பலதும் பத்தும்:- 26.05,2025 -சரிகமப மேடையில் ஈழத்து மகள்
நல்லூர் கந்தசுவாமி கோவில் யூலை மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

சரிகமப மேடையில் ஈழத்து மகள்!
சரிகமப மேடையில் தெரிவாகிய ஈழத்து நாதஸ்வரவித்துவானின் மகள்
இந்நியாவின் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரி கம பா நிகழ்ச்சியில் ஈழத்தின் பிரபல நாதஸ்வர வித்துவான்களில் ஒருவரான பாலமுருகனின் மகளான தரங்கினி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாதஸ்வர வித்துவான் பாலமுருகன் நாதஸ்வர வாசிப்பில் மட்டுமல்ல பாடல்களை பாடுவதிலும் கைதேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரைப்போலவே அவரது மகளும் பாடல் பாடுவதில் சிறந்தவர் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார்
நிலங்களை பாதுகாக்க வெற்றிலைக்கேணியில் சட்ட ஆலோசனை முகாம்!
கடந்த 2025.03.28 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி இல. 2430 இற்கமைய அரசாங்கத்தால் சுவீகரிக்கப்படவுள்ள நிலங்களை பாதுகாப்பதற்காக வெற்றிலைக்கேணியில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் தலமையில் சட்ட ஆலோசனை முகாம் இன்று (25) நடைபெற்றது.
இதில் 30 வரையான சட்டத்தரணிகளும், 15 சட்டப்பீட மாணவர்களும் இந்த இலவச சட்ட ஆலோசணை வழங்கும் செயற்பாட்டில் கலந்து கொண்டிருந்ததுடன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன், சயந்தன் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக தனிநபர் சட்டமூலம்!
மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக தனிநபர் சட்டமூலமொன்றை சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனால் குறித்த தனிநபர் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அத்துடன் குறித்த சட்டமூலத்தில் 2025ஆம் ஆண்டின் மாகாண சபைகள் தேர்தல் திருத்தச்சட்டம் என்று எடுத்துக்காட்டப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் 21ஆம் திகதியன்று வலுவிலிருந்த 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தின் ஏற்பாடுகள், 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்கச் சட்டத்தினால் அதற்குச் செய்யப்பட்ட திருத்தங்கள் எவ்வாறிருப்பினும் 2017 செப்டெம்பர் 22ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருகின்ற திகதி வரைக்குமான காலப்பகுதியின்போது செய்யப்பட்ட ஏதேனும் செயலுக்குப் பங்கமின்றி அத்தகைய செயல் 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்கச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு ஒவ்வாதனவாகவிராத அளவுக்கு இச்சட்டம் வலுவுக்கு வருகின்ற திகதியிலிருந்து பயனுறுவதாக நடைமுறைக்கு வருதல் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருட்களுக்கு 50% வரி
27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருட்களுக்கு 50% வரியை அமுல்படுத்துவதற்கு ஜூன் 1 ஆம் திகதி வரை முன்னதாக நிர்ணயித்த காலக்கெடுவை ஜூலை 9 ஆம் திகதி வரை நீட்டித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.
இது ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுக்கு தொலைபேசி அழைப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நல்லூர் கந்தசுவாமி கோவில் யூலை மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் யூலை மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 27 தினங்கள் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவத்தை முன்னிட்டு இவ்வாண்டிலிருந்து ஆலய மேற்கு வீதியில் அமைக்கப்படவுள்ள உற்சவகால பந்தலிற்கான நிர்மாண நிகழ்வானது , நல்லைக் கந்தன் மனவாளக்கோள தினமான நேற்று (24) இரவு நடைபெற்றுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் யூலை மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 27 தினங்கள் நடைபெறவுள்ளது.
நல்லூர் ஆலய மேற்கு வீதியில் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக நிகழ்ந்த ஆரம்ப வைபவத்தில் ஆலய அடியவர்கள், பக்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்களை புத்தளம் மற்றும் மன்னார் வழியாகவும் சிலாபம் மற்றும் காங்கேசன்துறை இடையேயும்; மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாகவும் பொத்துவில் வரையிலும் கடலுக்குச் செல்வதை மறு அறிவிப்பு வரும் வரை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
“FOUR I” கைத்தொழில் அமைச்சு மேற்கொள்ளும் திட்டங்கள்
இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தரளவுக் கைத்தொழிலாளர்களை முன்னேற்றுவதற்காக கைத்தொழில் அமைச்சு மேற்கொள்ளும் திட்டங்கள் தொடர்பாக மிகவும் மகிழ்ச்சி அடைவதாக ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் பொதுச் செயலாளர் கலாநிதி இந்திரா பிரதான சிங்கவிந்த ( Indra Pradhana Singawinta) தெரிவித்தார்.
அண்மையில் நாட்டிற்கு வருகை தந்த ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் பொதுச் செயலாளர் சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சியாளார்களை வலுப்படுத்தும் நோக்கில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சினால் செயற்படுத்தப்படும் “FOUR I” திட்டத்தின் கம்பஹா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னோடி திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாகக் கண்டறிவதற்காக கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
டெங்கு மற்றும் சிக்குன்குனியா!
நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா ஒரு சுகாதாரப் பிரச்சினையாக வளர்ந்து வருவதாக சுகாதார துணை அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
தற்போதைய தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு டெங்கு பாதிப்புகள் அதிகரிக்கக்கூடுமெனவும் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்
இதற்கிடையில், நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்துப் பற்றாக்குறை குறித்து துணை அமைச்சர் கூறுகையில், 180 வகையான மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாகக் கூறப்பட்டாலும், உண்மையில் மருத்துவமனைகளில் 45 வகையான மருந்துகள் மட்டுமே பற்றாக்குறையாக உள்ளதாக கூறினார்.