புதிய பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தை மீளப் பெறுமாறு வலியுறுத்தல்!
“ஜே.ஆர். ஜயவர்தன இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததன் மூலம் 6 மாத காலத்துக்குள், ஆயுதப் போராட்டத்தைத் தவிர, ஆயுதங்களை ஏந்துவதைத் தவிர அரசுக்கு எதிராகப் போராடுவதற்கு தமக்கு வேறு வழியில்லை என்ற கருத்தை விதைப்பதில் வெற்றி பெற்றார்.”
அரசாங்கத்தின் புதிய பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தை மீளப் பெறுமாறு வலியுறுத்தல்
ஆயுதப் போராட்டத்தைத் தவிர வேறு போராட்டப் பாதை இல்லை என்ற சித்தாந்தம் வடக்கு மற்றும் தெற்கு இளைஞர்களிடையே உருவாவதற்கு இந்நாட்டின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமே அடித்தளமாக அமைந்ததாக தென்னிலங்கையின் ஊடகவியலாளரும், செயற்பாட்டாளருமான ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“ஜே.ஆர். ஜயவர்தன இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததன் மூலம் 6 மாத காலத்துக்குள், அதேபோன்று 4 ஆண்டுகளில் தமிழ் சமூகத்தினதும், தெற்கில் உள்ள சிங்கள சமூகத்தின் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட பல்வேறு குழுக்களினதும், தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம் உள்ளிட்ட குழுக்களினதும் மனங்களில் மிகவும் வலுவான ஆயுதப் போராட்டத்தைத் தவிர, ஆயுதங்களை ஏந்துவதைத் தவிர இந்த அரசுக்கு எதிராகப் போராடுவதற்கு தமக்கு வேறு வழியில்லை என்ற கருத்தை விதைப்பதில் வெற்றி பெற்றார்.”
பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதற்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம் புதிதாக வரைபு செய்துள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாக்கும் சட்டமூலத்துக்கு’ எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக, கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தரிந்து உடுவரகெதர தெரிவித்துள்ளார்.
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் சந்தர்ப்பத்தில் ஒரு கட்டாய ஆயுதப் போராட்டம் பற்றிய சிந்தனைப் போக்கு வடக்கில் கடுமையாகப் பரவியிருக்கவில்லை எனவும் அவர் இந்த ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.
“சரியாகச் சொல்வதானால், 1979 இல் இந்த 48 ஆம் இலக்கச் சட்டம் கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற விவாதத்தில்கூட யாழ்ப்பாணத்தில் அப்போது இருந்தது நூறுக்கும் குறைவான மிகவும் சிறிய ஆயுதமேந்திய குழுவொன்று மாத்திரமே என மிகவும் தெளிவாகக் கூறப்பட்டது. அந்த நேரத்தில் இந்நாட்டினுள் ஒரு தனிநாட்டை உருவாக்கும் சிந்தனைப்போக்கு ஓரளவுக்கு வலுவாக இருந்தது என்று கூற முடியும். ஆனால் நிச்சயமாக ஆயுதப் போராட்டம் பற்றிய சிந்தனைப்போக்கு இருக்கவில்லை. ஒரு பாரிய அளவில் பரவிய கருத்தாக ஆயுதப் போராட்டம் பற்றிய சிந்தனைப்போக்கு வடக்கில் இருக்கவில்லை.”
46 ஆண்டுகளுக்கு முன் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்காகக் கூறி கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தினால் கடந்த 4 தசாப்த காலப்பகுதியில் ஏற்பட்ட விளைவு தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு (PTA) மாற்றாக ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு (ATA) எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், உயர் நீதிமன்ற நீதிபதி வினவிய விதம் குறித்தும் மக்கள் தரிந்து உடுவரகெதர ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்களுக்குத் தெரிவித்திருந்தார்.
“இதை நான் சொல்லவில்லை, இதற்கு முன்னர் ATA தொடர்பாக— அல்லது இதற்கு முன்னர் ரணில் கொண்டுவந்த சட்டமூலம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, உயர் நீதிமன்ற நீதிபதி நவாஸ் கேட்டார். ‘நீங்கள் இந்தச் சட்டத்தை 6 மாதங்களுக்கு என்று சொல்லித்தானே கொண்டுவந்தீர்கள்? கொண்டுவந்து புல் வீரதுங்க என்பவரை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பினீர்கள் அல்லவா? 6 மாதங்களில் முடித்துவிடுவதாகக் கூறித்தானே அனுப்பினீர்கள்? அதன் பின்னர் 40 வருடங்களாகப் பயங்கரவாதம் இருந்தது அல்லவா?’ என அவர் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கேட்டாராம்."
பயங்கரவாத தடைச் சட்டத்தில் 'பயங்கரவாதம்' வரைவிலக்கணப் படுத்தப்பட்ட விதமும் ஆயுதப் போராட்டத்தைத் தவிர வேறு போராட்டப் பாதை இல்லை என்ற கருத்து இளைய தலைமுறையின் மனதில் விதைக்கப்படுவதற்கு ஒரு காரணமாக அமைந்தது என தரிந்து குறிப்பிட்டார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க அநுர குமார திசாநாயக்கவுக்கு ஜனாதிபதி ஆவதற்கான மக்கள் ஆணையை வழங்கிய மக்களிடம் புதிய அரசாங்கத்தினால் புதிதாக வரைபு செய்யப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு’ எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் தரிந்து வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
“குறிப்பாக தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து, இந்த அரசாங்கம் குறித்து உத்தரவாதம் அளித்து, இதுவே சிறந்தது எனக் கூறிய மக்கள் உடனடியாக இதற்கு எதிராக நடவடிக்கை எடுங்கள். அனுபவத்துடன் வந்து பேசுமாறு கோரிக்கை விடுக்கிறோம். நாம் நிச்சயமாகப் போராடுவோம். அதேபோல் எம்மால் இயன்றவரை போராடி இந்தச் சட்டத்தைத் தோற்கடிக்க எம்மால் முடியும் என நாம் உறுதியளிக்கிறோம்.”
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்தினால் புதிதாக வரைபு செய்யப்பட்டு, http://moj.gov.lk இணையதளத்தில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ தொடர்பில் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை பொதுமக்கள் தமது கருத்துகளை முன்வைக்க முடியும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணாயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன் அவற்றை மிகவும் அக்கறையுடன் ஆராய்ந்து அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
“எதிர்வரும் ஆண்டின் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவதற்கும், இதில் மேலதிக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் அவை எவை என்பது குறித்த யோசனைகளைப் பெறுவதற்கும் இந்தக் காலப்பகுதி திறந்திருக்கும் என நான் மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன். புதிய கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கி, இவற்றை மிகவும் அக்கறையுடன் ஆராய்ந்து அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நான் உங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.”
90 பக்கங்களைக் கொண்ட இந்தச் சட்டமூலம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளைக் கோருவதற்கு ஆரம்பத்தில் ஒரு மாத காலம் மாத்திரமே ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், சமூக ஊடகங்கள் வழியாக எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து அந்தக் காலப்பகுதி நீடிக்கப்பட்டுள்ளது.
இது ஓர் இறுதியான சட்டம் அல்லவென்றும், பொதுமக்களின் கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் திருத்த முன்மொழிவுகளைப் பெறுவதற்கான ஒரு வரைவாகவே மக்கள் முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் காணொளி ஒன்றின் ஊடாக மேலும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
- சண்.பார்த்தீபன்


