வடக்கில் தமிழர்களின் காணியை கைப்பற்றி இராணுவம் அமைத்த விகாரை 'பதிவு செய்யப்படவில்லை'
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு தையிட்டி பிரதேசத்தில் திஸ்ஸ விகாரை பதிவு செய்யப்படவில்லை.
தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை வலுக்கட்டாயமாக கையகப்படுத்தி, இராணுவத்தின் ஆதரவுடன் வடக்கில் கட்டப்பட்ட ஒரு விகாரை இதுவரை பதிவு செய்யப்படவில்லை என புத்தசாசனம், மத விவகாரங்கள் மற்றும் கலை கலாசாரங்கள் அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
"யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு தையிட்டி பிரதேசத்தில் திஸ்ஸ விகாரை எனும் விகாரை ஒன்று உள்ளது. இந்த விகாரை பதிவு செய்யப்படவில்லை. இந்த விகாரையின் காணி தொடர்பான விடயங்கள் ஆராயப்பட வேண்டியுள்ளன."
புத்தசாசனம், மத விவகாரங்கள் மற்றும் கலை கலாசாரங்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி, கடந்த வார இறுதியில் நாடாளுமன்றத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) மூத்த தலைவர் எம்.பி. சிவஞானம் சிறீதரன் திஸ்ஸ விகாரை தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தினார்.
2023 முதல் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் விகாரைக்கு அருகில் விகாரை அமைக்கப்பட்டுள்ள தமது நிலங்களை விடுவிக்கக் கோரி போராட்டம் நடத்தி வரும் தமிழர்கள், திஸ்ஸ விகாரை கட்டுவதற்காக 14 தமிழ் குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 100 பரப்பு (6.2 ஏக்கர்) நிலத்தை இராணுவம் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலத்திற்கு உரிமை கோரி தமிழ் மக்கள் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருவதால், நீதி அமைச்சரும் இந்த விவகாரத்தில் தலையீடு செய்துள்ளதாக, புத்தசாசனம், மத விவகாரங்கள் மற்றும் கலை கலாசாரங்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி குறிப்பிடுகின்றார்.
"அதேபோல் ONUR அமைப்பு மற்றும் கௌரவ நீதி அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் உள்ளிட்டோர் யாழ்ப்பாணத்திற்கு சென்று நீண்ட தலையீட்டை செய்து, அதுத் தொடர்பிலான அறிக்கை என்னிடம் காணப்படுகிறது. ஆகவே இது தொடர்பிலான இந்த பிரச்சினை இடத்தை கைப்பற்றுவது மற்றும் வர்த்தமானி வெளியீடு உள்ளிட்ட இடத்தில் நிற்கிறது. அதனை எமது அமைச்சும் காணி அமைச்சும் ஒன்றாக செய்ய வேண்டும்."
விகாரை அமைக்கப்பட்ட நிலம் தொடர்பான பிரச்சினைக்குரிய சூழ்நிலையைத் தீர்க்க தற்போதைய அரசாங்கம் 'நேர்மையான தலையீட்டை' மேற்கொண்டு வருவதாகவும், ஆனால் அதற்கு உடனடி தீர்வை வழங்க அரசாங்கம் தவறிவிட்டது எனவும் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி நாடாளுமன்றத்தில் மேலும் தெரிவித்தார்.
"எனினும் இதுத் தொடர்பில் நாங்கள் எடுத்துள்ள நேர்மையான முயற்சியை பார்க்க வேண்டுமென நான் உங்களிடமும் இந்த நாடாளுமன்றத்திடமும் கேட்டுக்கொள்கின்றேன். வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் கூட இதுத் தொடர்பில் பேசப்படுகின்றன என்பதை நான் அறிவேன். இங்கு இருக்கும் அமைச்சர்கள், உறுப்பினர்கள் மிகத் தெளிவாக கருத்துக்களை முன்வைத்தார்கள். இந்த பிரச்சினையை தீர்க்க எமக்கு மிகவும் நேர்மையான நோக்கம் இருக்கிறது. அதற்குத் தேவையான நேர்மையான தலையீட்டை செய்துகொண்டிருக்கின்றோம். எனினும் உடனடியாக தீர்வு காணக்கூடிய நிலைமையில் இல்லை."
யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் வடக்குப் பகுதியில் பல பதிவு செய்யப்படாத திஸ்ஸ விகாரைகள் இருப்பதாகவும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் மேலும் வெளிப்படுத்தினார்.
"நான் மிக நீண்டகாலமாக விடயங்களை சேகரித்துள்ளேன். யாழ்ப்பாணம் வலி. வடக்கில் திஸ்ஸ விகாரை பல காணப்படுகின்றன. சில விகாரைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சில விகாரைகள் பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்வதிலேயே இதில் குழப்பம் காணப்படுகின்றது. தீர்வு காணப்பட வேண்டும். நியமிக்கப்பட்டுள்ள குழுக்களின் தலையீட்டினை மேற்கொண்டுள்ளோம்."
"கி.பி 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றைக் கொண்ட இந்த விகாரை, தேவநம்பியதிஸ்ஸ மன்னரால் கட்டப்பட்டது என வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது," என இராணுவம் தெரிவிக்கின்றது.
“காங்கேசன்துறையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸ விகாரையில் புனரமைக்கப்பட்ட ஸ்தூபி வைக்கும் பணி 27 ஏப்ரல் 2023 அன்று இடம்பெற்றது." என இலங்கை இராணுவம் ஏப்ரல் 29ஆம் திகதி தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.


