்றப்பட்டனர்,
இலங்கை கடற்படையினர், யாழ்ப்பாண சிறப்பு அதிரடிப் படையுடன் இணைந்து, கடந்த பதினைந்து நாட்களில் (2025 அக்டோபர் 08 முதல் அக்டோபர் 19 வரை) உள்ளூர் நீர்ப்பரப்புகளை உள்ளடக்கிய வகையில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட, இருபத்தெட்டு (28) சந்தேக நபர்களுடன், எட்டு டிங்கி படகுகளை கைப்பற்றினர்.
அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையால் திருகோணமலையில் உள்ள இறக்கண்டி, நல்லூர், பரவிடுபத, கொடிமுனை, நாயாறு, வெருகல்மொஹொட்டுவரம், சுதைக்குடா ஆகிய கடற்கரை மற்றும் கடல் பகுதிகளிலும், வடக்கு கடற்படை கட்டளையால் யாழ்ப்பாணத்தில் பருத்தித்துறை கடற்கரை மற்றும் கடல் பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், யாழ்ப்பாண காவல்துறை சிறப்பு அதிரடிப் படையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டன. மீன்பிடி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
மேலும், இந்த நடவடிக்கைகளில் பிடிபட்ட சந்தேக நபர்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடி படகுகள் திருகோணமலை, ஈச்சலம்பத்துவ, குச்சவெளி, கோட்பே, யாழ்ப்பாணம் பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களில் உள்ள மீன்வள அலுவலகங்களில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன.
இந்தியாவில் 2025 ஆம் ஆண்டிற்கான ஐ.நா. படை பங்களிப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாடு
இந்தியாவில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டிற்கான ஐ.நா. படை பங்களிப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் இராணுவத் தளபதி பங்கேற்பு. ஐக்கிய நாடுகள் சபையின் படை பங்களிப்பு நாடுகளின் தலைவர்களுக்கான மாநாடு 2025, இந்தியா புதுதில்லியில் 2025 ஒக்டோபர் 14 முதல் 16 ஆம் திகதி வரை இந்தியா இராணுவத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டில், உலகில் உள்ள சிரேஷ்ட இராணுவத் தளபதிகளை ஒன்றிணைத்து ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் நடவடிக்கைகளின் எதிர்காலம் குறித்து கலந்துரையாடப்பட்டது. இந்த மாநாடு சிரேஷ்ட இராணுவ தளபதிகள் மற்றும் படையினரை வழங்கும் 32 நாடுகளின் பிரதிநிதிகளிடையே கலந்துரையாடலை மேற்கொள்ளும் ஒரு முக்கிய தளமாக அமைந்தது. இலங்கை இராணுவத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் மாபலகம அவர்கள் இலங்கை பிரதிநிதிகளின் ஒருவராக இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 50 பொது மக்களின் நினைவேந்தல் நிகழ்வு
இந்திய ஆக்கிரமிப்பு படையினால் யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து கல்லூரியில் தஞ்சம் அடைந்திருந்த பொழுது இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 50 பொது மக்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து கல்லூரி வெளி வாசலில் இடம்பெற்றது.
இதனை கொக்குவில் படுகொலை நினைவேந்தல் குழு ஏற்பாடு செய்திருந்தது.
பொதுசுடர் ஏற்றபட்டு அகவணக்கம் செலுத்தி அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
1987 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் மற்றும் 22, 23,24ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை, கொக்குவில் பிரம்படி கோண்டாவில், கொக்குவில் இந்து கல்லூரி வளாகம் ஆகிய இடங்களில் இந்திய இராணுவம் பொதுமக்களை படுகொலை செய்திருந்தது.
கிளிநொச்சி இளைஞனை ஐந்து நாட்களாகக் காணவில்லை!
கிளிநொச்சியை சேர்ந்த இளைஞனை ஐந்து நாட்களாகக் காணவில்லை என காணாமல்போன இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் கிளிநொச்சி - அக்கராயன்குளம் பகுதியில் வசித்து வந்த 26 வயதுடைய அப்சரன் எனும் இளைஞனே கடந்த 19 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளார்.
வெளிநாடு செல்லவிருந்த கிளிநொச்சி இளைஞன் மாயம்; உறவினர்கள் கவலை | Kilinochchi Youth Missing About To Go Abroad
குறித்த இளைஞன் வெளிநாடு செல்லவிருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக அறியமுடிகின்றது.
இது தொடர்பில் கடந்த 21 ஆம் திகதி அக்கராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் உறவினர்கள் முறைப்பாடு அளித்துள்ளனர்.
இளைஞனை கண்டவர்கள் 0771861326 அல்லது 0774604937 என் தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனார்.
மியன்மாரில் சைபர் கிரைம் குற்றக் குழுவால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு இலங்கையர்கள் மீட்கப்பட்டு, தற்போது அந்த நாட்டு இராணுவப் படைகளின் பாதுகாப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை மியன்மாரில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதி செய்துள்ளது.
மீட்கப்பட்ட 06 இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்துக்கு அருகிலுள்ள மியன்மாரின் எல்லைப் பகுதியில் சைபர் கிரைம் நடவடிக்கைகளில் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்த குழுவிடம் சிக்கிக்கொண்ட இலங்கையர்களை விடுவிப்பதற்குத் தொடர்ச்சியான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்தப் பகுதியில் குறைந்தது 17 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தொழில் வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறியே அவர்கள், சுற்றுலா விசாவில் மியன்மாருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்ல உதவியதாக கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் உட்பட 4 சந்தேகநபர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரிகளும், பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகளும் முன்வைத்த வாதங்களை கருத்திற் கொண்டு இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இதேவேளை, கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிதாரி உட்பட ஏனைய சந்தேகநபர்களையும் அன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பூஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள துப்பாக்கிதாரி உட்பட ஏனைய சந்தேகநபர்கள் 'சூம்' தொழில்நுட்பத்தின் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
இலங்கை பெண் உத்தரபிரதேசத்தில் சடலமாக மீட்பு!
உத்தரபிரதேச மாநிலம் ஷ்ரவஸ்தியில் உள்ள ஒரு ஹோட்டலுக்குள் 71 வயது இலங்கை பெண் ஒருவர் இறந்து கிடந்ததாக நேற்று புதன்கிழமை (22.10.25) அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்த பெண் சுனில் சாந்தி டி சில்வாவின் மனைவி கோத்தாகொட என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இலங்கையைச் சேர்ந்த 46 சுற்றுலாப் பயணிகள் குழு மாநிலத்தில் உள்ள ஷ்ரவஸ்தியில் உள்ள புத்த மத தலத்தைப் பார்வையிட வந்திருந்தனர். கோத்தாகொட தனது அறையை விட்டு செவ்வாய்க்கிழமை(21), வெளியே வராததால், சுற்றுலாப் பயணிகள், ஹோட்டல் ஊழியர்களின் உதவியுடன் கதவைத் திறந்து, பெண்ணின் உடலைக் கண்டனர். இதைத் தொடர்ந்து, ஹோட்டல் ஊழியர்கள் மேலாளரை அழைத்தனர், அவர் சம்பவம் குறித்து காவற்துறையினருக்குத் தெரிவித்தார்.
தகவல் கிடைத்ததும், காவற்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததாக ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (SHO) லால் சாஹேப் சிங் தெரிவித்தார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.


