அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஈரானுக்கு எதிரான அடுத்த போர்!
ராணுவத் தாக்குதல்கள் சற்று குறைந்து, இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள சூழலில், இந்தப் போர் மீண்டும் உக்கிரமடையுமா அல்லது முடிவுக்கு வருமா?
ஈரானுக்கு எதிரான அடுத்த போர், போர்க்களத்தில் அல்லாமல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தொடங்கவுள்ளது
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர் இரண்டு மாதங்களைக் கடந்துள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற மிகப்பெரிய கேள்வி உலக அரங்கில் எழுந்துள்ளது. ராணுவத் தாக்குதல்கள் சற்று குறைந்து, இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள சூழலில், இந்தப் போர் மீண்டும் உக்கிரமடையுமா அல்லது முடிவுக்கு வருமா என்பதைத் தீர்மானிக்கும் மிக முக்கியக் கட்டத்தை அமெரிக்கா எட்டியுள்ளது.
60-நாள் கெடு: டிரம்ப் முன் உள்ள அரசியல் நெருக்கடி
அமெரிக்காவில் 1973-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட 'போர் அதிகாரங்கள் தீர்மானத்தின்' (War Powers Resolution) படி, நாடாளுமன்றத்தின் முறையான ஒப்புதல் இல்லாமல் அமெரிக்க அதிபர் 60 நாட்களுக்கு மேல் எந்தவொரு நாட்டிற்கும் எதிராகப் போரைத் தொடர முடியாது. படைகளைப் பாதுகாப்பாகத் திரும்பப் பெறுவதற்காக மட்டுமே கூடுதலாக 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். இந்த 60 நாள் கெடுவை அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் வெள்ளிக்கிழமையுடன் நெருங்குகிறார். எனவே, அவர் தனது அடுத்தகட்ட நிலைப்பாட்டை உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதற்காக அவர் முன் 4 முக்கியச் சாத்தியக்கூறுகள் உள்ளன.
1. நாடாளுமன்றத்தின் ஒப்புதலைக் கோருதல்
இது மிகவும் சரியான சட்டப்பூர்வமான வழி என்றாலும், இதில் டிரம்புக்கு அதிக ஆபத்து உள்ளது. தெளிவான வியூகம் ஏதுமின்றி இந்தப் போர் தொடங்கப்பட்டதாக எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், ஆளுங்கட்சியான குடியரசுக் கட்சியினரிலும் சிலர் இது குறித்து நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஒருவேளை நாடாளுமன்ற வாக்கெடுப்பில் டிரம்ப் தோல்வியடைந்தால், அது வெள்ளை மாளிகைக்குப் பெரும் அரசியல் பின்னடைவாக அமையும்.
2. படைகளைப் பகுதியளவு திரும்பப் பெறுதல்
சட்டச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக, ராணுவ நடவடிக்கைகளை டிரம்ப் கணிசமாகக் குறைத்துக் கொள்ளலாம். போர்க்கப்பல்களைத் திரும்பப் பெறுவது, வான்வழித் தாக்குதல்களைக் குறைப்பது அல்லது அமெரிக்க நலன்களைக் காக்கும் தற்காப்பு நடவடிக்கைகளில் மட்டும் கவனம் செலுத்துவது என முடிவெடுக்கலாம். இதன் மூலம், "போரில் வெற்றி பெற்றுவிட்டோம்" என்று மக்களிடம் அறிவித்துவிட்டு, நாடாளுமன்ற வாக்கெடுப்பு என்ற ஆபத்தான கட்டத்தைத் டிரம்ப் சுலபமாகக் கடந்துவிட முடியும்.
3. சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்திப் போரைத் தொடர்வது
அமெரிக்கப் படைகள் நேரடியாகத் தீவிரமான தரைவழிப் போரில் ஈடுபடவில்லை என்பதால், இதனை முழுமையான 'போர்' என்று சட்டப்படி கருத முடியாது என வாதிட்டு, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே டிரம்ப் தனது அதிரடித் தாக்குதல்களைத் தொடரலாம். கடந்த 2011-ஆம் ஆண்டில் லிபியாவிற்கு எதிரான தாக்குதலின்போது, முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் இதே வாதத்தை முன்வைத்தே போரைத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
4. சொந்தக் கட்சியினரே கைவிடும் அபாயம்
தற்போதைக்கு ஆளுங்கட்சியான குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் டிரம்புக்கு ஆதரவாகவே உள்ளனர். ஆனால் போர் நீண்டுகொண்டே சென்றாலோ, அமெரிக்கத் தரப்பில் உயிரிழப்புகள் அதிகரித்தாலோ அல்லது மக்களின் ஆதரவு குறைந்தாலோ அவர்கள் பின்வாங்கக்கூடும். "60 நாட்களுக்குப் பிறகு நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் போரைத் தொடர்ந்தால் ஆதரவளிக்க மாட்டேன்" என்று குடியரசுக் கட்சி உறுப்பினர் ஜான் கர்டிஸ் ஏற்கனவே எச்சரித்துள்ளார். இதுபோலப் பலரும் மாறினால் அது அமெரிக்க அரசியலில் பெரும் புயலைக் கிளப்பும்.
மொத்தத்தில், ஈரானுக்கு எதிரான அடுத்த கட்டப் போர் டெஹ்ரான் நகரிலோ அல்லது ஹார்முஸ் நீர்ச்சந்தியிலோ அல்ல... அமெரிக்க நாடாளுமன்றத்தின் தாழ்வாரங்களில்தான் அரங்கேறப் போகிறது!
சிவா சின்னப்பொடி


