“போருக்குப் பின் வன்னி கடைசி நிலையில்” புள்ளிவிபரங்கள் காட்டின!
போருக்குப் பிறகான காலத்தில் வன்னி மாவட்டம், குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டம் பல்வேறு தரப்படுத்தல்களிலும் கடைசி நிலையில்
தமிழீழ விடுதலைப்புலிகளின் நிழலரசு இருந்த காலத்தில் மக்கள் அனைத்து விதத்திலும் தன்னிறைவு பெற்றிருந்ததாகவும், எனவே போருக்கு முன்னரான காலத்தில் சமச்சீரற்ற வள அணுகல் தொடர்பில் தாம் குரல் எழுப்பவேண்டிய தேவையும் ஏற்படவில்லையென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
தெற்கில் உள்ளோர் காணும் அதே உலகத்தை அதே உலகியல் அனுபவத்துக்கான வாய்ப்பை வடக்கில் உள்ளோரும் பெறுவது தான் சமத்துவமெனத் தெரிவித்த நாட்டின் தென்பகுதிக்கு மேற்கொள்ளும் ஒதுக்கீடுகளைப்போல வடக்கிற்கும் அதே அளவிலான சமனான ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
வரவுசெலவுத்திட்டம்
ஆனால் போருக்குப் பிறகான காலத்தில் வன்னி மாவட்டம், குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டம் பல்வேறு தரப்படுத்தல்களிலும் கடைசி நிலையிலும் கடைசிக்கு அண்மைய நிலையிலும் விளங்கியதை இலங்கை அரசின் புள்ளிவிபரங்களிலேயே பார்க்கமுடிவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றில் 11.11.2025இன்று இடம்பெற்ற 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைக்கான விபத்து மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவு கட்டுமானம், புத்தளம் மன்னார் மாற்றுவழிக்கான இயலுமை ஆய்வு, விவசாயத்துறை சார்ந்து வவுனியா, மன்னார் சிறு பற்றுநில விவசாயிகளுக்கான வலுவூட்டல், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு விவசாய உணவு உற்பத்தியாளர்களுக்கான வலுவூட்டல், முல்லைத்தீவு விவசாய உற்பத்திப் பொருள்களுக்கான சந்தை உட்கட்டமைப்பை மேம்படுத்தல் உள்ளிட்ட குறித்துக் கூறப்பட்ட வன்னி மாவட்டத்திற்குள்ளான நிதி ஒதுக்கீட்டுக்கு வன்னி மாவட்டத்தைச் சார்பாக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இவ்வாண்டில் தொடங்கப்பட்ட வெட்டுவாய்க்கால் பாலக் கட்டுமானத்துக்கான 2026ஆம் ஆண்டின் தொடர் நிதி ஒதுக்கீட்டுக்கும் முல்லைத்தீவு மக்கள் சார்பான மனமார்ந்த நன்றி. மேலும் பேரவைத் தலைவர் அவர்களே! இந்தத் தீவில் உள்ள அனைவருக்கும் சம அளவான வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்துவதே சமத்துவம் என எண்ணுகிறோம். தெற்கில் உள்ளோர் காணும் அதே உலகத்தை/அதே உலகியல் அனுபவத்துக்கான வாய்ப்பை வடக்கில் உள்ளோரும் பெறுவது தான் சமத்துவம். போருக்கு முன்னரான காலத்தில் சமச்சீரற்ற வள அணுகல் தொடர்பில் நாங்கள் குரலெழுப்பவில்லை. குரல் எழுப்பவேண்டிய தேவையும் எங்களுக்கு ஏற்படவில்லை.
போருக்குப் பின்னரான வன்னி
அப்போதிருந்த எங்களின் நிழல் அரசு அனைவர்க்குமான வளப்பகிர்வை, தற்சார்பு வாழ்வியலை, போதை அறவே அற்ற, அறம் நிரம்பிய வாழ்வை சான்றாக்கி இருந்தது.
போருக்குப் பிறகான காலத்தில் வன்னி மாவட்டம், குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டம் பல்வேறு தரப்படுத்தல்களிலும் கடைசி நிலையிலும் கடைசிக்கு அண்மைய நிலையிலும் விளங்கியதை இலங்கை அரசின் புள்ளிவிபரங்களே காட்டின.


