அரசாங்கம் அவசரகால சட்டத்தை தேவையற்ற விதத்தில் பயன்படுத்தவில்லை - அருண ஜயசேகர.
அவசரகாலச் சட்டத்தின் மூலம் நாட்டில் அடக்குமுறை! - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு.
அரசாங்கம் அவசரகால சட்டத்தை தேவையற்ற விதத்தில் பயன்படுத்தவில்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் ஓய்வுபெற்ற அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று கூடிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் மிகுந்த நாட்டையே நாம் பொறுப்பேற்றோம். இருப்பினும் நாட்டு மக்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கிலேயே நாம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம்.
அதற்கு சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும். தேசிய பாதுகாப்பு பாதிக்கப்பட்ட, வங்குரோத்து அடைந்த, நாட்டு மக்களின் வாழ்வாதாரம் வீழ்ச்சி அடைந்த நாட்டையே பொறுப்பேற்க வேண்டியிருந்தது.
அதேபோன்று டிட்வா சூறாவளி தாக்கம் மற்றும் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலையால் எம்முடைய நாட்டிற்கு ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்தி நாட்டு மக்களை முன்னோக்கிய பாதைக்கு இட்டுச்செல்லும் நோக்கிலேயே நாம் அவசரகால சட்டத்தை நீடித்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் ஓய்வுபெற்ற அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அவசரகாலச் சட்டத்தின் மூலம் நாட்டில் அடக்குமுறை!
அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டில் அடக்குமுறை நிலவுவதாக எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை எனவும், கடந்த மூன்று மாத காலப்பகுதியில் அவ்வாறு அடக்குமுறை இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட சம்பவத்தையாவது சுட்டிக்காட்டுமாறும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இன்று (06) பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.
அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்கான ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது, அரசாங்கத்தை விமர்சிப்பதற்கோ அல்லது போராட்டங்களை நடத்துவதற்கோ உள்ள ஜனநாயக உரிமையின் மீது எவ்விதத் தடைகளும் விதிக்கப்படவில்லை.
அடக்குமுறை என்பதை வெறும் சொல்லாக மாத்திரம் உச்சரிக்காது, கடந்த மூன்று மாதங்களில் அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகளின் கீழ் அநீதியான முறையில் கைது செய்யப்பட்ட அல்லது அடக்குமுறைக்கு உள்ளான நபர்கள் எவராவது இருப்பின் அவர்கள் பற்றிய தகவல்களைச் சமர்ப்பியுங்கள். சமூக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் வாயிலாக அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன, ஆயினும் அதற்கு எதிராக எவ்வித அடக்குமுறைகளையும் பிரயோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போதைய அனர்த்த நிலையின் பின்னர் மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டு வருவதற்கும் உட்கட்டமைப்பு வசதிகளை மீளக் கட்டியெழுப்புவதற்கும் அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகள் தேவைப்படுகின்றன. குறிப்பாக வீதிகள், பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றிப் பேணுவதற்கு இந்தச் சட்டப் பின்னணி தேவைப்படுகிறது.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட போக்குவரத்து கட்டமைப்பு (புகையிரதப் பாதைகள் உட்பட) மற்றும் பாடசாலைக் கட்டடங்களை மீண்டும் சீரமைக்கும்போது, அவற்றை முன்பு இருந்த நிலைக்கு மாத்திரம் கொண்டு வராமல், எதிர்கால அனர்த்தங்களைத் தாங்கக்கூடிய வகையில் விஞ்ஞான ரீதியான முறையின்கீழ் நவீனமயப்படுத்துவதற்கு முப்படையினரை ஈடுபடுத்த வேண்டியுள்ளது. இத்தகைய தேவைகளுக்காகவே நாம் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துகின்றோம்.


