‘பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம்!
23 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

‘பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு’, பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் சார்பில் முன்வைக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபனைகளை நிராகரித்தது.
உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேன தலைமையில் மற்றும் நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி. இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஈ.டபிள்யூ. எம் லலித் ஏக்கநாயக்க ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட விசாரணைக்குழு (19) பாராளுமன்றத்தில் கூடியதுடன், பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோன் முதன்முறையாக விசாரணைக்குழு முன்னிலையில் ஆஜராகியிருந்தார்.
இதன்போது, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீதான 23 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதனையடுத்து பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எஸ். வீரவிக்ரமவினால் மூன்று அடிப்படை ஆட்சேபனைகளும் 2 கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
அந்த வாதங்களை அடுத்து சட்டமா அதிபர் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விசாரணைக்குழுவில் பங்குபற்றிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் (ஜனாதிபதி சட்டத்தரணி) திலீப பீரிஸ் மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரஜித பெரேரா ஆகியோர் அது தொடர்பில் தமது ஆட்சேபனையைப் பதிவு செய்தனர்.
அனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேன தலைமையிலான விசாரணைக்குழுவினால் பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் சார்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து அடிப்படை ஆட்சேபனைகளும் நிராகரிக்கப்பட்டன. அதற்கமைய விசாரணை நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
எதிர்கால விசாரணை நடவடிக்கைகளுக்காக விசாரணைக்குழுவை எதிர்வரும் 28 ஆம் திகதி பி.ப. 2 மணிக்கு பாராளுமன்ற குழு அறை 8 இல் கூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.